Thursday, March 23, 2017

'ஆன்லைனில்' தகவல் அறியும் உரிமைச்சட்ட மனு : தமிழகத்தில் அமலாவது எப்போது

மதுரை: மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், தகவல் அறியும் உரிமைச்சட்ட மனுக்களை 'ஆன்லைனில்' அனுப்பும் நடைமுறை அமலாகியிருக்கும் நிலையில், தமிழகத்திலும் அந்நடைமுறை கொண்டுவரப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அரசு நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தும் விதமாக, 2005ல் தகவல் அறியும் உரிமைச்சட்டம் கொண்டு வரப்பட்டது.அதன்படி, பொதுமக்கள் தேவையான தகவல்களை பெற, சம்பந்தப்பட்ட அரசு துறைகளுக்கு நீதிமன்ற வில்லை, கேட்பு வரைவோலை (டி.டி.,) போன்ற முறைகளில் பணம் செலுத்தி, தபால் மூலம் மனுக்களை அனுப்ப வேண்டும்.தபால் முறை அதிக வேலைப்பாடு கொண்டது என்பதால், அதனை எளிமையாக்க மத்திய அரசு மற்றும் மாநிலங்கள் தரப்பில், 'ஆன்லைனில்' தகவல் அறியும் உரிமைச்சட்ட மனுக்களை அனுப்பும் முறையை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டது.அதன்படி, முதன் முதலாக மத்திய அரசு துறைகள் இம்முறையை அமல்படுத்தின. தற்போது 1,847 துறைகள், அலுவலகங்களுக்கு பொதுமக்கள் 'ஆன்லைனில்' மனுக்களை அனுப்பி, தகவல்களை பெறலாம்

.மகாராஷ்டிர அரசும் 'ஆன்லைன்' முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் சில மாநிலங்கள், இதற்கான முதற்கட்ட வேலையை துவக்கி விட்டன. இது குறித்து, மாநில அரசுகளுக்கு அவ்வப்போது மத்திய அரசு நினைவூட்டி வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்ட மனுக்களை 'ஆன்லைனில்' அனுப்பும் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இங்கு லோக் ஆயுக்தா சட்டம், சேவை பெறும் உரிமைச்சட்டம் போன்றவற்றை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படாத நிலையில், தகவல் அறியும் உரிமைச்சட்டம் மட்டுமே ஊழல்களை வெளிக்கொண்டு வரவும், சேவைகளை பெறவும் ஆயுதமாக பயன்பட்டு வருகிறது.எனவே மற்ற மாநிலங்களை போல் 'ஆன்லைன்' வசதியை ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024