Monday, March 20, 2017

அரசு அலுவலகங்களில்
ஜெ., படத்தை அகற்றாதது ஏன்?
பதில் அளிக்க தலைமை செயலர் மறுப்பு

'அரசு அலுவலகங்களில், முன்னாள் முதல்வர் ஜெ., படம் ஏன் அகற்றப்படவில்லை' என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கேட்கப்பட்ட கேள்விக்கு, தலைமை செயலர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.





காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, ரவி என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சில தகவல்கள் அளிக்கக் கோரி, தலைமைச் செயலருக்கு விண்ணப்பித்தார். அவர் கேட்ட கேள்வி எதற்கும், பதில் தரப்படவில்லை.

கேள்விகள் என்ன?

* முதல்வர் பழனிசாமி, பிப்., 20ல், ஐந்து திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். இவை, எந்த நிதியில் இருந்து செயல்படுத்தப்படும்?

* ஜெ., மருத்துவ செலவை, தமிழக அரசு வழங்கியதா; ரத்த உறவுகள், 5.50 கோடி ரூபாய் செலவு செய்ததாக டாக்டர்கள் கூறினர்; அந்த ரத்த உறவுகள் யார்?

* முதல்வர் பழனிசாமி, ஐந்து திட்டங்களுக்கு கையெழுத்திட்ட போது, உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட, ஜெ., படம் இருந்தது. இது, அரசியல் சாசனத்தை மீறும் செயல். இதில், தலைமை செயலராகிய நீங்கள் பங்கேற்றது சட்டப்படி சரியா?

* கலப்பு திருமணம் செய்தோருக்கு, 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை,வேலை வாய்ப்பில் முன்னுரிமை தரும் திட்டம் நடைமுறையில் உள்ளதா?

* சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட, ஜெ., படத்தை அரசு அலுவலகங் களில் இருந்து அகற்றாதது ஏன்?

* பத்து ஆண்டுகளாக, தமிழக அரசுக்கு எந்த வகைகளில், வருமானம் வந்தது; அவை எந்தெந்த வகைகளில் செலவானது? அரசின் கடன் தொகை எவ்வளவு?இவ்வாறு, கேள்விகள் கேட்டிருந்தார்.

இதற்கு, தலைமை செயலர் சார்பில், அரசு சார்பு செயலர் முரளி அளித்துள்ள பதில்:

தங்களின் கேள்விகள் அனைத்தும், சமூக நலம், சத்துணவு திட்டத்துறை, பொதுத்துறை, நிதித்துறை சார்ந்தவை. எனவே, அத்துறையின் பொது தகவல் அலுவலர்களுக்கு நேரடியாக அனுப்பி, தகவல் பெற்றுக்கொள்ளலாம்.
ஜெ., படம் தொடர்பான கேள்விகள், 'தகவல் பெறும் உரிமை சட்டம், 2005, பிரிவு - 2 எப்'ன் கீழ், 'தகவல்' என்ற வரையறைக்குள் பொருந்தவில்லை. எனவே, அது தொடர்பான கேள்விகளை, பரிசீலனை செய்ய இயலவில்லை.

தலைமை செயலகத்தில், பொது தகவல் அலுவலர், மேல்முறையீட்டு அலுவலர்கள் நியமிக்கப்படவில்லை.இவ்வாறு முரளி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரவி கூறியதாவது:

தகவல் அறியும் உரிமை சட்டப்படி, துறை மாற்றி தகவல் கேட்டால், சம்பந்தப்பட்ட துறையின் பொது தகவல் அலுவலருக்கு, கடிதத்தை அனுப்பி, பதில் பெற்றுத்தர வேண்டும். தலைமை செயலர் அவ்வாறு செய்யாமல், மனுதாரரை விண்ணப்பிக்க வேண்டும் என, தெரிவித்துள்ளார்.

ஜெ., குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பின், அவரது படம் அரசு அலுவலகங்களில் இருந்து அகற்றப்பட வேண்டும். அதை செய்ய அரசு தயங்குகிறது. அது தொடர்பான கேள்விகளுக் கும், தலைமை செயலர் பதில் அளிக்க, மறுப்பது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...