Monday, March 13, 2017


மருத்துவமனைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.5 லட்சம் அபராதம்!

தஞ்சை பல்நோக்கு மருத்துவமனைக்கு எதிராக பொதுநல மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த ஆட்டோமொபைல் மெக்கானிக் சையது கமருத்தீன் என்பவர் எஸ்.ஆர்.மீனாட்சி பல்நோக்கு மருத்துவமனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ‘ஒரு விமான நிலையத்துக்கு 2,400 மீட்டர் ஆரத்தில் கட்டப்படும் கட்டடங்கள் அனைத்தும் 12 மீட்டருக்குமேல் இருக்கக் கூடாது. ஆனால் இந்த மருத்துவமனை நிர்வாகம் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட 4 தளங்களுக்குப் பதிலாக 6 தளங்களைக் கட்டியுள்ளது.

இதனால் விமானப் பயணிகளுக்கும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த மருத்துவமனை கட்டடத்துக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனுமீதான விசாரணை கடந்த ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

எனவே, சையது கமருத்தீன் இதையெதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சஞ்சய் கி‌ஷன் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வுமுன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சிறுநகரம் ஒன்றில் கட்டப்படும் பல்நோக்கு மருத்துவமனைக்கு எதிராக மனு தாக்கல் செய்திருக்கிறீர்கள்? உங்களுடையது பொதுநல மனுவா? அல்லது பொதுநலனுக்கு எதிரான மனுவா?‘ என்ற கேள்வி எழுப்பினார். நோயாளிகளுக்காக கட்டப்படும் மருத்துவமனைக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததற்கு அதிருப்தி தெரிவித்து, ஆட்டோமொபைல் மெக்கானிக் சையது கமருத்தீனுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து அதை நான்கு வாரத்துக்குள் செலுத்துமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024