Tuesday, March 14, 2017

பெண் வி.ஏ.ஓ.,விற்கு எதிரான வாரன்ட்டை ரத்து செய்ய முடியாது : உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: திருநெல்வேலி நீதிமன்றம் பிறப்பித்த வாரன்ட்டை ரத்து செய்யக்கோரி, பெண் வி.ஏ.ஓ., தாக்கல் செய்த மனுவை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் வி.ஏ.ஓ.,வும், ஒரு ஆண் வி.ஏ.ஓ.,வும் நெருங்கி பழகினர். திருமணம் செய்வதாகக்கூறி ஆண் வி.ஏ.ஓ., ஏமாற்றியதாக, அம்பாசமுத்திரம் மகளிர் போலீசில் பெண் வி.ஏ.ஓ.,புகார் செய்தார். திருநெல்வேலி மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. பெண் வி.ஏ.ஓ.,ஆஜராகுமாறு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அவர் ஆஜராகாததால் கீழமை நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்தது. அந்நீதிமன்ற நீதிபதி,' நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்க பெண் வி.ஏ.ஓ.,விற்கு அறிவுறுத்த வேண்டும். தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும்,' திருநெல்வேலி கலெக்டருக்கு அறிக்கை அனுப்பினார்.பெண் வி.ஏ.ஓ.,'எனக்கு எதிராக பாரபட்சமாக கீழமை நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்துள்ளது. 

சம்பந்தப்பட்ட தேதியில் எனக்கு உடல்நலம் சரியில்லாததால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவித்தேன். மகளிர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். வேறு நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணையை மாற்ற உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். 

நீதிபதி பி.என்.பிரகாஷ் விசாரித்தார்.ஆண் வி.ஏ.ஓ., தரப்பு வழக்கறிஞர்,“ மனுதாரர் அவரது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி, கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். விவாகரத்து பெறவில்லை. வேண்டுமென்றே கீழமை நீதிமன்றத்தில் மனுதாரர் ஆஜராகவில்லை,” என்றார்.நீதிபதி உத்தரவுமனுதாரர் ஒரு குழந்தை இல்லை. அவருக்கு 39 வயதாகிறது. பொறுப்புமிக்க வி.ஏ.ஓ., பணியில் உள்ளார். நீதிமன்றத்தில் ஆஜராகாதபட்சத்தில், அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் தகவல் தெரிவிப்பது வழக்கம். அவ்வாறு மனுதாரர் தகவல் தெரிவிக்கவில்லை. 

இவ்வழக்கில் மனுதாரருக்கு வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட அதே நாளில், 4 சாட்சிகளுக்கு கீழமை நீதிமன்ற நீதிபதி வாரன்ட் பிறப்பித்துள்ளார். மனுதாரருக்கு எதிராக கீழமை நீதிமன்ற நீதிபதி, பாரபட்சமாக செயல்படுவதாக கூறுவதை ஏற்க முடியாது. மருத்துவமனையிலிருந்து திரும்பியதாக கூறப்படும் தேதியில், வாரன்ட்டை திரும்பப் பெறுமாறு மனுதாரர் கோரவில்லை.குற்றவாளிகளுக்கு எதிராக பிறப்பிக்கப்படும் கைது வாரன்ட் திரும்பப் பெறப்படுகிறது. போலீசார் வாரன்ட்டை நிறைவேற்ற சென்றபோது, மனுதாரர் வீட்டின் கதவை பூட்டிவிட்டு, மறைந்து கொண்டுள்ளார். இதனால் வேறு வழியின்றி, கலெக்டருக்கு நீதிபதி கடிதம் எழுதியுள்ளார். நீதிபதியின் நடவடிக்கையில் தவறு காண முடியாது. 

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைந்து முடிக்க, கீழமை நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.சாட்சிகள் சம்மன் பெற்றபின் நீதிமன்றத்தில் ஆஜராகாவிடில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். மனுதாரருக்கு கீழமை நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை செய்துள்ளார். அவர், கலெக்டருக்கு கடிதம் அனுப்பியதில் தவறு காண முடியாது. மனுதாரர் 2 வாரங்களில் கீழமை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். மனுவை தள்ளுபடி செய்கிறேன்

என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024