ஹோட்டல்ல ரூம் எடுக்கப் போறீங்களா? உஷார் மக்களே..! #LEDbulbCamera
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி அனைத்துத் துறைகளிலும் வந்துவிட்டன. புதிய தொழில்நுட்பங்கள், மனிதர்களின் வேலைப் பளுவை குறைப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டாலும், மற்றொருபுறம் மனிதர்களின் பிரைவஸிக்கு பங்கம் விளைவித்துக் கொண்டுள்ளது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. பொதுவாக ஹோட்டல்கள், பஸ் ஸ்டாண்டுகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் நாம் வைஃபையை தேடிக்கொண்டிருக்கும் சூழல் வந்துவிட்டது. ஒரு ஹோட்டலுக்குச் சென்றால் குளிர்சாதன வசதி இருக்கிறதா எனக் கேட்ட காலம் மாறி, இலவச வைஃபை இருக்கிறதா எனக் கேட்கும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவரும் ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கும்போது வைஃபை பயன்படுத்தியவர்களாகத்தான் இருப்போம்.
அதேபோல, ஒரு துணிக்கடைக்குச் செல்லும்போது உடை சரியாக பொருந்துகிறதா எனப் பார்ப்பதற்கு உடை மாற்றும் அறைக்குச் சென்று உடையை உடுத்திப் பார்க்கிறோம். அப்போது அந்த அறையிலும் வைஃபை சாதனம் மாட்டப்பட்டிருப்பதைக் காண்போம். திரைப்படங்களில் காண்பிக்கப்படுவது போல கண்ணாடிக்குப் பின்னாடி இருந்து வீடியோ எடுத்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது பாஸ். உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாகச் அமேசான் வலைத்தளத்தில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சாதனம்தான் வைஃபை கேமரா. உங்களுடைய பார்வைக்கு டிரையல் ரூமிலோ அல்லது ஹோட்டல் அறையிலோ வைஃபை சாதனம் பொருத்தப்பட்டது போன்றே இருக்கும். ஆனால், உங்களுடைய ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து கொண்டும் உங்களைப் படம் பிடித்துக் கொண்டும் இருக்கும் என்பது உங்களுக்குத் துளியும் தெரியாது. மேலும் இந்த கேமராவில் வைஃபை வசதியும் உண்டு அதன்மூலம் மொபைலிலும் லைவ்வாக உங்கள் நடவடிக்கைகளைக் கண்காணிக்க முடியும்.
சந்தையில் புதிதாக அறிமுகமாகியுள்ள வைஃபை கேமரா, வைஃபை மற்றும் கேமரா என இரண்டு வேலையையும் ஒரே நேரத்தில் செய்யக்கூடியது. இந்த கேமரா 360 டிகிரி கோணத்தில் சுழன்று வேலை செய்யக்கூடியது. பொதுவாக ஹோட்டலில் அறையின் சுவரிலோ அல்லது மேற்கூரையின் மீதோ இந்த விளக்கு வடிவில் வைஃபை சாதனம் பொருத்தப்பட்டு இருக்கும். அது தோற்றத்தில் சாதாரண விளக்கைப் போல தெரிந்தாலும், அந்த அறை முழுவதும் அந்த வைஃபைக்குள் இருக்கும் கேமராவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். நீங்கள் அந்த அறையில் தங்குகிறீர்கள் என்றால் உங்கள் ஒவ்வொரு செயலும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். வீடியோ எடுப்பதற்கென்றே பிரத்யோகமாக கேமராவானது (960P HD) ஹைச்.டி தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் உங்களின் ஒவ்வொரு அசைவினையும் சேமிக்கும் வகையில் உள்ளே 128 ஜிபி மெமரி கார்டும் இருக்கும். அந்த மெமரி கார்டானது உங்கள் ஒவ்வொரு அசைவினையும் தனது நினைவகத்தில் பதிவேற்றிக் கொள்ளும். இந்த கேமரா பகலில் மட்டுமல்லாது, இரவிலும் தன்னில் இருந்து 16 அடி தூரம் வரை உள்ள பொருட்களையோ, மனிதர்களையோ துல்லியமாக கண்காணித்துக்கொண்டே இருக்கும். மேலும் இந்த கேமராவின் மூலம் நீங்கள் பேசும் ஆடியோவினையும் எளிதாகப் பதிவு செய்ய முடியும்.
இந்த வைஃபை கேமராவானது வீட்டுப் பாதுகாப்புக்கு எனச் சொல்லி விற்கப்பட்டாலும், தவறான செயலுக்கு உபயோகப்படுத்த வாய்ப்புகள் மிக அதிகம். என்னதான் அறிவியல் அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்கிறது எனச் சொன்னாலும் இந்த கேமராவெல்லாம் கொஞ்சம் ஓவர்தான் பாஸ். "இவ்வளவு சொல்றீங்க அதை எப்படி கண்டுபிடிக்கிறதுன்னு கேக்குறீங்குளா" அது உங்க கையிலதான் இருக்கு பாஸ். உங்க மொபைல்தான் அதைக் கண்டுபிடிக்குறதுக்கான சாதனம். உங்களுக்கு சந்தேகம் வரும் இடத்துல உங்க மொபைல்ல இருந்து கஸ்டமர் கேர்க்கு கால் பண்ணுங்க. அப்போ எதிர் முனையிலோ அல்லது உங்கள் மொபைலிலோ வாய்ஸ் பிரேக் ஆனாலோ, வித்தியாசமான சப்தம் கேட்டாலோ அந்த அறையில கேமரா இருக்குனு தெரிஞ்சுக்கலாம். இதுபோல் வைஃபை தவிர, பிளக்பாயிண்ட், கடிகாரம் எனப்பல இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம்...உஷார் மக்களே!
- துரை.நாகராஜன்
No comments:
Post a Comment