கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று நிறைவேறியுள்ள கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர் ஊதியம், படிகள், ஓய்வூதிய மசோதாவின் மூலம் கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவருக்கு ஊதியம், படிகள், தொகுதிப் பயணப்படி எல்லாமும் சேர்த்து மாதம் ரூ.1.40 லட்சம் கிடைக்க வகை செய்கிறது. மேலும், அவர்களது ஓய்வூதியம் ரூ.25,000-லிருந்து ரூ.40,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஓராண்டு உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்ற விதியையும் நீக்கியுள்ளது.
கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. அஜய் சிங் (முன்னாள் முதல்வர் தரம்சிங்கின் புதல்வர்) இந்த ஊதியம், படிகள் உயர்வு குறித்து கருத்துத் தெரிவிக்கையில், என்னைப் பார்க்க என் அலுவலகத்துக்கு
தினமும் 200 பேர் வருகிறார்கள். இவர்களுக்குத் தேநீர், பிஸ்கட் வழங்கவே எனக்கு நாளொன்றுக்கு ரூ.1,500 செலவாகிறது என்று நியாயப்படுத்தியுள்ளார். ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் அவர் அப்பதவியை வகிக்கும் காலத்தில் இந்தப் படிகளைப் பெறுவதை ஒரு வகையில் நியாயப்படுத்தினாலும், இவர்களுக்கான ஓய்வூதியத்தை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. இந்த ஓய்வூதியம் 58 வயதுக்குப் பிறகு தொடங்குவதில்லை. அவர் முன்னாள் எம்.எல்.ஏ. ஆனவுடனே தொடங்கிவிடும். அதுமட்டுமல்ல, அவர் 5 ஆண்டுகளுக்கு மேலாகப் பதவி வகிக்கும் ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.1,000 ஓய்வூதியத்தில் கூடுதலாகும் என்கிறது சட்டம்.
தமிழ்நாட்டிலும் இதே நிலைதான். தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மாதம் ரூ.12,000 ஓய்வூதியம், அது நீங்கலாக ஆண்டுக்கு ரூ.40,000 மருத்துவப்படி என்பதுடன் அரசு மருத்துவமனைகளில் "அ' அல்லது "ஆ' பிரிவுகளில் இலவச மருத்துவமும் பெறலாம். அரசுப் பேருந்துகள் அனைத்திலும் அவர் ஒரு துணையுடன் இலவசமாகப் பயணம் செய்யலாம். கர்நாடகத்தைப் போலவே தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களும் பதவியேற்றிருந்தாலே போதும் ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர் ஆகிவிடுகின்றனர்.
அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கான மத்திய அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு அனைத்துத் தரப்பிலும் எழும் அதிருப்தி மற்றும் எதிர்ப்புக்குக் காரணம், இத்திட்டத்தில் அரசின் பங்களிப்புத் தொகை கிடையாது என்பதுதான்.
அதாவது, ஊழியரின் பணத்தைப் பிடித்தம் செய்து அதையே அவர்களுக்கு ஓய்வூதியமாகத் தருகிறார்கள் என்பதுதான் மிகப்பெரும் ஆட்சேபணையாக அரசு ஊழியர்கள் கூறி வருகின்றனர். ஆனால், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மட்டும் ஊதியத்தில், படியில் எந்தப் பிடித்தமும் இல்லை. ஓய்வூதியம் உண்டு. உறுப்பினராக உறுதிமொழி ஏற்றிருந்தாலே போதும், மக்கள் வரிப்பணத்தில் ஓய்வூதியம் உண்டு.
இதே நிலைமைதான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்! இவர்கள் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவி வகிக்கும் போது அனுபவிக்கும் பயன்கள் ஒருபுறம் இருக்க, இவர்களுக்கும் ஓய்வூதியம் உண்டு. அவர்களும் பதவி வகித்தாலே போதும் ஓய்வூதியம் பெறத் தகுதி பெற்றுவிடுகிறார்கள்.
இன்றைய நிலையில் உள்ளாட்சிப் பதவிகளில் உள்ள மேயர், மாமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியமோ படியோ கிடையாது.
கூட்டப் படி ரூ.800 மட்டும்தான். அதுவும் மாதத்தில் இரண்டு முறை மட்டுமே. அதற்கும் கூடுதலாக கூட்டம் நடத்தப்பட்டால் அந்தக் கூட்டங்களுக்குப் படி கிடையாது. நகர்மன்றத் தலைவர், நகர்மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சித் தலைவர், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் யாருக்குமே
ஊதியம், ஓய்வூதியம் கிடையாது. இவர்களில் ஒன்றியக் குழுத் தலைவருக்கு ரூ.750-ம், ஒன்றியக் குழு உறுப்பினருக்கு ரூ.400-ம் கெüரவ ஊதியமாக அளிக்கப்படுகிறது. கிராம ஊராட்சித் தலைவருக்கு கெளரவ ஊதியமாக ரூ.1,000 வழங்கப்படுகிறது.
ஆனால், அவர்களால் தங்களுக்குத் தாங்களே ஊதியத்தை நிர்ணயித்துக் கொள்ளவோ, உயர்த்திக் கொள்ளவோ, ஓய்வூதியம் அறிவித்துக் கொள்ளவோ முடியாது. சட்டப்பேரவைதான் அவர்களது சலுகைகளை நிர்ணயிக்கும்.
விடுதலை கிடைத்த காலகட்டத்தில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களில் பலர் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பொது வாழ்க்கைக்கு தங்களை முற்றிலுமாக அர்ப்பணித்துக் கொண்டவர்கள். பதவி வகித்த காலத்தில் பணம் சம்பாதிக்கத் தெரியாத நேர்மையான அரசியல்வாதிகளாக இருந்தார்கள். அவர்களுக்குத் தரப்பட்ட சொற்பமான ஓய்வூதியம், சலுகைகள் பேருதவியாக அமைந்தன.
இன்றைய உறுப்பினர்கள் அப்படியா? வசதி படைத்தவர்கள் எரிவாயு உருளைக்கான மானியத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் விடுக்கும் நிலையில், பல கோடி ரூபாயை சொத்துகளாக காட்டியிருக்கும் இவர்கள், தங்களுடைய ஊதியம், படியை விட்டுக்கொடுக்க முன்வராவிட்டாலும், ஓய்வூதியத்தையாவது விட்டுக்கொடுக்கலாமே!
சட்டம் இயற்றுபவர்களின் இந்தச் சட்டாம்பிள்ளைத்தனத்தைச் செம்மறியாட்டுக் கூட்டம் போல நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் வரை அவர்கள் இதுவும் செய்வார்கள், இனியும் செய்வார்கள், இன்னமும் செய்வார்கள்! "நமக்கு நாமே' என்கிற திட்டத்தை முறையாகக் கடைப்பிடித்துச் செய்பவர்கள் நமது மதிப்பிற்குரிய மாண்புமிகு சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் போலும்!
No comments:
Post a Comment