Thursday, March 16, 2017

சீமை கருவேல மரங்களை அகற்றும்படி நிபந்தனை ஜாமின்: சபாஷ் தீர்ப்பு

பெரம்பலுார், -அரியலுார் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், வழக்கு ஒன்றில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு, '20 நாட்களில், 100 சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்' என்ற நிபந்தனையுடன், முன்ஜாமின் வழங்கப்பட்டது. இது, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சீமை கருவேல மரங்களால், விவசாயம் மற்றும் மனிதர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அவற்றை அழிக்க, அரசுக்கு
உத்தரவிட வேண்டி, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சீமை கருவேல மரங்களை அகற்ற, நீதிபதிகள் அரசுக்கு உத்தரவிட்டனர். இதற்காக, மாவட்ட நீதிபதிகள் தலைமையிலான குழுவும்
அமைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அரியலுார் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவர் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரணைக்கு ஏற்ற, மாவட்ட முதன்மை நீதிபதி ரகுமான், 'ஜாமின் பெற்றவர், அவர் வசிக்கும் கிராமத்தில், 20 நாட்களுக்குள், 100 சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். இது குறித்து, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் கையொப்பம் பெற்று, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்' என்ற நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கினார்.

தமிழகத்திலேயே முதன்முறையாக, இவ்வாறு நிபந்தனையுடன் முன்ஜாமின் கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நீதிபதியின் இந்த உத்தரவு, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024