Thursday, March 16, 2017

தேவை வாகனக் கட்டுப்பாடு

By எஸ். ஸ்ரீதுரை  |   Published on : 16th March 2017 01:04 AM   
காலை பத்து மணி. பரபரப்பாக இயங்கும் பிரதான சாலையின் ஓரம் திடீரென முளைத்திருந்தது ஒரு பந்தல்.
இருசக்கர வாகனம் தயாரிக்கும் பிரபல நிறுவனத்தின் கண்கவரும் புதிய வண்டிகள் அங்கே அணிவகுத்திருந்தன. ஒலி பெருக்கியில் சிற்சில சினிமாப் பாடல்கள். இடையிடையே அவ்வண்டிகளின் பெருமைகளைப் பறைசாற்றி, வாங்க வாங்க என்று வரவேற்கும் அழைப்புகள்.
வண்டி வாங்குவதற்குக் கடன் வசதி செய்து தருவதற்காக ஒரு மேசையையும் அதில் ஏகப்பட்ட விண்ணப்பப் படிவங்களுடன் ஓர் ஊழியரையும் அங்கே பார்க்க முடிந்தது. சினிமாக் கதாநாயகர் ஒருவர் அவ்வண்டிகளுடன் காட்சி தரும் விளம்பரப் பதாகைகளும் பளிச்சிட்டுக் கொண்டிருந்தன.
வண்டிகளை ஆர்வத்துடன் பார்வையிட்டவர்களில் இளைஞர்களே அதிகம்.
மாலையில் வீடு திரும்பிய எனது கவனத்தை, எனது பக்கத்து வீட்டு வாசலில் நின்றிருந்த புதிய இருசக்கர வண்டி ஈர்த்தது.
’சின்னப் பையன் ஆசைப்பட்டான் ஸார், சரின்னு வாங்கிக்குடுத்துட்டேன்....' என்று கூறிச் சிரித்தார் எனது பக்கத்து வீட்டுக்காரர். மாடுகள் வைத்துப் பால் கறந்து வியாபாரம் செய்பவர் அவர். இரண்டு மகன்களில் பெரியவனுக்கு சுமாரான சம்பாத்தியத்தில் ஒரு வேலை. இளைய மகன் படிப்பிலும் சுமார். வேலையிலும் இல்லை.
இந்த நிலையில், ஏற்கெனவே ஒரு மொப்பெட்டும், ஒரு ஹீரோ ஹோண்டாவும் வைத்திருக்கும் அந்த எளிய குடும்பத்திற்கு இளைய மகன் ஆசைப்பட்டதால் இன்னொரு பெரும் செலவு, இந்தப் புதிய வண்டி.
அவர்கள் சம்பாத்தியம், அவர்களது செலவு - இருந்தாலும் இது அத்தியாவசியமான செலவுதானா என்பதை வண்டி வாங்கித்தரச் சொன்ன பிள்ளையும் யோசிக்கவில்லை வாங்கிக் கொடுத்த தகப்பனாரும் சிந்திக்கவில்லை.
வண்டி வாங்கிவிட்டால் ஆயிற்றா? பெட்ரோல், (முதல் வருடம் இலவச பராமரிப்பு வாக்குறுதியையும் தாண்டி) ரிப்பேர்-உதிரி பாகங்களுக்கு ஆகும் செலவும் வேறு குடும்பமா செய்யப் போகிறது....
மத்திய தரக் குடும்பத்தில் இப்படி என்றால் - கோடீஸ்வரக் குடும்பத்துப் பிள்ளைகள் இரு சக்கர ரேஸ் வண்டிகளுக்கும், இறக்குமதிக் கார்களுக்கும் ஆசைப்பட்டு விடுகிறார்களும். அந்தஸ்து மிதப்பில் இருக்கும் பெற்றோர்களும் வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள்.
சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் நூறு கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் பறப்பது, மது போதையில் பிளாட்பார வாசிகளின் மேல் ஏற்றுவது என்று பணக்காரப் பிள்ளைகளின் திருவிளையாடல்கள் அவ்வப்போது அரங்கேறுகின்றன. ஊடகங்களில் சிலநாட்கள் பேசப்பட்டு மறக்கவும் படுகின்றன.
