கொலைக்கு காரணம் விபரீத வீடியோ கேமா? அல்லது புரிதலற்ற கடுமையான பெற்றோரா?
By RKV | Published on : 18th April 2017 01:16 PM |
இந்த விசயத்தை எப்படி விளங்கிக் கொள்வது என்று புரியவில்லை.
இன்று கொலைக் குற்றவாளியாக மாறி இருக்கும் அந்த கேரள இளைஞனின் செயலுக்கு அவனை மட்டுமே காரணமாக்கி விட முடியாது. எனினும் இது போன்ற கொடூர குற்றங்கள், இப்படியான செய்திகள் வாசிப்பவர்களையே குலை நடுங்கச் செய்கின்றன எனில் கொலையானவர்களின் கதியை நினைத்துப் பாருங்கள். யூ டியூப்பில் அந்த இளைஞன் கொலைகாரனாக மாற இன்ஸ்பிரேஷனாக இருந்த வீடியோ கேமைத் தேடிப் பார்த்தால் ரத்தத்தை உறையச் செய்கிறது அந்த விபரீத விளையாட்டு. இன்றைய இளைஞர்களுக்கு பொழுது போக்க எத்தனையோ ஜாலியான, குதூகலமான விசயங்கள் இருக்கின்றனவே, ஏன் இந்த இளைஞன் தனது மனக் காயங்களுக்கு வடிகாலாக இப்படி ஒரு விளையாட்டைத் தேர்ந்தெடுத்தான் எனில் அங்கிருக்கிறது விவகாரம்.
கேரள மாநிலம் நந்தன் கோட்டில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன் 29 வயது ஜென்சன் ராஜா. வீட்டில் இருக்கையில் இந்த இளைஞனின் ஒரே பொழுது போக்கு தனது அறையின் கதைவை அடைத்துக் கொண்டு கம்ப்யூட்டரில் கொடூரமான வீடியோ கேம்களை சளைக்காமல் விளையாடுவது. சமீப காலங்களில் ராஜாவின் வாழவில் பெரும்பாலான நாட்கள் இப்படி டார்க் டிஜிட்டல் ஃபேண்டஸி வீடியோ கேம்களில் மூழ்கிப் போவதாகவே இருந்திருக்கிறது.
ராஜா தான் கண்ட வன்முறையான வீடியோ கேம்களில் ஒன்றான ‘ஜோம்பி கோ பூம்’ எனும் வன்முறை மிக்க வீடியோ கேம் அடிப்படையில் திட்டமிட்டு கொலைகளை நிகழ்த்துவதற்காக ‘ஸ்டான்லி கேம்ப் ஆக்ஸ்’ எனும் கூர்மையான கோடாரியை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி இருக்கிறான். அந்த கொடூர விளையாட்டில் கொலையாளி பின்புறமிருந்தே தாக்குவான் என்பதால் கொலையுண்டவர்கள் தாங்கள் தாக்கப் படுவது குறித்து அறிந்திருக்க வகையில்லை. அதோடு விளையாட்டின் அட்சரம் பிசகாமல் கொன்றவர்களை எரிப்பதையும் ராஜா அதே விதத்தில் பின்பற்றி இருக்கிறான். எனவும் அம்மாநில காவல்துறை அறிவித்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணையில் இது வரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ராஜா தனது பள்ளிப் பருவத்தில் நண்பர்கள் யாரையும் வீட்டுக்கு அழைத்து வந்து விளையாட அனுமதிக்கப் படவில்லை, தனது குழந்தைப் பருவம் மற்றும் பள்ளி நாட்கள் அனைத்துயுமே தான் தனியாகவே கழித்ததாக ராஜா கூறி இருப்பதாகத் தெரிய வருகிறது. அதோடு மட்டுமல்ல ராஜாவின் பெற்றோர் மிகவும் கண்டிப்பானவர்கள், மகனுக்கு பண்டைய வரலாறு படிக்க ஆசை இருந்தும், வசதியான குடும்பத்தைச் சேர்ந்த தங்களது மகன் டாக்டர் ஆகியே தீர வேண்டும் எனும் பிடிவாதம் அவனது பெற்றோர்களுக்கு இருந்திருக்கிறது.
