Thursday, March 16, 2017

தோல்விக்கு பொன்விழா ஆண்டு

By டி.எஸ்.ஆர். வேங்கடரமணா  |   Published on : 16th March 2017 01:05 AM  |  
venkadaramana
எதற்கெல்லாமோ பொன்விழா கொண்டாடுகிறார்கள். சென்னை மகாணத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியாக இயங்கி வந்த கட்சி 1967 பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்து இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடையும் பொன்விழா ஆண்டு இது.
ஜனநாயக அரசியலில் ஒரு கட்சி தோற்பதும் மற்றொரு கட்சி ஜெயிப்பதும் தோற்ற கட்சி மீண்டும் ஆட்சியை பிடிப்பதும் சாதாரண நடைமுறை. ஆனால் தோல்வியே சுகமென அரசியலில் நிலைத்திருப்பது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மட்டும்தான்.
உலகிலேயே தேர்தல் மூலமாக ஆட்சியை பிடித்த கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெருமை கேரள மாநில கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்டு.
கேரளத்தில் கம்யூனிஸ்டுகளிடமும் ஆந்திரத்தில் ராமாராவின் தெலுங்கு தேசத்திடமும் கர்நாடகத்தில் ஜனதாதளம் மற்றும் பா.ஜ.க.விடமும், மகாராஷ்டிராவில் சிவசேனையிடமும் ஏன் தம்மாத்தூண்டு பாண்டிச்சேரியில் திராவிட இயக்கங்களிடமும் தோல்வியடைந்த காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடித்தாலும் தமிழ்நாட்டில் ஆட்சி என்ற வார்த்தை தமிழ்நாடு காங்கிரஸுக்கு பிடிக்காத வார்த்தை ஆகி விட்டது. இதற்கு யார் காரணம்?
இத்தனைக்கும் இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு மகத்தானது. இந்தியாவில் தமிழகமும் தமிழகத்தில் அந்தணர்களும் சுதந்திர போராட்டத்திற்கான முன்னோடிகள் என மா.பொ.சி. ’விடுதலைப் போரில் தமிழகம்' என்ற தனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். நாட்டு நலனுக்காக போராடிய கட்சியும் மக்கள் நலனுக்காக உழைத்த தலைவர்களும் மறக்கப்பட்டது ஏன்?
இந்தியா விடுதலை அடைய வேண்டுமானால், பாகிஸ்தான் பிரிய வேண்டும் என்ற அறுவை சிகிச்சையை சொன்ன அறிஞரும் அணுகுண்டுக்கு எதிராக கென்னடியிடமும் மதுவிலக்கு ரத்துக்கு எதிராக கருணாநிதியிடமும் கெஞ்சிய நேர்மையாளருமான ராஜாஜியும், தனது ஓராண்டு மேயர் பதவியில் சென்னையின் பூண்டி நீர் தேக்கத்தை கொண்டு வந்த சத்தியமூர்த்தியும் மகாகவி பாரதியும் ஜாதியின் பெயரால் கொச்சைபடுத்தப்பட்டனர்.
கல்விகண் திறந்த காமராஜரும் தொடர்ந்து ஆண்ட பக்தவச்சலமும் தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டார்கள். மெய்போலுமே, மெய்போலுமே சொல் வளமை உளதால் மெய்போலுமே என்ற அதிவீரராம பாண்டியனின் கருத்தை திராவிட இயக்கங்கள் தங்கள் அழகு தமிழால் மெய்ப்பிக்க 1967-இல் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.
காமராஜின் உழைப்பும் தியாகமும் பக்தவச்சலத்தின் நிர்வாக திறமையும் விழலுக்கு இரைத்த நீராயின. தி.மு.க. ஆட்சியை பிடிக்க, அண்ணாதுரை மறைவுக்கு பிறகு கருணாநிதி கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றினார்.
பிறவி பணக்காரர் பக்தவச்சலத்தை 10 லட்சம் என கொச்சைப்படுத்தி ஆட்சிக்கு வந்த தி.மு.க.வின் சென்னை மாநகராட்சியின் மஸ்டர் ரோல் ஊழல் தொடங்கி கூவத்தில் வழிந்து ஓட, லஞ்சம் பெருகி விட்டது என திருக்கழுகுன்றத்தில் கணக்கு கேட்டு தனிக்கட்சி ஆரம்பித்த எம்.ஜி.ஆருக்கு பின்னால் வந்த ஜெயலலிதாவும், சசிகலாவும் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்தார்கள் என உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு சிறை சென்றது நகைமுரண்.
