Tuesday, March 15, 2016

எம்ஜிஆர் 100 | 14 - எம்.ஜி.ஆரும் என்.டி.ஆரும்!

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
Return to frontpage
M.G.R. மீது மிகவும் மதிப்பு கொண்டவர் என்.டி.ராமராவ். இருவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இரண்டு பேரும் தங்கள் மொழி படவுலகில் சூப்பர் ஸ்டார்களாக விளங்கியவர்கள். இருவரும் அரசியலில் ஈடுபட்டு தனிக் கட்சி தொடங்கி முதல் அமைச்சரானவர்கள். எம்.ஜி.ஆர் - என்.டி.ஆர் என்று அழைக்கும்போது ஒலி கூட ஏறத்தாழ ஒரே மாதிரி இருக்கும்.
எம்.ஜி.ஆர் மீது என்.டி.ராமராவ் வைத்திருந்த மதிப்புக்கும் மரியாதைக்கும் உதாரணமாக ஒரு சம்பவம். எம்.ஜி.ஆரை வைத்து ‘குமரிக் கோட்டம்’, ‘உழைக்கும் கரங்கள்’ படங்களை எடுத்தவர் கோவை செழியன். அதிமுகவில் இருந்தவர். அவரை முதலாளி என்று செல்லமாக அழைப்பார் எம்.ஜி.ஆர்.
கோவை செழியன் தெலுங்கிலும் படங்கள் தயாரித்துள்ளார். தெலுங்கில் என்.டி.ராமராவை வைத்து படம் தயாரிக்க விரும்பினார். ராமராவ் அப்போது மிகவும் பிஸியாக இருந்த நேரம். அவருடன் கோவை செழியனுக்கு நெருக்கமும் கிடையாது. தான் தயாரிக்க இருக்கும் படத்துக்கு திடீரென்று கேட்டால் ராமராவ் ‘கால்ஷீட்’ கொடுப்பாரா என்று கோவை செழியனுக்கு சந்தேகம்.
எம்.ஜி.ஆரை சந்தித்தார். என்.டி.ராமராவை வைத்து படம் தயாரிக்க விரும்பும் தனது எண் ணத்தையும் அதற்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். உடனே, ராமராவுடன் தொடர்பு கொண்டு எம்.ஜி.ஆர். பேசினார். படத் தயாரிப்பு சம்பந்தமாக ராமராவைச் சென்று சந்திக்கும்படி செழியனிடம் கூறினார்.
அதன்படி, ஐதராபாத் சென்று ராம ராவை சந்தித்தார் செழியன். ‘எம்.ஜி.ஆர். சொல்லி வந்திருக்கிறேன். உங்களை வைத்து படமெடுக்க...’ என்று செழியன் சொல்லி முடிக்கும் முன்பே, சிரித்துக் கொண்டே அவரை கையமர்த்திவிட்டு என்.டி.ராமராவ் கேட்ட கேள்வி, ‘‘ஷூட்டிங்கை எப்ப வெச்சுக்கலாம்?’’
எம்.ஜி.ஆருக்கு என்.டி.ராமராவ் கொடுத்த மதிப்புக்கும் மரியாதைக்கும் இது சான்று.
என்.டி.ராமராவ் தனிக் கட்சி தொடங்கி முதல்வராகும் முன்பே தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பிடித்து முதல்வ ராகிவிட்டார். அவரது பாணியில் தானும் தனிக் கட்சி தொடங்க முடிவு செய்தார் ராமராவ். தனக்கு முன்னோடியாக விளங்கும் எம்.ஜி.ஆரிடம் ஆலோசனையும் ஆசியும் கேட்பதற் காக சென்னை வந்து எம்.ஜி.ஆரை சந்தித்தார்.
அவருக்கு வாழ்த்து தெரிவித்த எம்.ஜி.ஆர். கேட்ட கேள்வி ‘‘கட்சிக்கு என்ன பெயர் வைக்கப் போறீங்க?’’
‘‘தெலுங்கு ராஜ்யம்’’... ராமராவின் பதில்.
