Tuesday, December 17, 2019


'மீட்டர் ரீடிங்' எடுப்பதில் தாமதம் அதிக கட்டணத்தால் மக்கள் தவிப்பு

Added : டிச 16, 2019 23:24


சென்னை:வீடுகளில், 'மீட்டர் ரீடிங்' எனப்படும், மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, குறித்த நாட்களில் ஊழியர்கள் வராததால், பலரும் அதிக மின் கட்டணம் செலுத்த வேண்டியநிலைக்கு தள்ளப்படுவது,தொடர் கதையாகி வருகிறது.

தமிழக மின் வாரியம், வீடுகளுக்கு, 100 யூனிட் வரை இலவசமாகவும்; 500 யூனிட் கீழ், மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகிறது. அதற்கு மேல் மின்சாரம்பயன்படுத்தினால், முழு கட்டணம் செலுத்த வேண்டும். இலவசம் மற்றும் மானிய விலையில் மின்சாரம் வழங்குவதற்காக, வாரியத்திற்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு வழங்குகிறது. வீடுகளில், இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. ஆனால், ஊழியர்கள் குறித்த காலத்தில், கணக்கு எடுக்க வராததால், பலரும், அதிக கட்டணம் செலுத்த வேண்டி வருகிறது.இது குறித்து, மின் நுகர்வோர்கள் கூறியதாவது:மின் பயன்பாடு கணக்கெடுத்த, 20 நாட்களுக்குள், கட்டணத்தை செலுத்தவில்லை எனில், 60 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அதேசமயம், ஊழியர்கள் தாமதமாக கணக்கெடுக்க வருவதால், அதிக கட்டணம் வருகிறது.அதாவது, அக்டோபரில், 10ம் தேதி கணக்கு எடுத்தால், டிசம்பரிலும், அதே தேதியில் வர வேண்டும்.
விடுமுறை போன்ற காரணங்களால், இரு நாட்கள் வரை தாமதமாக வரலாம். ஆனால், ஒரு வாரத்திற்கு மேல் தாமதாக வருகின்றனர். குறித்த நாளில் கணக்கு எடுத்தால், 500 யூனிட்டிற்கு கீழ் மட்டுமே மின்சாரம் பயன்படுத்த வாய்ப்புள்ளது. ஆனால், தாமதமாக வருவதால், மின் பயன்பாடு மானிய அளவை தாண்டி விடுவதால், அதிக கட்டணம் செலுத்த நேரிடுகிறது. சிலர் நேரில் வராமல், அவர்கள் இஷ்டத்திற்கு, கணக்கு எடுக்கின்றனர். இது தொடர்பாக வாரிய அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும், தீர்வு கிடைக்கவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024