நல்ல காலம் ஜெயலலிதா உயிரோடு இல்லாததால் மீண்டும் ஒரு பஸ் எரிப்பு சம்பவம் நடக்கவில்லை. இதனால் ஜெயலலிதாவிற்கு இருந்த தொண்டர் செல்வாக்கு சசிகலாவுக்கு இல்லை என்ற உண்மை சோகமானதா, மகிழ்ச்சியானதா என்று புரியவில்லை.
கல்விக்கூடங்களையும், அணைகளையும், தொழிற்சாலைகளையும் அமைத்து மக்கள் நல்வாழ்வுக்கு விளம்பரம் இல்லாமல் காங்கிரஸ் அரசு பாடுபட்டபோது, கக்கூஸ் முதல் வராத வெளிநாட்டு முதலீடு வரை வந்ததாக சொல்லி விழாக்கள் எடுத்த திராவிட இயக்கங்களுக்கு மக்கள் மாறி மாறி வாக்களித்து ஏன்? காங்கிரஸ் உருமாறி உருக்குலைந்து போனதன் காரணம் என்ன?
தமிழ்நாடு காங்கிரஸின் வீழ்ச்சிக்குக் காரணம் காங்கிரஸ் கட்சியை இந்திய அளவில் உச்சத்துக்கு கொண்டு சென்ற இந்திரா காந்தியிடம் துவங்குகிறது. இன்டிகேட், சிண்டிகேட் என பிரித்த காங்கிரஸின் தமிழ்நாட்டு தனிப்பெரும் தலைவராக காமராஜர் இருந்தார்.
ஒரு கல்லூரி மாணவனால் விருதுநகரில் அவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கோவில் அவர் மீண்டெழுந்து வந்தும், அவரை இந்திரா ஒரு எதிர்ப்பு சக்தியாகத்தான் பார்த்தார். காமராஜர் நிஜலிங்கப்பா உட்பட மாநில தலைமைகளை ஜவாஹர்லால் நேரு ஊக்குவிக்க, இந்திரா மாநில தலைமைகள் தன்னுடைய அரசியல் நோக்கங்களுக்கு தடை என கருதினார்.
இந்த நிலையில் தேர்தல் வெற்றி ஒன்றே குறிக்கோளாக கொண்டு 10 எம்.பி. சீட்டுக்காக இந்திராகாந்தி தி.மு.க.வை கூட்டணிக்கு அழைக்க கருணாநிதியும் ’நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக' என தேர்தலில் குதித்து வெற்றி கண்டு சர்க்காரியா கமிஷனை நீர்த்து போக செய்தார்.
இந்திரா மாநிலத் தலைவர்களை கண்டு பயந்ததுபோல் கருணாநிதி எம்.ஜி.ஆர் செல்வாக்கை கண்டு பயந்து தன் மகன் முத்துவை திரைத்துறைக்கு அனுப்பி அது எடுபடாமல் போகவே எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கினார். காமராஜருடன் இந்திரா ஒத்துபோக முடியாமல் போனதும் எம்.ஜி.ஆரின் விஸ்வரூபமும் தமிழக காங்கிரஸ் வளர்ச்சிக்கு தடையானது.
காமராஜர் மறைவுக்கு பிறகு மூப்பனார் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் இந்திரா காங்கிரஸுடன் ஐக்கியமானதும் அவர்களுக்குள் இருந்த அதிகாரப் போட்டி மறையவே இல்லை. இந்திரா - எம்.ஜி.ஆரின் 3:1 பார்முலா படி நாடாளுமன்றத்தில் காங்கிரஸுக்கு 30 சீட்டுகளும் சட்டப்பேரவையில் 60 சீட்டுகளும் என்ற வெற்றி கூட்டணி காங்கிரஸ்காரர்களின் மக்கள் தொடர்பை குறைத்து விட்டது.
கூட்டணியின் மூலமாக காங்கிரஸ்காரர்கள், நோகாமல் நொங்கெடுக்கலாம் என கண்டு கொண்டு வெகுஜன அரசியலை விட்டு விலகி நின்றார்கள். எனக்கு தெரிந்த ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் அவசரம் என்று கேட்டால்கூட ரயில்வேக்கு கடிதம்கூட கொடுக்க மாட்டார். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெட்ரோல் பங்க், கேஸ் உரிமங்கள் வாங்குவதற்கும் வாங்கி கொடுப்பதற்கும் காட்டிய ஆர்வத்தை தொகுதி பிரச்னைகளுக்காக காட்டவில்லை.
