மருத்துவ மாணவர் சேர்க்கை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
குலசேகரத்தைச் சேர்ந்த வேலாயுதன் நாயர் மனு: மூகாம்பிகா மருத்துவம், பல், நர்சிங் கல்லுாரி நடத்துகிறோம். இவை மொழிவாரி சிறுபான்மையினர் நடத்தும் நிறுவனமாகும். முன்பு மாணவர் சேர்க்கையில் 50 சதவீத இடங்கள் கல்லுாரி நிர்வாகம், மீதி 50 சதவீதம் அரசு ஒதுக்கீட்டின் கீழ் நடந்தது. மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான 'நீட்' முறையை மத்திய அரசு கொண்டு வந்தது.
இதன் மூலம் எம்.பி.பி.எஸ்., மற்றும் மருத்துவ முதுகலை படிப்பில் 100 சதவீத ஒதுக்கீடும், அரசு கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும் என
இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி எம்.பி.பி.எஸ்., மற்றும் மருத்துவ முதுகலை படிப்புகளை அந்தந்த மாநில அரசுகள் பொது கவுன்சிலிங் மூலம் 100 சதவீத இடங்களை நிரப்ப வேண்டும்.
பொதுவான கல்விமுறை இல்லாமல், 'நீட்' தேர்வு கொண்டுவருவது பல மாணவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., மாணவர்களுடன், பிற பாடத்திட்டம் பயிலும் மாணவர்கள் போட்டியிடுவது கடினம்.
நிர்வாக ஒதுக்கீட்டிற்குரிய 50 சதவீத இடங்களை நிரப்பும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு வேலாயுதன் நாயர் மனு செய்திருந்தார்.
நீதிபதி வி.பார்த்திபன் மத்திய சுகாதாரத்துறை செயலர், இந்திய மருத்துவக் கவுன்சில், தமிழக சுகாதாரத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி, விசாரணையை மார்ச் 22 க்கு ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment