Monday, December 2, 2019

''ஆங்கிலத்தில் ஒருவார்த்தை கூட தெரியவில்லை'' - மாவட்ட ஆட்சியரின் திடீர் ஆய்வில் ஆசிரியைகள் பணி இடைநீக்கம் 

மாவட்ட ஆட்சியர் மேற்கொண்ட திடீர் நடவடிக்கை சமூக வலைதளத்தில் வைரலான காட்சி.

உத்தரப் பிரதேசத்தில் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஆங்கிலம் தெரியாத இரு ஆசிரியைகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உன்னாவோ மாவட்டத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் தேவேந்திர பாண்டே திடீர் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது மாணவர்களின் திறனை சோதித்தறிந்தபோது அதனால் சந்தேகம் ஏற்பட்டு உடனே ஆசிரியர்களின் திறனை அவர் சோதனையிடத் தொடங்கினார். இதில் இரு ஆசிரியைகள் சிக்கினர்.

சமூக ஊடகங்களில் வைரலாகிய இந்தச் சம்பவத்தின் வீடியோவில், மாவட்ட ஆட்சியர், 8 ஆம் வகுப்பு ஆங்கில புத்தகத்தைக் கொடுத்து எட்டாம் வகுப்பு மாணவியை வாசிக்கச் சொல்கிறார். புத்தகத்தையே உற்றுப்பார்த்தபடி மாணவி அமைதியாக இருக்கிறார். இதனால் சந்தேகம் அடைந்த ஆட்சியர் உடனே புத்தகத்தை ஆசிரியர்களை அழைத்து புத்தகத்தை அவர்கள் பக்கம் திருப்பி ஆங்கிலப் பாடப் புத்தகத்திலிருந்து ஒரு பத்தியைப் படிக்குமாறு ஆசிரியர்களைக் கேட்டுக்கொள்வதைக் காணலாம். ஆனால் ஆசிரியர்களும் அவ்வாறே புத்தகத்தையே முறைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு மாவட்ட ஆட்சியர் கோபமடைந்து அருகிலிருந்த காவல் அதிகாரிகளிடம் இவர்கள் ஆசிரியர்கள். ஆனால் ஆங்கிலம் படிப்பதற்கு இப்படி தடுமாறுகிறார்களே எனக் கேட்கிறார். இச்சம்பவம் நேற்று சமூக வலைதளங்களில் வைரலாகின.

திடீர் ஆய்வில் கிடைத்த அனுபவம் குறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:

"இது சவுராவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு ஒன்றை சனிக்கிழமை மேற்கொண்டேன். முன்கூட்டியே எந்தத் திட்டமும் இல்லாமல்தான் சென்றேன். நான் ஒரு ஆங்கிலப் புத்தகத்திலிருந்து மாணவர்களைப் படிக்கச் சொன்னேன். ஆனால் அவர்களால் முடியவில்லை. பின்னர் நான் ஆசிரியர்களிடம் கேட்டேன். அவர்களால் ஒரு ஆங்கில வார்த்தையைக் கூட படிக்க முடியவில்லை என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்''

மூத்த ஆசிரியர் சுசிலா மற்றும் உதவி ஆசிரியர் ராஜ்குமாரி ஆகியோரை அடிப்படை சிக்‌ஷா ஆதிகாரி பிரதீப் குமார் பாண்டே இடைநீக்கம் செய்துள்ளார். மேலும் அவர்கள் மீது விசாரணையும் தொடங்கப்பட்டது.

அடிப்படை சிக்‌ஷா (கல்வி) அதிகாரிகளிடமும் விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் வழங்கினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024