பாம்புகளின் அன்பன் பூனம் சந்த்... பாதியில் மரித்த பரிதாபம்!
கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த பூனம் சந்த் ஜெயின் சமூகத்தைச் சார்ந்தவர். 40 வயதுகளைக் கடந்து கொண்டிருக்கும் ஒரு நடுத்தர வயது இளைஞர். புதுவை தமிழ்நாடு எல்லை அருகே பாவூர் என்ற ஊரில் துணி வர்த்தகம் செய்ய புலம் பெயர்ந்து வந்த அவரது பெற்றோரோடு இவரது வாழ்க்கையும் அந்தப் பகுதியிலேயே தொடங்கியது. மனைவி, குழந்தைகள் என குடும்பத்தோடு வாழ்ந்தாலும்கூட விலங்கினங்களின் மீதான இவரது அக்கறை முக்கியமானது. நாய்கள் வளர்ப்பது, இனப்பெருக்கம் செய்து விற்பது என்பதையே பகுதி நேரத் தொழிலாக மாற்றிக்கொள்ளும் அளவுக்கு மாற்றிவிட்டது, அது வருவாய்க்கான வழி வகை என்றாலும் குடியிருப்புப் பகுதிகளில் உலவும் பாம்புகளைப் பிடித்துக் கொண்டு காப்புக் காடுகளில் விடுவது என்பதை முழு நேர சேவையாக மாற்றிக்கொண்டுவிட்டார்.
கடலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் பாம்புகள் குடியிருப்புப் பகுதிகள், அலுவலகங்களுக்குள் நுழைந்து விட்டாலும் உடனே இவரை எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம்.
உடனடியாகச் சென்று அதைப்பிடித்து வந்து துணிப்பைகளில் கட்டி காலி அறை ஒன்றில் வைத்துக்கொள்வார். பின்னர், ஏதாவது வாகனம் கிடைக்கும்போது அவற்றைக் கொண்டுபோய் காடுகளில் விட்டுவிடுவதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தார்.
மாவட்ட ஆட்சியர்கள் ஒன்றிரண்டு பேர் இவருக்கு வாகனங்கள் கொடுத்து உதவுவது, ஊக்கப்படுத்துவது என்று இருந்தனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு வரும் பாம்புகள் தொடர்பான அழைப்புகளுக்குக்கூட முகம் சுளிக்காமல் சென்று பாம்புகளைப் பிடித்துகொண்டு பாதுகாப்பது பூனத்தின் ஒரு கிரேசி சேவையாகவே இருந்தது.
இதற்காக அவர் பணம் பெற்றுக் கொள்வது கிடையாது. இவரது பாம்புப் பிடிச் சேவையின்போது கட்டுவிரியன் ஒருமுறையும், நாகங்கள் இரண்டு முறையும் கடித்துள்ளன. எனினும், காப்பாற்றப்பட்ட நிலையில் அதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் தொடர்ந்து பாம்புகளைப் பிடித்து காடுகளில் விடும் பணியைச் செய்து வந்தார்.
இத்தகைய சூழலில்தான் கடந்த புதன் கிழமை வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தவர், மயக்கம் வருவதாகக் கூறியபடியே சரிந்தார். உயிர் பிரிந்து விட்டது. மாரடைப்பே இறப்புக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
ஜெயின் சமூகத்தைச் சார்ந்த சைவ உணவை மட்டுமே உண்ணும் வழக்கமுடைய, 45 வயதைக்கூட இன்னமும் கடக்காத பூனத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டது என்பதுதான் அவரைப் பற்றி அறிந்தோருக்கு அதிர்ச்சி அளித்த செய்தி.
பூனத்தின் சேவையில் எந்தவித குறையும் கிடையாது, ஆனால் அவர் முறையான பாதுகாப்பின்றி பாம்புகளைக் கையாண்டதால் பாம்புகள் கடித்த நிலையில் அவரது உடலில் விஷத்தின் தன்மை இருந்திருக்க வேண்டும் என்றும் உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்தபோது சிறிது சிறிதாக அந்த விஷம் ரத்தத்தை உறைய வைத்து மாரடைப்பை உருவாக்கியிருக்கவேண்டும் என்றும் அச்சம் கொள்கின்றனர் அவரது நண்பர்கள்.
பூனம், பாம்புகளை மட்டுமல்ல, ஆமைகள், மாடுகளையும் பாதுகாத்து வந்தார். தானே, வர்தா புயல்களின்போது சரிந்து விழுந்த மரங்களில் வாழ்ந்த பறவைகள் உள்பட பல உயிரினங்களைக் காப்பாற்றி உள்ளார்.
பூனத்தைப் போன்றவர்கள் இல்லை எனில், பாம்புகளை மிருகக்காட்சி சாலையில்தான் பார்க்கவேண்டும் என்பதுதான் நிதர்சனம். ஆனால், அதே சமயம் பாம்புகளைப் பாதுகாக்கும் பூனம் போன்ற இளைஞர்களைப் பாதுகாக்கவேண்டிய கடமை அரசுக்கும், வனத்துறைக்கும் மட்டுமல்ல சமூகத்திற்கும் உண்டு.
No comments:
Post a Comment