Wednesday, March 22, 2017


மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை

புதுடில்லி : மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமில்லை என மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். கட்டண சலுகை : ரயிலில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு பயண சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. 60 வயது நிரம்பிய ஆண்களும், 58 வயது நிரம்பிய பெண்களும் மூத்த குடிமக்களாக கருதப்படுகிறார்கள். மூத்த குடிமக்களில் ஆண்களுக்கு 40 சதவீதமும், பெண்களுக்கு 50 சதவீதமும் கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகையைப் பெற மூத்த குடிமக்கள் வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவற்றைப் பயன்படுத்தி வந்தனர். தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் மூத்த குடிமக்கள் ரயில் டிக்கெட்டில் சலுகை பெற ஆதார் எண் கட்டாயம் என ரயில்வே துறை அறிவித்தது.

ஆதார் கட்டாயமில்லை : இந்நிலையில், ரயிலில் சலுகை பெற மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை என ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு பார்லியில் இன்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுரேஷ் பிரபு கூறுகையில், ரயில் டிக்கெட்டில் சலுகை பெற மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை. ஜனவரி 1 முதல் மூத்த குடிமக்கள் குறித்த தகவல்களை ஆதார் அடிப்படையில் ரயில்வே துறை சேகரித்து வருகிறது. எந்தவித முறைகேடுகளும் நடைபெறக்கூடாது என்பதற்காக இதனை சேகரித்து வருகிறோம்.

மிண்ணனு பரிவர்த்தனையில் டிக்கெட் பதிவு செய்வதே எங்களது இலக்கு. எனினும் பணப்பரிவர்த்தனையை குறைக்கும் முயற்சிக்கு தற்போது முன்னுரிமை கொடுத்து வருகிறோம் என்றார்.
தினமலர்
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2025