Monday, March 20, 2017

தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், 1967 வரை காங்கிரஸ் கட்சிதான் தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்தது.

மார்ச் 20, 03:00 AM

தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், 1967 வரை காங்கிரஸ் கட்சிதான் தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்தது. காங்கிரஸ் கட்சியில் ஊழல் இல்லை, அன்றைய அமைச்சர்கள் எல்லாம் மிகஎளிமையான வாழ்க்கையை நடத்தி வந்தனர். அணைகள் கட்டி, கல்விக்கூடங்களைத் திறந்து, தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், சாலைவசதி, போக்குவரத்து வசதி என்று எத்தனையோ வளர்ச்சித்திட்டங்களை அவர்கள் நிறைவேற்றினாலும், காங்கிரஸ் கட்சி தோற்றதன் காரணம், மக்களின் உயிர்மூச்சான நாடித்துடிப்பு அதாவது அரிசி பிரச்சினை, மொழிப்பிரச்சினையில் சரியான கையாளுதலை மேற்கொள்ளாததுதான். இந்தி திணிப்பு போராட்டம் மாணவர்களைத் தட்டி எழுப்பியது. கடுமையாக நிலவிய அரிசிப் பஞ்சம் மற்ற முன்னேற்றங்களை எல்லாம் மக்களை மறக்க வைத்து, காங்கிரஸ் மீது கோபம் கொள்ள வைத்தது. அறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க. இந்த இரண்டு பிரச்சினைகளையும் தங்களுடைய ஆயுதங்களாக எடுத்துக் கொண்டு, தேர்தல் நேரத்தில் பிரசாரத்தை முடுக்கிவிட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘‘ஒரு ரூபாய்க்கு 3 படி லட்சியம், 1 படி நிச்சயம்’’ என்று தேர்தல் முழக்கங்களை வெளியிட்டவுடன், மக்களின் ஒட்டுமொத்த ஆதரவும் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி, அப்படியே தி.மு.க. பக்கம் சென்றது. யாரும் எதிர்பார்க்காதவகையில் தி.மு.க. வெற்றிபெற்றது.

அண்ணாவும் 6.3.1967–ல் ஆட்சிக்கு வந்தவுடன், முதல் வேலையாக அரிசி பஞ்சத்தைத் தடுக்க ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ‘‘தமிழகத்தின் எல்லைப்பகுதிகளில் அரிசி கடத்தலைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேரள எல்லையில் 24 மணிநேரமும் தீவிரக் கண்காணிப்புக்கு உத்தரவிட்டுள்ளேன். தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு அரிசி கடத்தலை முழுமையாக தடுக்கும் வகையில், எல்லைப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கேரளா மட்டுமல்லாமல், மைசூர், ஆந்திரா மாநிலங்களுக்குச் செல்லும் தமிழக எல்லையிலும் அரிசி கடத்தலைத் தடுக்க கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்’’ என்று கூறினார்.

அதேபோன்ற ஒரு நடவடிக்கையாக மணல்கொள்ளையை தடுக்க தமிழக அரசு உடனடியாக எடுக்கவேண்டும் என்ற கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் 45–க்கும் மேற்பட்ட ஆறுகள் பாய்கின்றன. அனைத்தும் வளம்கொழிக்கும் ஆறுகள். அங்குள்ள மணலைப் பார்த்தால், கடற்கரை மணலைவிட அதிகளவில் இருக்கிறது. ஏனெனில், அங்கு ஆறுகளில் ஒரு கரண்டி மணலைக்கூட எடுக்கமுடியாத அளவுக்கு கடுமையான சட்டம் அமலில் இருக்கிறது.

இவ்வளவுக்கும் கேரளாவில், கட்டிடத் தொழில் ஜரூராக நடந்து கொண்டுதான் இருக்கிறது. அங்குள்ள ஒரு குக்கிராமத்துக்கு சென்றால்கூட புதிது புதிதாக வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்கு எல்லாம் மணல் எங்கே இருந்து வருகிறது என்று கேட்டால், தமிழ்நாட்டிலிருந்துதான் வருகிறது. அந்த மணலை வைத்துத்தான் கட்டிடம் கட்டுகிறோம் என்கிறார்கள். அங்கு மணல் விற்கும் இடங்களுக்குச் சென்றால், இது தாமிரபரணி ஆற்று மணல், பாலாற்று மணல், வைகை ஆற்றுமணல் என்பதுபோல நமது ஆற்று மணல் பெயர்கள் போர்டுகளில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு வழிகள் மூலம் ஆயிரக்கணக்கான லாரிகளில் மணல் எடுத்துச் செல்லப்படுகிறது. ஏற்கனவே 2013–ம்ஆண்டு அக்டோபர் மாதத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.மணிக்குமார், தமிழக எல்லையைத்தாண்டி மணல் செல்லக்கூடாது என்று தடைவிதித்து ஒரு உத்தரவை பிறப்பித்தார். 

அந்த உத்தரவு அப்படியே காற்றில் கலந்த கீதமாகிவிட்டது. இப்போது திராவிட இயக்கத்தின் 50 ஆண்டுகாலம் கொண்டாடப்படும்வேளையில், அண்ணா எப்படி தமிழக அரிசி தமிழ்நாடு எல்லையைத்தாண்டி கேரளா உள்பட அண்டை மாநிலங்களுக்குச் செல்லாமல் தடை விதித்தாரோ அதேபோன்று, இப்போது மணலுக்கும் தடைவிதித்து கடுமையான உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இது இன்றைய சூழ்நிலையில் உடனடியாக செய்யவேண்டிய அவசர அவசியமாகும்.

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...