மகிழ்ச்சியை எங்கே தேடுவது? #MorningMotivation
கூகுளில் நாம் எதையாவது தேட ஒரு வார்த்தை தட்டினால் கீழே ஒரு சஜஷன் லிஸ்ட் நீளும். அதன்படி 'மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?' (How to be happy) என்று நாம் கேள்வியை முடிக்கும் முன்பாகவே, மகிழ்ச்சி தொடர்பான பல தேடல்களைக் காணலாம். எப்படியெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கத் தேடுகின்றனர் இவர்கள்?
எப்போதுமே..
எப்போதுமே! உறியடி படத்தில் வரும் மாணவர்கள் போல, எப்பவும் ஜாலியா இருக்கணும் சார். என்ற உயர்ந்த கொள்கை கொண்டவர்கள் இவர்கள். யு கய்ஸ் டோண்ட் ஒரி... நாங்க எல்லாருமே உங்க கட்சிதான்!
தனியா..
தனியா.., சமையலுக்கு பயன்படுத்தும் தனியா இல்லங்க ஜி. ‘தனிமையிலே இனிமை காண முடியுமா?’ என்ற பாடலின் டெக்ஸ்ட் வெர்ஷன்தான் இந்த கேள்வி. பெரும்பாலும் பிரேக்கப் ஆன காதலர்கள்தான் இத்தகைய கேள்வியைக் கேட்பார்கள் என்பதால், அவர்கள் மனநிலையை நம்மால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். என்னதான் இப்படியெல்லாம் அறிவாளித்தனமாக கேள்வியெல்லாம் கேட்டாலும், கடைசியில் இன்னொரு காதலன்-காதலி பின்னால் மறுபடியும் போய், மறுபடியும் வந்து இதே கேள்வியையே கூகுளைக் கேட்டு டார்ச்சர் பண்ணும் ஆபத்தான ஆட்கள் இவர்கள். இவர்களிடம் எப்போதுமே ஜாக்கிரதையாக இருப்பது நல்லது ஜி!
வாழ்க்கையில்..
வாழ்க்கையில்.., என்னமோ இவர்களுக்கு மட்டும்தான் கஷ்டம் இருப்பது போலவும், மற்றவர்கள் எல்லாம் மெகா சைஸ் சந்தோசத்தை அனுபவிப்பது போலவும் எண்ணிக் கொண்டு சோகத்தோடு கூகுளிடம் கேள்வி கேட்கும் கூட்டம் இது. இவர்கள் தான், தட் வாழ்வே மாயம் கேங். எப்போ பார்த்தாலும் தலையை தொங்கப் போட்டுக்கொண்டு சோகமே உருவாக அலைவார்கள். ஒரே செமஸ்டர்ல அஞ்சு அரியர் வச்சவங்கள கூட தேத்திடலாம். ஆனால், இவங்கள தேத்தறது, இம்பாஸிபில் ஜி!
கணவருடன்..
கேள்வியைப் பார்த்த உடனே உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். இந்த காலத்து மாடர்ன் கேர்ள்ஸ் மற்றும் வெளிநாட்டு பெண்களின் மனம் தான், இந்த கேள்வி தோன்றிய இடம். கல்யாணத்துக்கு முன்பு வரைக்கும் மட்டுமே, இந்த கேள்வி அவர்களுக்கு வரும் என்று சொல்லப்படுவதால், இந்த கேள்வி நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டிருப்பது ஒன்றும் ஆச்சர்யமில்லை. ஆனாலும், இந்த இடத்தில் 'மனைவியுடன் சந்தோசமாக இருப்பது எப்படி?' என்ற கேள்வி வராததை வைத்தே, ஆண்களின் மூத்தோர் சொல் மதிக்கும் குணத்தை அறிந்துகொள்ளலாம் மக்களே!
தினந்தோறும்..
இந்தக் கேள்வியைக் கூகுளிடம் கேட்பவர்கள், வாழ்க்கையில் தினம் தினம் தீபாவளி கொண்டாட விரும்புகிறார்கள் என்றதொரு அர்த்தம் பொருந்தும். இந்த கேள்விக்கு கிடைக்கும் பதிலைக் கொண்டு சந்தோசமாக இருப்பதைக் காட்டிலும், அந்த அட்வைஸ்களை அடுத்தவர்களுக்கு அள்ளி இறைப்பதிலேயே கண்ணாக இருப்பார்கள். அதன் மூலம், இவர்கள் தினந்தோறும் சந்தோசமாக இருப்பார்கள் மக்களே!
இருப்பதைக் கொண்டு..
'இருக்கறத வச்சி சிறப்பா வாழணும்' என்ற மொழியை உலகுக்கு சொன்ன முன்னோர்களின் பின்னோர்கள் தான், இந்த கேள்விக்குச் சொந்தக்காரர்கள். 'இல்லாத பலாக்காய்க்கு இருக்குற கலாக்காய் மேல்' என்று இவங்க மூளை சுவத்துல முட்டிக்காத குறையா சொல்லும். ஆனால், இவர்கள் மனசு பக்கத்து வீட்டுக்காரன் பைக் வாங்கினாலே, பல்ஸ் ஏத்தி விட்டுடும். ஏறுன பல்ஸ், இந்தக் கேள்விக்கு கிடைக்கும் பதில்கள் மூலம் இறங்குமான்றது உங்களுக்கே தெரியும் மக்களே!
கேள்விகளின் மறுபக்கம்..
என்னதான் இந்தக் கேள்விகள் ஒரு பக்கம் நமக்கு வேடிக்கையாக தெரிந்தாலும், மறுபுறம் இந்தக் கேள்விகளை இயந்திரத்திடம் கேட்கும் மனிதமனங்கள் அதிகரித்து வரும் ஆபத்தையும் நாம் உணர வேண்டும். இந்த கேள்விகளை கூகுளிடம் கேட்பவர்கள் யாரோ அல்ல நம் நட்பு வட்டத்தில் இருப்பவர்களும் தான். அவ்வளவு ஏன்.., அது நானாகக்கூட இருக்கலாம். தன் மன எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள தோழமை இல்லாததும், மனநல மருத்துவர்களை நாட நம்மை தடுக்கும் தயக்கமுமே இந்தக் கேள்வி எழக் காரணங்களாக பார்க்கப்படுகிறது.
இந்தத் தயக்கத்தை உடைத்து கூகுளிடம் தகவல்கள் தான் தேட முடியும், மகிழ்ச்சி அல்ல என்பதை நாம் உணர வேண்டும். நிறைய நண்பர்களுடன் சேர்ந்து பழக வேண்டும். அந்த இயல்புதான், மனநலம் சார்ந்த எந்தக் கேள்விகளையும் தகர்த்தெரிந்துவிடும். அதனால், மகிழ்ச்சியையும், துக்கத்தையும் கூகுளிடம் தேட வேண்டாம். நம்மைச் சுற்றியிலும், நமக்குள்ளும் தேடுங்கள். அதுதான் நிஜம். அன்றாடம் நிஜமுடன் வாழ்வோம்!
No comments:
Post a Comment