உ.பி. ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த போலீஸார் உட்பட 326 அதிகாரிகள் சிக்கினர். இங்குள்ள முராதாபாத் மற்றும் ஷாஜாஹாபூர் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே ஓடும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் நடந்த அதிரடி சோதனையில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் வசூலானது.
டெல்லியில் இருந்து கிளம்பி உ.பி.யின் ஷாஜாஹாபாத் மற்றும் முராதாபாத் ரயில் நிலையங்களை கடந்து ரயில்கள் குவாஹாட்டி எக்ஸ்பிரஸ், கிசான் எக்ஸ்பிரஸ், முகல்சராய் எக்ஸ்பிரஸ் மற்றும் சியல்தா எக்ஸ்பிரஸ் ஆகியன பல்வேறு இடங்களுக்கு செல்லும்.
இந்த ரயில்களில் ஷாஜாஹாபாத் மற்றும் முராதாபாத் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே டெல்லி அதிகாரிகளின் சோதனைக் குழு திடீர் சோதனை நடத்தியது. இதில், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 14 உ.பி. போலீஸார், வங்கி மேலாளர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், தாசில்தார்கள் உட்பட 326 பேர் சிக்கினர். இவர்களிடம் ரூபாய் ஒரு லட்சம் அபராதமாக வசூல் செய்யப்பட்டது.
இதில், சிக்கியவர்கள் தம் செய்த தவறை எண்ணி வருந்துவதை விடுத்து சோதனை செய்த அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து மிரட்டி உள்ளனர். சிலர், தமக்கு நெருக்கமானவர்கள் மற்றும் உறவினர்கள் ரயில்வே துறை அதிகாரிகள் பணியில் இருப்பதாகக் கூறி தப்ப முயன்றுள்ளனர்.
இன்னும் சிலர் தமக்கு மத்திய அமைச்சர்களின் நெருக்கம் இருப்பதாகவும் கூறி மிரட்டியுள்ளனர். எனினும், அவர்கள் மிரட்டலுக்கு பயப்படாத சோதனை அதிகாரிகள் அனைவரும் உடனடியாக கைது செய்யப்படுவர் என மிரட்டியுள்ளனர். இதனால், வேறு வழியின்றி மன்னிப்பு கேட்டதுடன் மற்ற பயணிகள் முன்னிலையில் அவமானப்படாமல் இருக்க வேண்டி அபராதம் செலுத்தி உள்ளனர்.
டெல்லிக்கு மிக அருகாமையில் உள்ள உ.பி. ரயில் நிலையங்களில் இருந்து பணியின் நிமித்தமாக அன்றாடம் பயணம் செய்யும் பயணிகள் அதிகம். வழக்கமாக மாத சலுகைக்கான டிக்கெட்டுகள் பெற்று பயணம் செய்யும் பவர்களில் பலரும் அதைக் கூட வாங்காததுடன், எக்ஸ்பிரஸ் ரயில்களின் குளிர்சாதனப் பெட்டிகளிலும் பயணம் செய்து விடுவது உண்டு. இதற்காக, அப்பெட்டிகளின் டிக்கெட் பரிசோதகர்களை ‘கவனித்து’ விடுவதும் வாடிக்கையாக உள்ளது. இதுபோன்றவர்களிடம் தான், இன்று திடீர் சோதனை நடந்ததாகக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment