இன்சுலினுக்கு மாற்றாக பி.சி.ஜி தடுப்பூசி! சர்க்கரை நோயாளிகளுக்கு விடிவு காலமா?
VIKATAN
இன்சுலின் எடுத்துக்கொள்ளும் சர்க்கரை நோயாளிகள், இனி பி.சி.ஜி தடுப்பூசி போட்டுக்கொண்டால் நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்ற நல்ல தகவல் ஒன்று பரவி வருகிறது. அது குறித்து மேலும் தகவல்கள் திரட்ட ஆரம்பித்தோம்.
சர்க்கரை நோய் குறித்த ஆய்வுகளை அமெரிக்க சர்க்கரைநோய் சங்கம் (American Diabetes Association) தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த சங்கத்தின் 75-வது அறிவியல் மாநாட்டில் ஒரு முடிவு வெளியிடப்பட்டது. அதாவது, வாழ்நாள் முழுவதும் இன்சுலினுடன் போராடும் டைப்-1 சர்க்கரை நோயாளிகளுக்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதிநிலைக்கு வந்துவிட்டதாக அறிவித்துள்ளது. அந்த தடுப்பூசி, ஏற்கெனவே கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக மருத்துவத் துறையில் இருந்து வரும் பி.சி.ஜி தடுப்பூசி என்றும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளுக்குப் போடப்படும் பி.சி.ஜி தடுப்பூசி, இதுவரை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகப் (Food and Drug Administration) பட்டியலில்கூட இருந்ததில்லை. காரணம், வளர்ந்துவிட்ட வல்லரசு நாடுகளில் காசநோய் வருவதில்லை. ஆனால், இன்றைக்கு அதே அமெரிக்கா, அடுத்த கட்டமாக டைப்-1 சர்க்கரை நோயாளிகள் 150 பேரிடம் பி.சி.ஜி தடுப்பூசி ஆய்வு மேற்கொள்ளப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்ததிலிருந்தே வருங்காலச் சந்ததியினருக்கு இன்சுலினுக்குப் பதிலாக நல்ல மாற்று உருவாகியுள்ளது என்பது தெளிவு.
டாக்டர் ஆனந்த் மோசஸ், சர்க்கரைநோய் மருத்துவர், சென்னை இது குறித்து மேலும் விவரிக்கிறார்....
டைப் 1 சர்க்கரை நோய்:
டைப் 1 சர்க்கரைநோய், இந்த நோயின் மற்றொரு பெயரே ஜூவினைல் டயபெட்டிக்ஸ் (Juvenile diabetes) அல்லது இன்சுலின் சார்ந்த சர்க்கரை நோய் என்பதுதான். பொதுவாக 20 வயதுக்குட்பட்ட இளம்பருவத்தினரிடம் இன்சுலின் முழுமையாக இல்லாததால் ஏற்படும் ஒரு பாதிப்பு இது. டைப்-2 சர்க்கரை நோயைப் போன்று வாழ்க்கைமுறை மாறுபாடுகளாலோ அல்லது மரபியல்ரீதியாகவோ வருவதில்லை. இந்த நோயாளிகளிலும் ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவும் இன்சுலினைச் சுரக்கும் செல்களான கணையத்திலுள்ள பீட்டா செல்கள், நோய் எதிர்ப்பு மண்டலத்திலிருந்து உருவாகும் `டி' செல்களால் முழுமையாக அழிக்கப்பட்டுவிடுகின்றன. இதனால் இன்சுலின் சுரப்பும் முழுமையாக நின்று, ரத்தத்திலுள்ள குளூக்கோஸ் மூலக்கூறுகளின் வளர்சிதை மாற்றமும் தடைபட்டு ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் உயர்ந்துவிடுகிறது.
இந்தியா முதலிடம்
சர்க்கரை நோயாளிகளின் பட்டியலில் 6 கோடியே 20 லட்சம் நோயாளிகள் எண்ணிக்கையுடன் முதலிடம் வகிக்கும் இந்தியாவில் டைப்-1 சர்க்கரை நோயைப் பொறுத்தவரை சற்று ஆறுதலாகிக்கொள்ளலாம். அதாவது, கண்டறியப்படும் சர்க்கரை நோயாளிகளில் பத்தில் ஒருவருக்குத்தான் இங்கே டைப்-1 சர்க்கரை நோய் இருக்கிறது. ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் பல மில்லியன்களைத் தொடுகிறது இந்த டைப்-1 சர்க்கரைநோய். இதனால்தான் இத்தனை நாட்கள் பி.சி.ஜி தடுப்பூசி என்பதையே உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தில் சேர்க்காத அமெரிக்கா, தற்போது அதே தடுப்பூசியை ஆராய்ச்சி செய்து இறுதிநிலைக்கும் வந்துள்ளது.
