ஜே.என்.யூ மாணவர் முத்துக்கிருஷ்ணன் கொலையா?
ரோகித் வெமூலா, செந்தில்குமார் வரிசையில் ஜே.என்.யூ மாணவர் முத்துக்கிருஷ்ணன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பல்கலைக்கழகம் சார்பாக அவருக்குக் கொடுக்கப்பட்ட மறைமுக நெருக்கடியே முத்துக்கிருஷ்ணன் மரணத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று பல்கலைக்கழக மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை ஆய்வியல் மாணவர் முத்துக்கிருஷ்ணன். இவர், சேலத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் -அலமேலு தம்பதியினரின் மகன். தலித் சமூகத்தில் இருந்து வந்தவரான இவர், பொருளாதார நெருக்கடி இருந்தபோதும் படிப்பைப் பாதியில் நிறுத்தாமல் தொடர்ந்து போராடி படித்துவந்துள்ளார்.இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பை சேலம் கல்லூரியிலும், தொடர்ந்து ஆய்வியல் கல்வியை ஐதராபாத் பல்கலையில் சேர்ந்து படித்துள்ளார்.சில காலம் அங்கு படித்தவர் பின்னர் ஜே என் யூ வில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது அவருடைய கனவாக இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழத்தில் ஆய்வியல் படிப்பில் சேருவதற்கு நுழைவுத்தேர்வை எழுதியவர் அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.
தீவிர போராளி அவர்!
பின்னர், பல்கலைக்கழகத்தில் தன்னுடைய ஆய்வைத் தொடர்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியே முத்துக்கிருஷ்ணனின் நண்பர்கள் தங்கியிருந்த அறையில் 13.3.2017 அன்று அவர் தூக்கில் தொங்கியவாறு கிடந்துள்ளார். அவருடைய இந்த மர்ம மரணம் தொடர்பாக ஜே.என்.யூ தமிழ்த்துறை முது முனைவர் பட்டய ஆய்வாளர் மாணவர் ஞானமணியிடம் பேசியபோது, ''இது, மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. அவர், கோழையான மாணவர் இல்லை. நல்ல படிப்பாளி. அவருடைய மரணத்துக்கான முழுமையான காரணம் இன்னும் சரியாகத் தெரியவில்லை. கடந்த இரண்டு நாட்களாக சோர்வாக இருந்துள்ளார். அதனைத் தொடர்ந்து 13-ம் தேதி தமிழ் மாணவர்களை சந்தித்துப் பேசியுள்ளார். பின்னர் கேம்பஸை விட்டு வெளியே வந்தவர் அவருடைய நண்பர்கள் அறைக்குள் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர், நெடுநேரம் ஆகியும் வெளியே வரவில்லை என்பதால் கதவை உடைத்துப் பார்த்துள்ளனர். அப்போது தூக்கில் தொங்கியவாறு கிடந்துள்ளார்.
கொலையாக இருக்கலாம்!
தம்பி தற்கொலை செய்துகொண்டிருக்க வாய்ப்பில்லை.அது தொடர்பான புகைப்படம் ஒன்று கிடைத்துள்ளது. அதில், அவனுடைய கால்கள் தரையில் பதிந்துள்ளன. தூக்கில் தொங்கும்போது தரையில் கால்கள் விழுந்தால் அவரால் எழுந்து நிற்க முடியும். அதனால் இது கொலையாக இருக்கும் என்று சந்தேகிக்கிறோம். மேலும், அவர் தற்கொலை செய்திருந்தாலும் அதற்கான காரணங்கள் இதுவாகத்தான் இருக்கும் என்று எண்ணுகிறோம். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது ரோகித் வெமூலாவின் நெருங்கிய நண்பராக இருந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவர், ரோகித் வெமூலா உயிரிழந்தபோது அவருடைய மரணத்துக்கு நீதி கேட்டு தீவிர போராட்டக் களத்தில் குதித்தவர்.மாணவர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் முதல் ஆளாக நிற்கக் கூடியவர். இந்தநிலையில் இந்த ஜே.என்.யூ-வுக்கு வந்தவர், இங்குள்ள பாபா ஷாகிப் அம்பேத்கர் அமைப்பிலும் தன்னை இணைத்துக்கொண்டு சாதிக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பல்கலைக்கழகத்தில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவர் நஜித் என்பவர் காணாமல் போனபோது, அவரை மீட்கக்கோரி நடந்த போராட்டத்திலும் பங்கேற்றார்.மாணவர்களுக்கு எதிராக என்ன நடந்தாலும் அதில் பங்கேற்று தனது எதிர்ப்பைத் தெரிவிக்கக்கூடியவர்.அந்த வகையில் அவரை ஒடுக்குவதற்கு வேறு சில மாணவ அமைப்புகளும் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகமும் மறைமுக நெருக்கடி கொடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.