முதலில் உக்ரைனில் மருத்துவம் படிப்பதற்காகப் பறந்த ராஜா, அங்கு நிலவிய நிற வெறியின் காரணமாக அங்கிருந்து தப்பி ஆஸ்திரேலியாவுக்குப் படிக்கச் சென்றான். அங்கேயும் சொற்பகாலம் தான். பின் அங்கிருந்து கல்வியில் தோற்றுப் போனவனாக இந்தியா திரும்பிய ராஜாவுக்கு தன்னை தனது பெற்றோர் ஏற்றுக் கொள்வார்களா? எனும் அச்சம் இருந்தது. பெற்றோரால் சரியான வகையில் அங்கீகரிக்கப் படாத நிலையில் தான் இப்படி ஒரு கொடூரத்தை அரங்கேற்றி இருக்கிறான் ராஜா!
பெற்றோரின் அரவனைப்பு கிடைக்காத பட்சத்தில், தொடர்ந்து தனக்கான புகழிடமாக அந்த இளைஞன் தேர்ந்தெடுத்தது டார்க் ஃபேண்டஸி வகையைச் சார்ந்த கொடூரமான வீடியோ கேம்கள் விளையாடுவது. ஒரு கட்டத்தில் அதற்கு முழு அடிமையான ராஜா அடுத்த கட்டமாக தன்னை இந்தை நிலைக்கு ஆளாகச் செய்த, தன்னை தொடர்ந்து புறக்கணித்து வந்த பெற்றோரை கொலை செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறான். என விசாரணையில் ஈடுபட்டு வரும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொலையானவர்களின் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டில் கிடைத்த விவரங்களின் படி ராஜா தனது பெற்றோர், சகோதரி மற்றும் கண் பார்வையற்ற அத்தை உள்ளிட்டோரை மீன் குழம்பில் பூச்சி மருந்து கலந்து கொடுத்து கொன்றிருக்கிறான். மேலும் விசாரணையின் போது ராஜா ‘ தான் தனது பெற்றோரைக் கொலை செய்தது வேண்டுமானால் பழிவாங்குவதற்காக என்று சொல்லலாம், ஆனால் எனது சகோதரியையும், அத்தையையும் இப்படி ஒரு மோசமான தனிமை வாழ்வில் இருந்தும், தனது கடுமையான சுபாவம் கொண்ட பெற்றோரிடம் இருந்தும் காப்பாற்றி விடுதலை அளிக்கவே அவர்களையும் சேர்த்து கொலை செய்து விட்டதாக தெரிவித்ததாக காவல்துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் வெளியிட்டு வரும் செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் ராஜா கொலைகாரனாக மாற வீடியோ கேம் மட்டுமே காரணமல்ல என்பது தெளிவு. தன்னைப் புரிந்து கொள்ளாத, தான் அன்பாக அணுக வாய்ப்பே தராத, தன்னை தன் வாழ்நாளெல்லாம் கட்டுப்படுத்த நினைத்த தனது பெற்றோரின் அடக்குமுறைக்கு எதிரான வன்முறையாகவே இதை ராஜா குறிப்பிடுகிறான். இந்த இளைஞனுக்கு முதல் தேவை சிகிச்சையா? அல்லது தண்டனையா? என்பதை நீதிமன்றம் தீர்மாணிக்கும். ஆனால் இவனது இந்த கொடூரச் செயல்; குழந்தைகளிடத்தில் அனாவசியமாகக் கடுமை காட்ட நினைக்கும் பெற்றோர் அனைவருக்குமே ஒரு அபாய மணி! என்றே கருத இடமளிக்கிறது.
No comments:
Post a Comment