Thursday, March 16, 2017

தினசரி 3 மணிநேரம் டிவி பார்க்கும் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் வரும்’


தினந்தோறும் 3 மணிநேரம் அல்லது அதற்கும் மேலாக டிவி பார்த்துக் கொண்டேயிருக்கும் குழந்தைகளுக்கு, சர்க்கரை நோய் பாதிப்பு எளிதில் வரும் என, தெரியவந்துள்ளது.

இன்றைய யுகத்தில், டிவி இன்றி, நமது அன்றாட வாழ்வு முற்றுப் பெறுவதில்லை. சிறியவர்கள் தொடங்கி, முதியவர்கள் வரை அனைவருமே, டிவி பெட்டியை தங்களது குடும்ப உறுப்பினராகவே கருதும் அளவுக்கு, அதனுடனான நாம் பின்னிப் பிணைந்துவிட்டோம்.

குறிப்பாக, 10 ஆண்டுகளுக்கு முன்பாக, இருந்ததைவிட, இன்றைக்கு 1 வயது குழந்தைகள் தொடங்கி, அனைவருமே டிவி முன்பாகவே தவம் கிடப்பது மிக சகஜமான காட்சியாக உள்ளது. ஓடி விளையாட வேண்டிய பருவத்தில், குழந்தைகள் வீட்டுக்குள் அடைந்தபடி, டிவி.,யில் வரும் கார்ட்டூன் படங்களை பார்ப்பதுதான் இன்றைக்கு பெரும்பாலான நகரங்களில் அரங்கேறுகிறது.

ஆனால், இப்படி மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்தபடி, டிவி பார்ப்பதால், ஏற்படும் விளைவுகள் பற்றி, லண்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு ஒன்று விரிவான ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், பெரியவர்கள், குழந்தைகள் என அனைவருமே, 3 மணிநேரத்திற்கும் மேலாக, தொடர்ச்சியாக, டிவி பார்ப்பதால், பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர் என, உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிறியவர்கள் எனும்போது, 3 மணிநேரத்திற்கு மேல் தினசரி டிவி பார்க்கும் பழக்கம் இருந்தால், அவர்களின் ஹார்மோன் சுரப்பு குறைகிறது. இன்சுலின் சுரப்பே அதிகளவு பாதிக்கப்படுகிறது. இதனால், அவர்களுக்கு, உடற்பருமன், எடை அதிகரிப்பு மற்றும் சர்க்கரை நோய் பாதிப்பு விரைவிலேயே வந்துவிடுவதாக, அந்த ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன.

ஓடி விளையாட வேண்டிய பருவத்தில், சோம்பேறித்தனம் அடைவதால், நமது உடல் உறுப்புகளின் இயக்கமும் பாதிக்கப்படுகிறது. இதுவே, அத்தகைய இடர்பாடுகளை குழந்தைகளிடம் அதிகளவில் கொண்டுவருவதாகவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024