சீமைக் கருவேல் அகற்றம்: ஏன் இந்த வேகம்?
By நமது நிருபர் | Published on : 20th April 2017 05:44 PM |
சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை முன்பைவிடவும் உரத்துக் கிளம்பி இருக்கிறது. நீதிமன்றங்களும் மாதத்துக்கு ஒரு தீர்ப்பை மீண்டும் மீண்டும் கடுமையான அறிவுறுத்தல்களுடன் வெளியிட்டு வருகின்றன.
கடந்த 3 மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றுவதில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் நிகழ்ந்திருக்கின்றன. பரபரப்புக்கேற்ற வேகம் இல்லையென்பதும் உண்மையே!
மதுரையைச் சுற்றியுள்ள 13 மாவட்டங்களில் நீதிபதிகள் மேற்பார்வையில் அகற்றும் பணிகள் நடைபெற்றுள்ளன. பிரத்யேகமாக "வழக்குரைஞர் ஆணையர்' நியமிக்கப்பட்டு, அகற்றும் பணிகள் மேற்பார்வையிடப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களுக்கும் இதேபோன்ற சுற்றறிக்கை அரசிடமிருந்து அனுப்பி வைக்கப்பட்டு, நீதிபதிகளுடன் கருவேல மரங்களை அகற்றும் பணிகளைப் பார்வையிடும் படங்களும் வெளிவந்திருக்கின்றன.
இந்த நடவடிக்கைகளில் பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. இவற்றையும் கவனத்தில் கொண்டு தொடர் நடவடிக்கைகள் திட்டமிடப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோருகின்றனர்.
வறட்சியைத் தாங்கி வளரும் சீமைக் கருவேல மரத்தை "வேரோடு பிடுங்கும்' பணிகள் பல இடங்களில் நடைபெறவில்லை என்கிறார்கள் விவசாயிகள். பல இடங்களில் மேலாக வெட்டிவிட்டு- வேரை எடுப்பதில்லை, இதில் எவ்விதப் பயனும் இல்லை என்கிறார் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஏ. சின்னசாமி.
மேலும், பல்லாண்டுகளாகப் பரவிக் கிடக்கும் சீமைக் கருவேல விதைகளை மீண்டும் முளைக்காமல் எப்படிக் கட்டுப்படுத்துவது? என்பது குறித்து எந்தப் பார்வையும் இல்லாமல் இருக்கிறோம். இதற்கும் சரியான தீர்வைக் காண வேண்டும் என்கிறார் சின்னசாமி.
காலி மனைகளில் வளர்ந்துள்ளவற்றை அகற்றும்போது, அந்த இடத்தின் சொந்தக்காரரிடம் அதற்கான செலவுத் தொகை வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பையும் பொதுமக்கள் விரும்பவில்லை. எதிர்ப்பைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது.
பல்வேறு பணிகளுக்கு மத்தியில் திடீர் திடீரென "நீதிமன்ற உத்தரவு' என்ற ஒற்றை வரியைச் சொல்லி வேலை வாங்க முற்படுவதால், கடுமையான வேலைப்பளு அதிகரிப்பதாகவும் வருவாய்த் துறையினர் குற்றம்சாட்டுகின்றனர். "இதற்கான பிரத்யேக நிதி எதையும் உருவாக்காமல் உத்தரவுகளால் அழுத்தம் கொடுப்பது நல்லதல்ல' எனக் குறிப்பிட்டு உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள் போராட்டங்களை நடத்தியதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கருவேல மரங்களை அகற்றும் கொள்கையோடு பிரத்யேக அமைப்புகளும் உருவாகியிருக்கின்றன. சூழலியலாளர்கள் சிலரும்கூட அரசு இதனைக் கொள்கைப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் யோசனைகளை முன்வைக்கிறார்கள்.
இதற்கிடையே, சீமைக்கருவேலம் குறித்து பரபரப்பாகப் பேசப்படுவதை ஆச்சரியத்துடன் பார்ப்பதாகக் கூறுகிறார் இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வாரின் "வானகம்' மையத்தின் செயலர் ம. குமார்.
"தண்ணீரை அதிகம் உறிஞ்சுகிறது சீமைக் கருவேலம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதனால், நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை எவ்வித பாரபட்சமும் இன்றி- உடனடியாக எடுக்க வேண்டும் என்பதிலும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால், மற்ற பொதுவான இடங்களில் உள்ள சீமைக் கருவேலத்தை அகற்றுவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, மாநிலம் முழுவதும் 4.5 லட்சம் ஹெக்டேர் சீமைக் கருவேல மரம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இத்தனை ஹெக்டேர் பரப்பளவிலுள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றிவிட்டால், அந்த இடத்தை கட்டாந்தரையாக விட்டுவிடப் போகிறோமா? பசுமைப் போர்வையை அகற்றும் இந்தச் செயல் பூமியை மேலும் சூடாக்கி விடாதா? படிப்படியாகவாவது மாற்று மரங்களை வைப்பதற்கு எவ்வித முயற்சியும் இல்லாமல் இருப்பது நல்லதல்ல. அதுவும் இத்தனை வறட்சியான சூழலில். ஏன் இந்த வேகம்? இது சரியா?
அடுத்து, இந்த மரத்தின் கரியை நம்பி வாழும் மக்களை தொடர்ந்து என்ன செய்யச் சொல்லப் போகிறோம்?
லட்சக்கணக்கான மக்கள் சீமைக் கருவேல மரங்களின் கரிகளைப் பயன்படுத்தி வரும் நிலையில், அவர்களையும் எரிவாயுவை நோக்கித் தள்ளிவிட்டு- பிறகு மீண்டும் "மீத்தேன்', "ஷேல்', "ஹைட்ரோ கார்பன்' எடுக்கும் திட்டங்களுக்காக நிலத்தைத் தோண்டுவதை ஆதரிக்கப் போகிறோமா?
எனவே, சீமைக் கருவேல மரம் அகற்றுவதில் உள்ள சிக்கல்களை, அவசியத்தைப் புரிதலுடன் ஏற்றுக் கொண்டு, தமிழக அரசு நல்ல திட்டத்தை அறிவிக்க வேண்டும். வெறுமனே மரங்களை மட்டும் அகற்றுவது எனப் பேசி, ஒரு பெரும் தொகையை ஒதுக்குவது சரியான தீர்வாகாது. "கமிஷனுக்கு' மட்டுமே பயன்தரும்.
சீமைக் கருவேல மரம் மற்ற மரங்களைக் காட்டிலும் உறுதியானது, எல்லா வகையான வீட்டு உபயோகப் பொருள்களும் செய்ய முடியும்.
வெளிநாடுகளில் பழுத்த சீமைக் கருவேல காய்களில் இருந்து "பிஸ்கெட்', "ஜூஸ்' தயாரிக்கப்படுகிறது. பயனுள்ள வகையில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால், பரந்து விரிந்துக் கிடக்கும் சீமைக் கருவேலம் குறையும் என்கிறார் குமார்.
No comments:
Post a Comment