Thursday, March 16, 2017

உறுமீன் வரும்வரை...

By ஆசிரியர்  |   Published on : 16th March 2017 01:06 AM 
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில், அதிகம் கவனத்தை ஈர்க்காத மாநிலம் மணிப்பூர். இந்தியாவின் வடகிழக்கு மூலையில் அமைந்திருக்கும் மாநிலம் என்பதால் அது குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. 40 இடங்களைக் கொண்ட கோவாவுக்கு நாம் தரும் முக்கியத்துவத்தை 60 இடங்களைக் கொண்ட மணிப்பூருக்குத் தருவதில்லை என்பதிலிருந்தே நாம் எந்த அளவுக்கு அந்தப் பகுதி மக்களைப் பற்றிக் கவலைப்படுகிறோம் என்பது வெளிப்படுகிறது. இந்தியாவின் ஏனைய பகுதிகளில் தங்களைக் குறித்து யாரும் கவலைப்படுவதில்லை என்பதால்தான் வடகிழக்கு மாநிலங்களில் வாழும் மக்கள் தங்களை இந்தியர்களாகக் கருதுவதில்லை.
கோவாவில் நடந்ததைவிடப் பெரிய அரசியல் சடுகுடு ஆட்டம் மணிப்பூரில்தான் அரங்கேறி இருக்கிறது. 60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவைக்கான தேர்தலில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியால் 28 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. ஆட்சியமைப்பதற்கு இன்னும் மூன்று உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவை என்கிற நிலையில் காங்கிரஸ் இருந்தும்கூட, காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கு பா.ஜ.க.வின் அரசியல் ராஜதந்திரம் மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது.
2002 முதல் தொடர்ந்து 15 ஆண்டுகளாக முதல்வராக இருந்த ஒக்ராம் இபோபி சிங், இந்த முறை தனது செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. கடந்த 2012 தேர்தலில் 60 இடங்களில் 42 இடங்களை வென்று மூன்றில் இரண்டு பங்கு பலத்துடன் மூன்றாவது முறையாக முதல்வரான இபோபி சிங்கின் செல்வாக்குச் சரிவுக்கு முக்கியமான காரணம், கடந்த நவம்பர் மாதம் முதல் தொடர்ந்து நடைபெறும் நாகர்களின் போராட்டமும், பொருளாதாரத் தடையும்தான். மணிப்பூரின் பள்ளத்தாக்குப் பகுதிகளுக்கு எந்தப் பொருளையும் எடுத்துச் செல்லவிடாமல் மலைப்பகுதியில் வாழும் நாகா தீவிரவாதிகள் சாலைகளை எல்லாம் முடக்கிவிட்டிருக்கிறார்கள்.
தேர்தலுக்கு முன்னால் இபோபி சிங் அரசு ஆறு புதிய மாவட்டங்களை அறிவித்தது. இதன்படி, நாகர்கள் அதிகமாக உள்ள பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு எந்தவொரு மாவட்டத்திலும் நாகர்கள் தனிப்பெரும்பான்மை பெற முடியாத சூழலை உருவாக்க முற்பட்டார் அன்றைய முதல்வர் இபோபி சிங். இதை எதிர்த்துத்தான் ஐக்கிய நாகர்கள் குழு போராட்டம் நடத்துகிறது. நாகர்கள் வசிக்கும் பகுதிகளை எல்லாம் இணைத்து ’நாகாலிம்' என்கிற பெரிய மாநிலத்தை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துவரும் நிலையில், அதனால் மணிப்பூரின் பகுதிகள் பிரிக்கப்படக் கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவுதான் மாவட்டங்களைப் பிரிப்பது.
இந்தப் பின்னணியில்தான் மணிப்பூர் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடந்தது. தேர்தல் பிரசாரத்தின்போது, நாகா பிரிவினைவாதிகளுடன் மத்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு இபோபி சிங் சவால் விட்டார். எந்தக் காரணத்துக்காகவும் மணிப்பூர் பிரிக்கப்படாது என்று பிரதமர் வாக்குறுதி அளித்தாரே தவிர, நாகர்களுடனான ஒப்பந்தத்தை வெளிப்படுத்தவில்லை. இதைத் தனக்கு சாதகமாக மாற்ற முயன்றார் இபோபி சிங். ஆனால் முடியவில்லை.
இதுவரையில் பாரதிய ஜனதா கட்சிக்கு எந்தவித அடித்தளமும் இல்லாத மணிப்பூரில், அக்கட்சி 21 இடங்களை வென்றிருப்பது என்பது நினைத்துப் பார்க்க முடியாத வெற்றி. இதன் பின்னணியில், அஸ்ஸாம் மாநிலத்தில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு அடித்தளமிட்ட ஹேமந்த விஸ்வ சர்மாவின் கடுமையான உழைப்பு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
60 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் 21 இடங்களை மட்டுமே பெற்றிருக்கும் பா.ஜ.க. ஆட்சி அமைத்திருக்கிறது. அதிக எண்ணிக்கையுள்ள கட்சியாக இருந்தும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அழைக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டிருக்கிறது. இப்போதைக்கு முதல்வராகப் பதவி ஏற்றிருக்கும் பா.ஜ.க.வின் பீரேன் சிங்கிற்கு 32 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் அது உறுதி செய்யப்பட வேண்டும்.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உறுப்பினராக இருக்கும் நான்கு இடங்களைக் கொண்ட தேசிய மக்கள் கட்சியும், நாகா மக்கள் முன்னணியும், தலா ஓர் இடத்தில் வெற்றி பெற்றிருக்கும் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி, மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், ஒரு சுயேச்சை ஆகியோரின் ஆதரவுடன் பீரேன் சிங் ஆட்சி அமைத்திருக்கிறார்.
எண்ணிக்கை பலத்தை ஏற்படுத்திக்கொண்டு பா.ஜ.க. மணிப்பூரில் ஆட்சி அமைத்திருக்கிறது என்றாலும், ஆட்சியில் தொடர்வது என்பது அவ்வளவு எளிதானதாக இருக்கப் போவதில்லை. பா.ஜ.க. அரசுக்கு நாகா மக்கள் முன்னணி ஆதரவு அளித்திருக்கிறது என்றாலும் நாகாலிம் பிரச்னை எழுமேயானால், பீரேன் சிங் அரசால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய அரசுக்கும் நாகா தீவிரவாத அமைப்புக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயன்றால், அது நிச்சயமாக மணிப்பூர் ஆட்சியை ஆட்டம் காண வைக்கக்கூடும்.
60 பேர் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவையில் அமைச்சரவையின் எண்ணிக்கை முதல்வரையும் சேர்த்து 12 பேர் மட்டுமே என்கிற வரம்பு இருக்கிறது. 11 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கும் பா.ஜ.க.வால் அத்தனை பேரையும் திருப்திப்படுத்தி எத்தனை காலம் ஆட்சியில் தொடர முடியும் என்பது கேள்விக்குறி. ஆட்சி அமைக்க நான்கு உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவைப்படும் முன்னாள் முதல்வர் இபோபி சிங், அதை எதிர்பார்த்துத்தான் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்திருக்கிறார்!

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024