இளையராஜா பாடல்கள் போக மீதமுள்ள பாடல்களை வைத்து நிகழ்ச்சியைத் தொடர்வோம்: எஸ்.பி.சரண்
இளையராஜா பாடல்கள் போக மீதமுள்ள பாடல்களை வைத்து நிகழ்ச்சியைத் தொடர்வோம் என எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இருவரும் இணைந்து தமிழ் திரையுலகுக்கு பல்வேறு வரவேற்பைப் பெற்ற பாடல்களைக் கொடுத்த கூட்டணியாகும். தற்போது இக்கூட்டணி பிரிந்துள்ளது உறுதியாகியுள்ளது.
சமீபத்தில் எஸ்.பி.பி திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி, பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். அமெரிக்காவில் நடைபெற்ற சுற்றுப்பயணத்தை முடித்துள்ளார்கள்.
இச்சுற்றுப்பயணம் குறித்து பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பாடகி சித்ரா உள்ளிட்டோருக்கு இளையராஜா தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் முறையான அனுமதியின்றி தன்னுடைய பாடல்களை எப்படி பாடலாம் என்று கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.
இந்த நோட்டீஸ் குறித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி. சரண் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், "எங்களுக்கு நோட்டீஸ் வந்துள்ளதைத் தொடர்ந்து, அதற்கு தகுந்தாற் போன்று நடவடிக்கை எடுத்து வருகிறோம். எஸ்.பி.பி 50 ஆண்டை நோக்கி 6 நாடுகளில் இந்நிகழ்ச்சி நடத்தியுள்ளோம். 7வது நாடாக அமெரிக்காவில் நடத்தியுள்ளோம்.
சான் பிரான்ஸிகோவில் நிகழ்ச்சி நடத்துவதற்கு முன்பு, இசைஞானி இளையராஜா அவர்களின் வக்கீல்கள் மூலமாக எங்களுக்கு நோட்டீஸ் வந்தது. அதில் இந்நிகழ்ச்சி நடந்தால் பெனால்டி வேண்டும் என்ற தகவல் கிடைத்தது. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளோம். தொழில்ரீதியாக இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளார்கள். இந்த நோட்டீஸ் சம்பந்தமாக நான் எதுவும் கருத்து கூற முடியாது.
எஸ்.பி.பி அவர்கள் 50 ஆண்டை கடந்தும் இந்த துறையில் இருப்பதால் தான் இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இளையராஜா சாருக்கு முதல் பாடல் பாடும் முன்பே, அவர் பாடிக் கொண்டு தான் இருக்கிறார். இளையராஜா சார் மட்டுமன்றி பல இசையமைப்பாளர்களுக்கு பாடியுள்ளார்.
1000 படங்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா சார். அதில் சுமார் 2000 பாடல்களை எஸ்.பி.பி பாடியிருப்பார் என வைத்துக் கொள்ளலாம். அந்த 2000 பாடல்கள் போக 38000க்கும் அதிகமான பாடல்களை எஸ்.பி.பி பாடியுள்ளார். அந்த பாடல்களை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த உலகத்திலும் என்னால் இசை நிகழ்ச்சிகள் நடத்த முடியும்.
சட்ட ரீதியாக எந்த ஒரு நடவடிக்கைக்கும் எங்களுக்கு விருப்பமில்லை. நட்பு ரீதியில் அப்பாவும் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என சொல்லியுள்ளார். அதற்காக தான் நாங்களும் அமைதியாக உள்ளோம்.
நாங்கள் யாருமே இளையராஜா சார் தரப்பில் யாரையும் தொடர்பு கொண்டு பேசவில்லை. வக்கீல் நோட்டீஸ் வந்துள்ளதால் நாங்களும் வக்கீல் மூலமாகவே பேசவுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment