ஃப்ரீவைஃபை முதல் ஹாட்ஸ்பாட் வரை... போட்டியை சமாளிக்க ஓலா-வின் புது வியூகம்!
வாடகைக் கார் தொழிலைப் பொறுத்தவரை இந்தியா மிகப்பெரிய சந்தையைக் கொண்ட நாடு. 2020-ம் ஆண்டில் இந்தச் சந்தையின் மதிப்பு 700 கோடி அமெரிக்க டாலர் கொண்டதாக இருக்கும் என சாப்ட்பேங்க் மதிப்பிடுகிறது. ஓலா, உபெர் போன்ற பெரிய நிறுவனங்களில் தொடங்கி, சின்னஞ்சிறிய நிறுவனங்கள் வரை ஒவ்வொரு நகரத்திலும் சந்தையைப் பிடிக்கப் போராடி வருகின்றன. இந்தப் போட்டியைச் சமாளிக்க ஒவ்வொரு நிறுவனமும் அதிரடி சலுகைகளையும் வசதிகளையும் வழங்கிவருகின்றன. ஆனால் இவை மட்டும் போதாது என தொழில்நுட்ப உதவிகளோடு களம் இறங்கியிருக்கிறது ஓலா கேப்ஸ் நிறுவனம்.
2010-ம் வருடம் பவிஷ் அகர்வால் என்பவரால் மும்பையில் தொடங்கப்பட்ட ஓலா கேப்ஸ் நிறுவனம், தற்போது பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஓலா அப்ளிகேஷன் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 1,50,000 புக்கிங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியாவில் உள்ள வாடகைக் கார் சந்தையில் பெரும்பங்கை தன்வசம் வைத்திருந்த ஓலா கேப்ஸ் நிறுவனத்துக்கு எதிராக, பன்னாட்டு நிறுவனமான உபெர் 2013-ம் ஆண்டு நேரடிப் போட்டியில் குதித்தது. அதன் பின் ஏற்பட்ட பெரும் போட்டியைச் சமாளிக்க ஓலா கேப்ஸ் நிறுவனம் பலவிதமான சலுகைகளை வாரி வழங்கத் தொடங்கியது. ஆனாலும் வாடிக்கையாளர்களைத் தன்வசம் வைத்துக்கொள்வதற்காகத் தற்போது தொழில்நுட்ப உதவியை நாடியிருக்கிறது அந்நிறுவனம்.
இதற்கு முன்பு ஓலா அப்ளிகேஷன் மூலம் ஆன்லைனில் மட்டுமே புக்கிங் செய்ய வாடிக்கையாளர்களை ஊக்கப்படுத்தி வந்தது. ஆனால் தற்போது எஸ்.எம்.எஸ் மூலம், இணையம் இல்லாமலேயே வாடகைக் காரை புக்கிங் செய்யும் வசதியை ஓலா நிறுவனம் அனுமதிக்கிறது.
இதற்கு முன்பு ஓலா அப்ளிகேஷன் மூலம் ஆன்லைனில் மட்டுமே புக்கிங் செய்ய வாடிக்கையாளர்களை ஊக்கப்படுத்தி வந்தது. ஆனால் தற்போது எஸ்.எம்.எஸ் மூலம், இணையம் இல்லாமலேயே வாடகைக் காரை புக்கிங் செய்யும் வசதியை ஓலா நிறுவனம் அனுமதிக்கிறது.
இது தவிர்த்து போட்டியைச் சமாளிக்க இரண்டு முக்கியமான வழிகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறது ஓலா கேப்ஸ் நிறுவனம். அதில் ஒன்று... 'ஹாட்ஸ்பாட்' என்ற ஓலாவின் தனிச்சிறப்பு அம்சம். வாடகைக் கார் எளிதாகக் கிடைக்கும் இடத்தை மேப்பிங் செய்து, அந்த இடத்தை 'ஹாட்ஸ்பாட்' என ஓலா நிறுவனம் குறிப்பிட்டுவிடும். இதன் மூலம் வாடிக்கையாளர்களும் டிரைவர்களும் 'ஹாட்ஸ்பாட்' அருகே செல்ல ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். இருவருக்கும் இது நேர விரயத்தைக் குறைக்கிறது. இது மட்டுமல்லாமல், வாடிக்கையாளர் புக்கிங் மேற்கொள்ளும்போது 'ஹாட்ஸ்பாட்' இடமானது சில மீட்டர் தூரத்தில் இருந்தால் அவர்களை அந்த இடத்துக்கு வரச்சொல்லி அறிவுறுத்தும்படி, ஓலா தனது அப்ளிகேஷனில் சில மாற்றங்களை விரைவில் கொண்டுவரவிருக்கிறது.
இரண்டாவதாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் Ola Play என்ற சேவையை ஓலா நிறுவனம் தொடங்கியது. இதன் மூலம் காரின் பின் சீட்டில் அமர்ந்தபடி, காரில் உள்ள ஆண்ட்ராய்டு டேப்பில் திரைப்படம், சீரியல், கிரிக்கெட், மியூசிக் மற்றும் வீடியோக்களை வாடிக்கையாளர்கள் கண்டும், கேட்டும் ரசிக்க முடியும். இதற்காக ஆப்பிள் மியூசிக் நிறுவனத்துடனும், சோனி லைவ் நிறுவனத்துடனும் ஓலா ஒப்பந்தம் செய்துள்ளது. நான்கு பக்கமும் உயர்தர ஸ்பீக்கர்கள் பொறுத்தப்பட்டு, ஆண்ட்ராய்டு டேப் வசதி கொண்ட கார்களை வழங்க மஹேந்திரா குரூப் நிறுவனத்தின் உதவியை நாடியிருக்கிறது ஓலா நிறுவனம். பிரைம் சேவையில் செயல்படும் உயர் ரகக் கார்களிலும் விரைவில் இந்த ஓலா ப்ளே வசதி அறிமுகமாகவிருக்கிறது.
மேலும், தற்போது டிரைவர்கள் அனைவரும் புக்கிங் மற்றும் மேப் விவரங்களைப் பார்க்க ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வருகின்றனர். இதை நீக்கி, டிரைவர் இருக்கைக்கு முன்பாகவே ஒரு திரையில் அத்தனை தகவல்களையும் பார்த்துக்கொள்ளும் வசதியை ஏற்படுத்த Qualcomm நிறுவனம் மூலம் மேற்கொள்ளவிருக்கிறது. காரில் வாடிக்கையாளர்கள் நுழைந்தவுடன், காரில் உள்ள வைஃபை வசதியைப் பயன்படுத்தும் வகையில் சில தொழில்நுட்ப மாற்றங்களைச் செய்துவருகிறது.
ஏசியின் அளவைக்கூட இனி வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைலில் இருந்தே தேர்வு செய்துகொள்ளும் அளவுக்கு பல்வேறு தொழில்நுட்ப வசதிகளைச் செய்துகொடுக்க ஓலா நிறுவனம் ஆலோசித்து வருகிறது.
'சந்தையைப் பிடிப்பது எளிது. ஆனால் அதைத் தக்கவைத்துக்கொள்வது மிகவும் கடினம்' என்பது வர்த்தக உலகின் பிரபலமான சொல்வழக்கு. இதைப் புரிந்துகொண்ட ஓலா நிறுவனம், போட்டியைச் சமாளிக்கத் தொழில்நுட்ப உதவிகளோடு களமிறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment