Tuesday, December 3, 2019

பழைய ரூபாய் நோட்டுகளுடன் தவித்த மூதாட்டிகளுக்கு பணம் வழங்கிய சென்னை பள்ளி அறக்கட்டளை




மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து தெரியாமல், திருப்பூரில் பழைய ரூபாய் நோட்டுகளுடன் தவித்து வந்த மூதாட்டிகளுக்கு, சென்னையைச் சேர்ந்த பள்ளி அறக்கட்டளை சார்பில் ரூ.46 ஆயிரத்துக்கான காசோலைகள் நேரில் வழங்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பூமலூர் கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகள் பழனிசாமி ரங்கம்மாள் (82), காளிமுத்து ரங்கம்மாள் (77). இருவரும், மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து தெரியாமல், சிகிச்சைக்காகவும், பேரப் பிள்ளைகளுக்காகவும் சேமித்து வைத்த பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் அடங்கிய ரூ.46 ஆயிரத்தை என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்து வந்தனர்.

மாவட்ட ஆட்சியர் கே.விஜய கார்த்திகேயன் உத்தரவின்பேரில் வருவாய்த் துறையினர் மூதாட்டிகளுக்கு முதியோர் உதவித் தொகை வழங்கவும், தேவையான மருத்துவ சிகிச்சை கிடைக்கவும் நடவடிக்கை எடுத்தனர். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவது குறித்து, ரிசர்வ் வங்கியிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த எவர்வின் பள்ளி அறக்கட்டளை தாளாளர் புருஷோத்தமன், பூமலூரில் உள்ள மூதாட்டிகளின் வீட்டுக்கு நேற்று சென்று ஆறுதல் கூறியதோடு, அவர்கள் வைத்திருந்த பழைய ரூபாய் நோட்டுகளின் மதிப்பிற்கேற்ப ரூ.22 ஆயிரம், ரூ.24 ஆயிரம் என ரூ.46 ஆயிரம் மதிப்புக்கு காசோலைகளை வழங்கினார்.

இது குறித்து செய்தி யாளர்களிடம் புருஷோத்தமன் கூறும்போது, 'அனுபவத்தின் பொக்கிஷங்கள் முதியவர்கள். அவர்கள் இறந்த பிறகு படமாக்குவதைவிட, இருக்கும்போது பாடமாக்கிக் கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில், இவர்கள் இருவரது கவலையைப் போக்க வேண்டும், நீண்ட நாட்கள் கவலையில்லாமல் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில், எங்கள் பள்ளி அறக்கட்டளை சார்பில் இந்த பணம் அளிக்கப்பட்டுள்ளது' என்றார்.ரங்கம்மாள் மூதாட்டிகள் கூறும்போது, ‘பணம் போய்விட்டது என நினைத்த நிலையில், அனைவரது உதவியால் கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது' என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024