காவேரி பிரச்னையிலும் முல்லை பெரியாறு பிரச்னையிலும் மாநில நலன்களுக்காக தமிழர் நலனில் காங்கிரஸ் அக்கறை காட்டவில்லை என்ற பொது கருத்து வலுப்பெற ஆரம்பித்தது.
சுதந்திரத்திற்கு முன்பே தமிழ்நாட்டில் வலுவான அரசியல் இயக்கமாக காங்கிரஸ் காலூன்ற முடியவில்லை. பிரிவு படாத சென்னை மாகாணத்தில் கம்யூனிஸ்டுகள் வலுவாக இருந்தும் அவர்கள் உலக அரசியலை பேசியபடி உள்ளூர் அரசியலை கோட்டை விட்டனர்.
இதை சரியாக பயன்படுத்திய ஆந்திர காங்கிரஸ் பலம் பெற்ற பொழுது உள்ளூர் வேறுபாடுகளால் தமிழ்நாட்டை காங்கிரஸ் கோட்டை விட்டது. எம்.ஜி.ஆருக்கு ஈடாக வலிமையாக இருந்த ராமாராவ் கட்சியை ஆந்திராவில் வீழ்த்த முடிந்த காங்கிரஸ் தொலைநோக்கு பார்வை இல்லாததால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாமல் போனது வரலாற்றுச் சோகம்.
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜா, ஜெ எனப்பிரிந்த அ.தி.மு.க. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு எனப்புரிந்து கொண்டு இணைந்து மீண்டும் ஆட்சியை பிடித்தது. இன்று ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அ.தி.மு.க. மீண்டும் உடைந்துள்ளது. கட்சியை இணைக்க வேண்டுமென்று எண்ணிய ஜானகியின் பெருந்தன்மை இன்றைய குடும்ப அரசியல் மற்றும் அதிகார அரசியல் போட்டியாளர்களுக்கு இல்லாததால் அவர்கள் இணைய வாய்ப்பில்லை.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என ஜெயலலிதா சொன்னது இன்று தி.மு.க.வின் ஸ்டாலினுக்கும் பொருந்தும். அடாவடி அரசியலை மக்கள் வெறுக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு ஸ்டாலின் எடுத்த நடுப்பாதை சரியாகத்தான் போய் கொண்டிருந்தது.
ஆனால் ரகசிய வாக்கெடுப்பு என்ற ஞானப்பழம் தங்களுக்கு கிடைக்காது என்று தெரிந்தும் தி.மு.க.வினர் சட்டப்பேரவையில் செய்த கலாட்டாவால், வெளிப்படை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்கலாம் என்று நினைத்தவர்கள்கூட எடப்பாடியை ஆதரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக ஆகி விட்டது.
எடப்பாடியின் எதிர்ப்பாளர்களான தி.மு.க.வும், காங்கிரஸும் அவையின் உள்ளிருந்து வாக்களித்திருந்தால் 5 ஓட்டுகள் மாறி இருக்கலாம். அத்துடன் தமிழகத்தின் அரசியல் தலையெழுத்தும் மாறி இருக்கும். 50 ஆண்டுகாலமாக தமிழக ஆட்சிக் கட்டிலில் அமர முடியாத காங்கிரஸ் இன்றைய அரசியல் நிகழ்வுகளில் வெறும் பார்வையாளராக மட்டும் இருப்பது மிகப்பெரும் சோகம்.
பேசுவதால் மட்டுமே தலைவராகலாம் என நினைக்கும் இளங்கோவனும், பேசாமலே தலைவராக இருக்கலாம் என நினைக்கும் சிதம்பரமும், பழைய நினைப்புத்தான் பேராண்டி என செயல்படும் திருநாவுக்கரசரும், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என உரைத்த அண்ணாவின் கருத்தை ஒட்டி வெளிப்படையாக தி.மு.க.வை ஆதரிக்கும் பீட்டர் அல்போன்சும் மாநில வெற்றியை விட நாடாளுமன்ற வாய்ப்பு முக்கியம் என தில்லி தலைமையும் நினைக்கும் வரை பொன்விழா அல்ல, 100 ஆண்டு கடந்தாலும் தமிழ்நாட்டு ஆட்சி கட்டில் காங்கிரஸுக்கு இலவு காத்த கிளிதான்.
கட்டுரையாளர்:
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024