முன்பெல்லாம், வீட்டுக்கு ஒரு சைக்கிள் இருந்தாலே பெரிது. பள்ளி - கல்லூரி வயதுப் பிள்ளைகளுக்கென தனியாக ஒரு சைக்கிளை கேட்டால், தேவையும், வசதியுமிருந்தாலும் கூட, உடனடியாக வாங்கிக் கொடுத்துவிட மாட்டார்கள். அப்படியே வாங்கிக் கொடுத்துவிட்டாலும், சைக்கிளைக் கேட்ட தங்கள் மகன்களுக்கு அந்தக் காலப் பெற்றோர்கள் ஒரு நீண்ட உபதேசமே செய்வார்கள்.
இப்போதோ, குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பெட்ரோல்-டீசல் குடிக்கும் இரு சக்கர வாகனங்கள். நிறுத்த இடமில்லாவிட்டாலும் வாடகைக் கொட்டகைகளில் தவமிருக்கும் கார்கள்.
நடுத்தர வர்க்கத்தினரிடம் வண்டி வாங்கப் பணம் இல்லாவிட்டாலும் மாதத்தவணையில் வாங்கக் கடன் வசதி இருக்கிறது. மேல்தட்டு வர்க்கத்திற்கு அந்தக் கவலையும் இல்லை. பிறகென்ன? சாலையில் இடம் கொள்ளாத அளவிற்கு வண்டிகள் பறக்கின்றன.
ஆரவாரம் அற்ற கிராமத்துச் சாலைகளைக்கூட கடப்பதற்கு பயமாக இருக்கிறது. விர்ரென்று விரையும் வண்டிகளில் இடி படாமல் நாம் வீடு வந்து சேர்ந்தாலே போதும் என்றாகி விட்டது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் கிளம்பும் புகையிலோ மூச்சு முட்டுகின்றது.
புவி வெப்பமயமாவதைப் பற்றிப் பேசிக்கொண்டே அந்த வெப்பத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டுவதில் ஆளுக்கு ஒரு வண்டி வாங்கும் எல்லோரும் பங்களிக்கின்றோம்.
வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் ஆளுக்கொரு இருசக்கர அல்லது நான்கு சக்கர வண்டி வாங்குவதில் என்ன தவறு என்று சிலர் சிந்திக்கலாம்.
ஆனால், இந்த பூதாகர வளர்ச்சியின் விளைவாக எண்ணை வளச்சுரண்டலும், சுற்றுச் சூழல் மாசுபடுதலும் உலகெங்கும் நடைபெற்று வருகிறது.
உலகளாவிய எண்ணை வளம் சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டே வருவதாக ஒரு புறம் கூறப்படுகிறது. பெட்ரோல்-டீசலுக்கு மாற்றான எரிசக்தியை இப்போதே தயார் செய்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
இதனை எதிர்கொள்ள, அனைத்து நாடுகளின் அரசுகளும் பொதுமக்களுக்கு வசதியான மற்றும் கட்டுப்படியாகக் கூடிய பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
அப்போதுதான், இருக்கின்ற எண்ணைவளத்தை தொழிற்சாலை உற்பத்தி மற்றும் சரக்குப் போக்குவரத்து போன்றவற்றுக்குப் பயன்படுத்த முடியும். ஆடம்பரமான - அவசியமற்ற தனிநபர் பிரயாணங்களுக்காக எண்ணைவளத்தை வீண் செய்வதைக் குறைக்க முடியும். இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் ஒரு கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
நாடுகளின் தலைமைகள் இதுகுறித்து முடிவெடுப்பதும் நடமுறைப்படுத்துவதும் ஒருபுறம் இருக்கட்டும்.
தேவை இல்லாமல், ஆசை அல்லது ஆடம்பரத்துக்காகப் புதிய வண்டிகள் வாங்குவதை ஒவ்வொரு குடும்பமும் தவிர்க்க வேண்டும்.
ஏனெனில், நம் எதிர்காலச் சந்ததியினர் கரங்களில் கொஞ்சம் எண்ணை வளத்தையும், தூய்மையான சுற்றுச்சூழலையும் ஒப்படைக்கும் கடமை நமக்கு இருக்கிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024