எம்.ஜி.ஆர். சொன்னார். ‘‘தெலுங்கு தேசம் என்று பெயர் சூட்டுங்கள். பொருத்தமாக இருக்கும்.’’
அதை ராமராவ் ஏற்றுக்கொண்டார்.
‘‘எம்.ஜி.ஆர் எனக்கு வழிகாட்டி. அண்ணனைப் போன்றவர் அவரைப் பின்பற்றியே அரசியலுக்கு வந்தேன்’’ என்று அறிவித்த ராமராவ், தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கினார். தமிழகத்தில் தேர் தல் பிரசாரங்களில் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்யும் பாணியை முதலில் ஏற்படுத்தியவர் எம்.ஜி.ஆர்.தான். அவரைப் போலவே ஆந்திரா விலும் திறந்த வேனில் சென்று சூறாவளி பிரசாரம் செய்த ராமராவ், மகத்தான வெற்றி பெற்று ஆட்சியையும் பிடித்தார்.
எம்.ஜி.ஆரிடம் ஆசி பெறுவதற்காக மீண்டும் சென்னை வந்து அவரை சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து பெற்றார். எம்.ஜி.ஆரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, ராமராவுக்கும் அவருடன் வந்தவர்களுக்கும் தனது வீட்டில் தடபுடல் விருந்தளித்தார்.
எம்.ஜி.ஆர். எதையுமே நுணுக்கமாகவும் தீர்க்க தரிசனத்தோடும் சிந்திக்கக் கூடியவர். விருந்தின்போதே சென்னை நகரின் தண்ணீர் பிரச்சினையையும் ஆந்திராவில் கிருஷ்ணா நதியில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட் டால் பிரச்சினையைத் தீர்க்கலாம் என்றும் ராம ராவிடம் கூறினார். எம்.ஜி.ஆர். சொன்னால் ராமராவிடம் மறுப்பேது? அதன் தொடர்ச்சி யாக உருவானதுதான் சென்னைக்கு தண்ணீர் வழங்கும் தெலுங்கு கங்கைத் திட்டம். 1983-ம் ஆண்டு ஜனவரியில் ஆந்திர முதல்வராக ராமராவ் பதவியேற்றார். அடுத்த 4 மாதங் களில் தெலுங்கு கங்கை திட்டம் தொடக்க விழா நடந்தது.
1983-ம் ஆண்டு மே 25-ம் தேதி சென்னையில் நடந்த பிரம்மாண்டமான தெலுங்கு கங்கை திட்ட தொடக்க விழாவில் பிரதமர் இந்திரா காந்தி கலந்து கொண்டார். திட்டத்தை செயல் படுத்த தமிழக அரசின் பங்கில் முதல் தவணைக்கான காசோலையை இந்திரா காந்தி மூலம் ராமராவிடம் கொடுக்கச் செய்தார் எம்.ஜி.ஆர்.
1987-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மறைந்தபோது என்.டி.ராமராவ் சென்னை வந்து கலங்கிய கண்களுடன் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள்...
‘எம்.ஜி.ஆர். மறைவின் மூலம் எனது குருநாதரை இழந்துவிட்டேன்’.
எம்.ஜி.ஆர். எதையுமே நுணுக்கமாகவும் தீர்க்க தரிசனத்தோடும் சிந்திக்கக் கூடியவர்.
தமிழில் எம்.ஜி.ஆர். நடித்த பல ரீமேக் படங்கள் தெலுங்கில் என்.டி.ராமராவ் நடித்தவை. ராமராவ் நடித்த ‘ராமுடு பீமுடு’ படம்தான் தமிழில் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ ஆனது. 7 சென்டர்களில் வெள்ளி விழா கொண்டாடி புதிய சாதனை படைத்தது. எம்.ஜி.ஆர். திரையுலகை விட்டு விலகும் வரை ‘எங்க வீட்டுப் பிள்ளை’யின் சாதனை முறியடிக்கப்படவில்லை.
படம் உதவி: ஞானம்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024