ஆர்.ஷபிமுன்னா
THE HINDU TAMIL
நிதிஷ்குமார் முதல் அமைச்சராக இருக்கும் பிஹார் மாநில சட்டப்பேரவையில் நேற்று மதுவிலக்கு அமல்படுத்தும் சட்ட மசோதா 2016 நிறைவேற்றப்பட்டது. அனைத்து உறுப்பினர்களாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா பிஹார் மாநிலம் முழுவதிலும் ஒருபகுதி மதுவிலக்கு அமல்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக ஏப்ரல் 1 முதல் உள்நாட்டு மதுபான வகைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அயல்நாட்டு மதுபானங்கள் அரசு கடைகளில் மட்டுமே கிடைக்கும் என்றும் பிஹார் அரசு தெரிவித்துள்ளது.
இந்த சட்டம், காவல்துறை அராஜகத்திற்கு வழி வகுக்கும் என எதிர்கட்சியான பாரதிய ஜனதாவில் சில உறுப்பினர்கள் மட்டும் எதிர்ப்பு குரல் கொடுத்தனர். எனினும், மற்ற அனைத்து உறுப்பினர்களும் மேஜையை தட்டி ஆராவரத்துடன் அளித்த ஆதரவிற்கு பின் அமைதியாகி விட்டனர்.
இதன் மீது சட்டப்பேரவையில் நீண்ட உரையாற்றிய முதல் அமைச்சர் நிதிஷ்குமார், மதுவால் அதிகமாக பாதிக்கப்படும் ஏழை குடும்பங்களை காப்பது தம் அரசின் தலயாய கடமை எனக் குறிப்பிட்டார். கள்ளச்சாரயம் காய்ச்சுபவர்களுக்கு மரணதண்டனை அளிக்கும் சட்டத்தில் அதை அருந்தி பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு அரசு நிவாரண நிதி அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதில், நிரந்தர உடல் பாதிப்பு அடைவோருக்கும் உதவித்தொகை அளிப்பதுடன் போதை தடுப்பு மறுவாழ்வு மையங்களும் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்காக, அரசு மருத்துவர்களுக்கு பெங்களூரில் உள்ள ‘நிம்ஹான்ஸ்’ மருத்துவமனையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 47-ன்படி மதுவிலக்கை அமல்படுத்துவது ஒரு மாநில அரசின் கடமையாகும் எனவும் நிதிஷ் தெரிவித்தார். இறுதியில் அவர், ‘மது குடிக்க மாட்டோம், மற்றவர்களை குடிக்க வைக்கவும் மாட்டோம்’ என அறிவித்தார்.
பிஹாரின் மதுவிலக்கு சட்டத்தின்படி, கள்ளச்சாரயம் காய்ச்சுபவர்களுக்கு அதிகபட்சமாக மரணதண்டனை அளிக்கப்படும். பொது இடங்களில் மது அருந்தி சிக்குவோருக்கு 5 முதல் 10 வருடம் வரையும், தமது வீடுகளில் குடித்து விட்டு பொதுமக்களுக்கு தொந்தரவு அளிப்போருக்கு ஐந்து வருடம் வரையும் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மது கடத்தலில் ஈடுபடும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கும் 7 வருடம் சிறையில் தள்ளப்படுவர்.
மருந்து உபயோகத்திற்கு எனும் பெயரில் மது விற்பனை செய்வோருக்கு 7 வருடம் வரையும், சிறைத்தண்டனை உண்டு. ஹோமியோபதி மருந்துகள் தயாரிப்பாளர்களுக்கும் 100 மில்லிக்கும் அதிகமாக மது விற்பனை கிடையாது எனவும், இவற்றை தீவிரமாகக் கண்காணிக்க கூடுதலான சோதனை சாவடிகள் அமைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இத்துடன், மதுவின் மீதான சட்டவிரோத விற்பனையில் ஈடுபடுவோரின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் எனவும் இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
எனவே, பிஹாரின் பகுதி விலக்கு அமலில் வெளிநாட்டு மதுவகைகள் மட்டும் விற்பனைக்கு கிடைக்கும். இதுவும் தனியார் விற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது, பிஹார் அரசின் மதுகடைகளில் மட்டும் கிடைக்கும். இதுவும் வரும் காலங்களில் தடை செய்யப்பட்டு முழுமையான மதுவிலகு அமல்படுத்தப்படும்.