Tuesday, December 17, 2019

'ரேஷன் சர்க்கரையாவது எங்களுக்கு கிடைக்குமா?'

Added : டிச 16, 2019 23:40

சர்க்கரை கார்டாக மாற்றித் தருமாறு, எந்த பொருளும் வாங்காத ரேஷன் கார்டுதாரர்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக ரேஷன் கடைகளில், அரிசி கார்டுக்கு, இலவச அரிசி உட்பட அனைத்து பொருட்களும்; சர்க்கரை கார்டுக்கு, அரிசி தவிர்த்த மற்ற பொருட்களும் வழங்கப்படுகின்றன. எந்த பொருளும் வாங்காத, 'என்' கார்டுகளுக்கு, எதுவும் வழங்குவதில்லை. இந்த கார்டுகள் அனைத்தும், மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப வழங்கப்படுகின்றன.பெரும்பாலும் வசதியானவர்கள், அரசு ஊழியர்கள், சர்க்கரை மற்றும் எந்த பொருளும் வாங்காத கார்டுகளை வைத்துள்ளனர். அதில், பலர் ஓய்வு பெற்றவர்கள், வாரிசுகளால் புறக்கணிக்கப் பட்டவர்களாகவும் உள்ளனர். அவர்கள், தற்போது சிரமப்படுவதால், அரிசி கார்டு வழங்குமாறு, அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, 10.19 லட்சம் சர்க்கரை கார்டுதாரர்கள், அரிசி கார்டுகளாக மாற்றிக் கொள்ள, நவம்பரில் அவகாசம் வழங்கப்பட்டது. அதில், 4.50 லட்சம் பேர், அரிசி கார்டுக்கு மாறினர்.

இது குறித்து, 'என்' வகை கார்டுதாரர்கள் கூறியதாவது:'என்' கார்டுகள் வாங்கிய பலரும், தற்போது, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எந்த பொருளும் வாங்காத, 46 ஆயிரம் கார்டுதாரர்களை, அரிசி கார்டுகளாக மாற்றும்படி, அரசிடம் கோரிக்கை வைத்தும் பயன் இல்லை.அரிசிக்கு மாற, சர்க்கரை கார்டுதாரர்களுக்கு சலுகை வழங்கியும், பாதி பேர் கூட மாறவில்லை. 'என்' கார்டுதாரர்களை, அரிசி கார்டுக்கு மாற சலுகை தரவில்லை என்றாலும் பரவாயில்லை, சர்க்கரை கார்டுக்காவது மாற்ற வேண்டும். இதனால், அரசுக்கு அதிகளவில் செலவு ஏற்படாது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024