பி.சி.ஜி செயல்பாடு!
பி.சி.ஜி தடுப்பூசி... `பேசில்லஸ் கால்மெட்டி க்யூரின்’ (Bacillus Calmette Guerin) என்பதன் சுருக்கமே பி.சி.ஜி. குழந்தைக்கு முதன்முதலில் போடப்படும் இந்தத் தடுப்பூசி, காசநோயைத் தடுப்பதற்காக மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. சிறுநீர்ப்பை புற்றுநோயைக்கூட குணப்படுத்த, பரவலாக பரிந்துரைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. டைப்-1 சர்க்கரைநோயைப் பொறுத்தவரை டி.என்.எஃப் (Tumour Necrosis Factor) என்று சொல்லக்கூடிய கட்டி நசிவுக் காரணியை அதிகமாக சுரக்கச் செய்து, அதன்மூலம் நோய் எதிர்ப்பு மண்டலத்திலிருந்து உருவாகும் 'டி' செல்களிடமிருந்து பீட்டா செல்களை அழியவிடாமல் பாதுகாக்கிறது.
முற்றிலும் தடுக்கப்படுமா?
`பி.சி.ஜி தடுப்பூசியால் டைப்-1 சர்க்கரைநோய் முற்றிலும் தடுக்கப்படுமா?’ எனக் கேட்டால் கண்டிப்பாக இல்லை. பொதுவாக தடுப்பூசி என்றதும் நாம் நினைப்பது நோய் வராமல் தடுத்து நிறுத்திவிடும் என்பதே. ஆனால் டைப்-1 சர்க்கரைநோயில் இது சற்றே மாறுபடுகிறது. டைப்-1 சர்க்கரைநோயானது ஒரு தனி மனிதனின் சுய நோய்க் காப்புத் தடை மண்டலத்தால் ஏற்படக்கூடிய நோயாக இருப்பதால், யார் யாருக்கு, எப்போது வரும் என்பதை எல்லாம் முன்கூட்டியே கண்டறிய முடியாது. எனவே, டி.பி நோய்க்குத் தடுப்பூசி போடுவதுபோல், பி.சி.ஜி தடுப்பூசியை இன்னும் சற்று முன்கூட்டியே போட்டுக்கொண்டால் சர்க்கரைநோயைத் தடுக்க முடியும் என்பதெல்லாம் கிடையாது. ஆனால், இன்சுலின் சுரப்பு முற்றிலுமாக நின்று ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகும்போது, டைப் 1 சர்க்கரைநோய் என்பது உறுதிசெய்யப்பட்டுவிடும். உறுதி செய்யப்பட்ட ஆரம்பநிலையிலேயே பி.சி.ஜி தடுப்பூசியை பூஸ்டர் டோஸில் போட்டுக்கொண்டால், மீதியுள்ள பீட்டா செல்கள் அழிவது தடுக்கப்படுவதுடன், இன்சுலின் சுரப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம். இதனால் நாளொன்றுக்கு 50 யூனிட் இன்சுலின் எடுத்துக்கொள்ளும் நோயாளிகளுக்கு அது 20 யூனிட்டாகக் குறையலாம். நோய் மற்றும் நோயாளியின் தன்மையைப் பொறுத்து இன்சுலின் பயன்பாடு முற்றிலும்கூட தவிர்க்கப்படலாம்.
பி.சி.ஜி தடுப்பூசியால் பாதிப்பா?
100 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள ஒரு தடுப்பூசி என்பதால், இதுகுறித்த பயம் தேவையில்லை. ஆனால், நோய் முற்றிய நிலையில் இந்தத் தடுப்பூசி கண்டிப்பாகப் பயன்படாது. அதேபோன்று சர்க்கரைநோய் வராமல் கட்டுப்படுத்துகிறேன் என தடுப்பூசியை பூஸ்டர் டோஸில் போட்டுக்கொள்ளக் கூடாது. இது உடலின் சர்க்கரை அளவை அறியாமலேயே இன்சுலின் ஊசியை நீங்களே போட்டுக்கொள்வதற்குச் சமம்!
- க.தனலட்சுமி
No comments:
Post a Comment