Tuesday, December 3, 2019

அனுதாபத்தில் கேட்க வேண்டாம்: இமான் வேண்டுகோள்



'செவ்வந்தியே' பாடலை அனுதாபத்தில் கேட்க வேண்டாம் என்று இசையமைப்பாளர் இமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிறவியிலேயே பார்வையற்றவரான திருமூர்த்தி பாடிய 'கண்ணான கண்ணே' பாடல் இணையத்தில் பெரும் வைரலானது. இதைப் பார்த்த இசையமைப்பாளர் இமான், அவருடைய விவரங்களைக் கேட்டு வாங்கி அவரிடம் பேசியுள்ளார். மேலும், திருமூர்த்தி பாட வாய்ப்பு அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள 'சீறு' படத்தில் திருமூர்த்திக்குப் பாடும் வாய்ப்பை வழங்கினார். அந்தப் படத்தில் திருமூர்த்தி பாடியுள்ள 'செவ்வந்தியே' என்ற பாடல் இன்று (டிசம்பர் 2) மாலை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடல் தொடர்பாக இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் திருமூர்த்தியுடன் இருக்கும் இமான் பேசும்போது, "என்னுடன் இருப்பவர் திருமூர்த்தி. எங்களுடைய கூட்டணியில் இப்போது 'செவ்வந்தியே' என்ற பாடல் வெளியாகியுள்ளது. 'சீறு' படத்தில் இடம்பெறும் அந்தப் பாடலை பாடலாசிரியர் பார்வதி எழுதியிருக்கிறார். கண்டிப்பாக இந்தப் பாடலைக் கேளுங்கள், உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

அனுதாபத்தில் இந்தப் பாடலை கேட்க வேண்டாம். உண்மையிலேயே இந்தப் பாடல் உங்களுக்குப் பிடித்திருந்தால், பலருக்கும் ஷேர் செய்யுங்கள். அனுதாபத்தில் அதைச் செய்யாதீர்கள். அதுதான் திருமூர்த்தி போன்ற கலைஞர்களுக்கு ஊக்கமாக இருக்கும்.

இந்த ஒரு பாடல் வெற்றியின் மூலமாக இன்னும் பல பாடல்களை திருமூர்த்தி பாட வேண்டும். அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் வேண்டி விரும்பி கேட்கக் கூடிய ஒரு விஷயம். இவரை வெவ்வேறு பாடல்களுக்கு உபயோகிக்க வேண்டும். இவரை இன்னும் அடுத்த தளத்துக்குக் கொண்டு போக வேண்டும்" என்று பேசியுள்ளார் இமான்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024