மத்திய அரசு ஊழியர்கள் இன்று 'ஸ்டிரைக்'
கடந்த, 2016ம் ஆண்டில், ஏழாவது ஊதியக்குழு அறிவிப்பை எதிர்த்து, மத்திய அரசு ஊழியர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்த மத்திய அரசு, கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என உறுதியளித்தது. அவற்றை நடைமுறைப்படுத்த, பல்வேறு கமிட்டிகளை அமைத்தது. எனினும், அந்த கமிட்டிகள், எந்தவித அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.
அதனால், ஏமாற்றம் அடைந்துள்ள மத்திய அரசு ஊழியர்கள், இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இப்போராட்டம் குறித்து, மத்திய அரசு ஊழியர்கள் மகா
சம்மேளன தேசிய பொதுச் செயலர் எம்.கிருஷ்ணன் கூறியதாவது:
கடந்த ஆண்டில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி மற்றும் சுரேஷ் பிரபு ஆகியோர், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை. இதனால், 33 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 34 லட்சம் ஓய்வூதியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதனால் தான், வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதில், நாடு முழுவதும், 13 லட்சம் ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு கூறினார்.
தபால் பட்டுவாடா பாதிக்கும்!
இன்றைய வேலை நிறுத்தத்தில் ரயில்வே
ஊழியர்கள் பங்கேற்கவில்லை. ஆனால்
வருமான வரி, மத்திய கலால், சுங்கம், தபால்
உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்கள்
பங்கேற்கின்றனர். எனவே தபால் பட்டுவாடா
பல இடங்களில் பாதிக்கும். தமிழகத்தில்
1.25 லட்சம் ஊழியர்கள் போராட்டத்தில்
பங்கேற்கின்றனர். சென்னையில், சாஸ்திரி பவன் அருகிலும், மற்ற மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment