Monday, March 20, 2017

'தினகரனுக்கு எதிராக வியூகம் வகுத்தாரா எடப்பாடி?' - மீனவ கிராமங்களில் அதிர்ச்சி அறிவிப்பு


 
டி.டி.வி.தினகரன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வரும் 23-ம் தேதி மனுத்தாக்கல் செய்ய இருக்கிறார் அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். 'இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதில் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் உறுதியாக உள்ளனர். அதையொட்டியே மீனவர்களுக்கு எதிராக முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தை அடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடக்க இருக்கிறது. அ.தி.மு.க வேட்பாளராக களமிறங்குகிறார் டி.டி.வி.தினகரன். தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க, சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளரை அறிவித்துவிட்டன. ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவும் களத்தில் இருக்கிறார். ஆர்.கே.நகரில் ஏழு முனைப் போட்டி நிலவுவதால், 'வெற்றி யாருக்கு?' என்பதை கணிக்க முடியாத சூழலே உள்ளது. " தொகுதி முழுவதும் அட்டவணை சமூகத்தினரும் மீனவ சமூக மக்களும் அதிகமாக உள்ளனர். இதில், அட்டவணை சமூகத்தினர் 28 சதவீதம் பேர் உள்ளனர். 13 சதவீத அளவுக்கு மீனவ சமுதாய மக்கள் இருக்கின்றனர். இதர சமூகத்து மக்கள் 30 சதவீதம் உள்ளனர். தொகுதியின் வெற்றியைத் தீர்மானிப்பதில் மீனவ மக்களின் பங்கு மிக அதிகம். இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டே அரசியல் கட்சிகள் வியூகங்கள் வகுத்து வருகின்றன" என விவரித்த வடசென்னை அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 
எடப்பாடி பழனிசாமி"கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவ மக்கள் மீது இலங்கை அரசு கடும் தாக்குதலை நடத்திக் கொண்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தைச் சேர்ந்த இளம் மீனவர் பிரிட்ஜோ சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இதனால், கொந்தளித்த மீனவ சமூகத்து மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். மாநில அரசு சார்பில் இலங்கை அரசுக்கு வலுவான கண்டனத்தைத் தெரிவிக்கவில்லை என்ற கோபமும் மீனவ மக்கள் மத்தியில் உள்ளது. பிரிட்ஜோ மறைவுக்குப் பிறகு மீண்டும் கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை அரசு மீண்டும் தாக்குதல் நடவடிக்கையில் இறங்கியது.
இதைக் கண்டிக்க வேண்டிய மாநில அரசோ, 'மீனவர்கள் எல்லை தாண்டிப் போக வேண்டாம்' என அறிவுறுத்துகிறது. இவ்வளவு காலம் இல்லாமல், இப்படியொரு அறிவிப்பு வெளியாகி இருப்பது, மீனவ மக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அறிவிப்புக்கு முக்கியக் காரணமே ஆர்.கே.நகர் தேர்தல்தான்" என்றவர், "அ.தி.மு.கவின் வாக்கு வங்கியில் மிக முக்கியமானது மீனவ மக்களின் வாக்குகள். 'இந்த வாக்குகள் அனைத்தும் தினகரனுக்கு வந்துவிடக் கூடாது' என்பதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு உறுதியாக இருப்பதை சுட்டிக் காட்டும் வகையிலேயே இதுபோன்ற அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றால், முதலமைச்சர் நாற்காலியை நோக்கி அவர் வருவார் என்பதை கொங்கு மண்டல அமைச்சர்கள் நம்புகின்றனர். அதைக் கணக்கில் வைத்துக் கொண்டே இப்படியொரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது" என்றார். 
இதுகுறித்து, அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கத்தைச் சேர்ந்த மீனவர் சின்னத்தம்பி நம்மிடம் பேசும்போது, "ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின்பேரில், நேற்று ஒலிபெருக்கி மூலம் மீனவ கிராமங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 'எல்லை தாண்டிப் போகக் கூடாது; தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தக் கூடாது' என்பதுதான் அறிவிப்பின் சாராம்சம். 1974-ம் ஆண்டு ஒப்பந்தம் ஷரத் 5-ன்படி, பாக் ஜலசந்தியில் இரண்டு நாட்டு மீனவர்களும் மீன் பிடித்துக் கொள்ள உரிமை உண்டு. அதேநேரம், 1976-ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, மன்னார் வளைகுடாவிலும் வங்காள விரிகுடாவிடாவிலும் கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், எது கடல் எல்லை என்பதில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. தமிழக எல்லையையும் தேசிய எல்லையையும் வரையறுப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. கச்சத்தீவை மீட்க வேண்டும் என சட்டசபையில் மூன்றுமுறை தீர்மானம் கொண்டு வந்தவர் ஜெயலலிதா. தற்போது வெளியான அறிவிப்பும் மத்திய அரசின் தூண்டுதலோடுதான் வெளியாகியிருக்கிறது. இதற்கு மாநில அரசு எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. இதுபோன்ற அறிவிப்புகளால் மீனவ மக்கள் மத்தியில் கொந்தளிப்புதான் உருவாகும்" என்றார் ஆதங்கத்தோடு. 
"முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் டி.டி.வி.தினகரனுக்கும் இடையில் சில விவகாரங்களில் கருத்து வேற்றுமைகள் அதிகரித்து வருகின்றன. ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த நேரத்தில், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் பழனிசாமி. தினகரனோ, காங்கிரஸ் கட்சிக்கும் சேர்த்து வாழ்த்து தெரிவித்தார். ஆட்சி அதிகாரத்தை எந்தவித சிரமமும் இல்லாமல் கொண்டு போவதற்கு மத்திய அரசின் தயவு தேவை என்பதில் எடப்பாடி அரசு தெளிவாக இருக்கிறது. ஆட்சியை அவ்வளவு எளிதில் இன்னொருவர் கைக்கு விட்டுக் கொடுக்கவும் இந்த அரசு தயாராக இல்லை. இதையொட்டி மத்திய அரசின் நேரடி நடவடிக்கைதான் மீனவ கிராமங்களில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு. இதனால், மீனவ மக்கள் நிறைந்திருக்கும் ஆர்.கே.நகர் தொகுதியில் பாதிப்பை உண்டாக்கும் என்பதும் மாநில அரசுக்குத் தெரியும். 'தினகரன் வெற்றி பெற்றுவிடக் கூடாது' என்பதற்கான முதல் தொடக்கமாகத்தான் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இனி ஆர்.கே.நகர் முழுக்க சமுதாயரீதியாகவும் தினகரனுக்கு எதிராக, சில வியூகங்கள் வகுக்கப்பட உள்ளன. எந்தச் சூழலிலும் டி.டி.வி பெற்றுவிடக் கூடாது என்பதில் சசிகலாவின் உறவினர்களும் உறுதியாக உள்ளனர்" என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். 
'தேர்தலில் போட்டியிட சசிகலாவின் அனுமதியை தினகரன் வாங்கினாரா?' என மன்னார்குடி சொந்தங்கள் கொந்தளிப்பில் உள்ளனர். தினகரனைத் தோற்கடிக்கவும் அவர்கள் திட்டம் தீட்டி வருகின்றனர். 'இதற்கு எதிராக என்ன வியூகம் வகுக்கப் போகிறார் தினகரன்?' என்ற கேள்வி ஆர்.கே.நகர் நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது. 

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...