பல்கலையின் விதிமுறைதான் கொலை செய்ததா?
அதேபோன்று கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புதிய விதிமுறையைப் பல்கலைக்கழகம் கொண்டு வந்துள்ளது.அதில், பிராஜெக்ட்டுக்கு (project) தனி மதிப்பெண்ணும்,வைவாவுக்குத் தனி மதிப்பெண்ணும் என்று இருந்த முறையை மாற்றியது.அதில் பிராஜெக்ட், வைவா இரண்டையும் இணைத்து...வைவாவை மட்டும் வைத்து மதிப்பெண் வழங்குவதற்கு பல்கலைக்கழக ஆய்வுக்குழு (university research council) முடிவு செய்துள்ளது. எதற்காக இந்த முறையைக் கொண்டு வந்தார்கள் என்றால், போராட்டத்தில் இறங்கும் மாணவர்களை ஒடுக்குவதற்காகக் கொண்டு வந்துள்ளதாக சொல்கின்றனர்.எவ்வளவு சிறப்பாகப் படித்தாலும் பேராசிரியர் நினைத்தால் அந்த மாணவனைத் தோல்வியடையச் செய்ய முடியும் என்பதாலேயே இந்த முறையைக் கொண்டு வந்துள்ளதாகக் கூறுகிறார்கள்.அது மட்டுமன்றி பல்கலைக்கழக மானியக் குழு அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அதில் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் எனத் தனித்தனியாக ஒரு குறிப்பிட்ட அளவிலான மாணவர்களை மட்டுமே (guide ) ஆய்வு மாணவர்களாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. அப்படிப் பார்த்தால் புதிதாக மாணவர்களை எடுக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும். இது மாணவர்களுக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் இந்த முறையைக் கைவிடக்கோரி ஜே.என்.யூ-வில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.இதில் கலந்துகொண்டார் முத்துக்கிருஷ்ணன்.இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களில் 45 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.அதன் காரணமாக அவர் மறைமுகமாக மிரட்டப்பட்டிருக்கலாம்.அல்லது அவரை அவமானப்படுத்தியிருக்கலாம்.அதன் காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பாரா என்று சந்தேகிக்கிறோம்.எய்மஸ் மருத்துவமனையில் ஆனதைப்போன்று கொண்டுவந்து போட்டுவிட்டுப் போய்விட்டார்கள். தம்பியின் போராட்டக் குரல் ஒடுங்கி உயிரற்ற சடலமாகப் பார்க்க வேதனையாக இருக்கிறது'' என்றார் கண்ணீருடன்.
என் மகன் கோழை அல்ல!
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முத்துக்கிருஷ்ணனின் தந்தை ஜீவானந்தம், ''தற்கொலை செய்துகொள்கிற அளவுக்கு என் மகன் கோழை அல்ல... ஆரம்பகாலத்தில் இருந்தே, அவன் மாணவர்கள் போராட்டத்தில் பங்கெடுத்தவன். இதுபோன்ற முடிவை ஒருபோதும் எடுத்திருக்க மாட்டான்'' என்றார், துக்கம் தாங்காமல்.
மாணவனின் மர்ம மரணம் குறித்து தொடர்ந்து தகவல் கொடுத்துவந்த சமூக ஆர்வலர் எவிடன்ஸ் கதிரிடம் பேசினோம். ''தலித் சமூகத்திலிருந்து வந்த மாணவர் என்பதால், அவர்மீது சாதியரீதியிலான தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். ரஜினி நடித்த 'கபாலி' படத்தில் வரும் வசனங்களைத் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.அப்படிப் பார்க்கும்போது தலித் என்ற சாதிய தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கலாம். மேலும், சடலமாக முத்துக்கிருஷ்ணன் கிடந்தபோது... அங்குவந்த போலீஸார், உடலைப் பார்த்துவிட்டு... 'இது தற்கொலை' என்று அழுத்தமாகக் கூறியுள்ளனர். தற்கொலை என்று சொல்ல அவர்கள் என்ன மருத்துவர்களா? அப்படியே இருந்தாலும்கூட பிரேதப் பரிசோதனை முடிவுக்குப் பிறகே மரணம் எந்த முறையில் நிகழ்ந்துள்ளது என்று சொல்ல முடியும்.மேலும் மாணவர் இறந்த விவரத்தைப் பதிவாளருக்குத் தெரிவித்தும், அவர் அந்த இடத்துக்குச் செல்லவில்லை. மாணவரின் இறப்புச் செய்தியைப் பெற்றோருக்கு அங்கிருந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழகம் சார்பில் யாரும் இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் செல்லவில்லை. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது முத்துக்கிருஷ்ணன் மரணத்தில் சந்தேகம் உள்ளது.அவருடைய மரணத்துக்கு நீதி கிடைக்கும்வரை போராடுவோம்'' என்றார்.
-கே.புவனேஸ்வரி
No comments:
Post a Comment