வங்கிக்கு ரூ.114 கோடி இழப்பு; நிர்வாகிகளுக்கு ஜாமின் மறுப்பு
சென்னையில், 'ஷைலாக்' என்ற பெயரில் நிறுவனம் இயங்கி வருகிறது. பல மாநிலங்களில், 504 மொபைல் போன் கோபுரங்கள் அமைப்பதற்காக, ஆந்திர வங்கி கிளையில், கோடிக்கணக்கில் கடன் பெற்றது. ஆனால், 391 கோபுரங்கள் மட்டுமே அமைத்தது.
அதன்மூலம் வங்கிக்கு, 114 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, நிறுவனத்தின் இயக்குனர்கள் மீது, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது. ராமானுஜம் சேஷரத்னம், சுதர்சன் வெங்கட்ராமன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இருவரும் ஜாமின் கேட்டு, சென்னை, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி வெங்கடசாமி பிறப்பித்த உத்தரவு:ஏற்கனவே, பல வங்கிகளில், 740 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக, இவர்கள் மீது வழக்குகள் உள்ளன. அமெரிக்க குடியுரிமை பெற்ற இவர்களுக்கு, ஜாமின் வழங்கினால், அமெரிக்காவுக்கு தப்பி செல்லக் கூடும். எனவே, இவர்களுக்கு ஜாமின் வழங்க இயலாது.
திருநெல்வேலி மாவட்டத்தில், நகை கடன் திருப்பி செலுத்தப்பட்டும், நகையை வங்கி அதிகாரிகள் திருப்பி தராததால், விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு சலுகையும், ஏழைகளுக்கு நெருக்கடியையும், வங்கிகள் அளிக்கின்றன.இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment