Monday, March 13, 2017


101 சேவையை போல் இன்று முதல் அறிமுகமாகுது 102:பிரசவித்த தாயை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம்!!!
மதுரை அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களை இலவசமாக வீட்டிற்கு அழைத்துச் செல்லும் மத்திய அரசின் 'ஜனஜி சிசு சுரக் ஷா கார்யக்ரம்' திட்டம் அமலுக்கு வருகிறது. இந்த வசதியை பெற விரும்புவோர் , '102' என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைக்கலாம்.

தற்போது  சென்னை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் இத்திட்டம் அமலில் உள்ளது. இதுவரை மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தாய்மார்கள் மருத்துவமனைகளில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 2015 -16ம் நிதியாண்டில் இத்திட்டத்தை செயல்படுத்த 82.65 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதற்கான நிதி திருப்பி அனுப்பப்பட்டது.இந்நிலையில் மதுரை மாவட்டம் முழுவதும் 'ரெட் கிராஸ் சொசைட்டி' மூலம் இன்று முதல் இத்திட்டம் அமலாகிறது.
டாக்டர் ஒருவர் கூறியதாவது: ஏற்கனவே, மதுரை அரசு மருத்துவமனை உள்ளிட்ட சில இடங்களில் பிரசவிக்கும் தாய்மார்களை ஆம்புலன்ஸ் மூலம் வீடுகளுக்கு அழைத்துச் செல்லும் திட்டம் அமலிலில் உள்ளது.ஆனால், இங்கு நடக்கும் ஐம்பது பிரசவங்களில் அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே அதனை பயன்படுத்துகின்றனர். ஆம்புலன்சில் ஏறி வீட்டிற்கு செல்வதை கவுரவ குறைச்சலாக நினைப்பதே இதற்கு காரணம்.

ஆனால், 'ரெட் கிராஸ் சொசைட்டி' ஆம்புலன்ஸ் அல்லாத வாகனங்களில் தாய்மார்களை அழைத்துச் செல்வதால் அதற்கு வரவேற்பு கிடைக்கும் வாய்ப்புள்ளது, என்றார்.'ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் கண்ணதாசன் கூறியதாவது:முதல் கட்டமாக தாய்மார்களை அழைத்துச் செல்ல நான்கு வாகனங்கள் பயன்படுத்தப்படும். விரைவில் மேலும் சில வாகனங்கள் வாங்கப்படும்.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தாய்மார்கள் இச்சேவை பெற, '102' என்ற எண்ணை அழைக்க வேண்டும். 'டிஸ்சார்ஜ்'க்கு முன்தினம், தாய்மார்கள் பெயர் பட்டியலை மருத்துவமனை நிர்வாகத்திடம் பெற்று அதன் அடிப்படையில் செயல்படவுள்ளோம், என்றார்.'ஜனஜி சிசு சுரக் ஷா கார்யக்ரம்' திட்டத்தின் கீழ் அரசு சார்பில் ஒரு தாய்மாருக்கு 250 ரூபாய் சொசைட்டிக்கு வழங்கப்படுகிறது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தாய்மார்கள் வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுவர்.வீட்டிற்கு சென்ற சில தினங்களில் தாய்மார் அல்லது குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால் அவர்களை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் இச்சேவையை பயன்படுத்தலாம்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024