Wednesday, March 22, 2017

உ.பி. அரசு அதிகாரிகள் 15 நாள்களுக்குள் சொத்து விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்: யோகி ஆதித்யநாத்
உத்தரப் பிரதேசத்தில் அரசு அதிகாரிகள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை அடுத்த 15 நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச முதல்வராக ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார். அவருடன் 46 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து, அனைத்து அமைச்சர்களும் தங்களது அசையும், அசையா சொத்துகள் குறித்த விவரங்களை அடுத்த 15 நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், அரசு அதிகாரிகளும் தங்களது சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதல்வராகப் பொறுப்பேற்ற பின் யோகி ஆதித்யநாத், அரசு அதிகாரிகளை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.
அப்போது அமைச்சர்கள் மட்டுமல்லாது அரசு அதிகாரிகளும் தங்களது சொத்து விவரங்களை அடுத்த 15 நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார். 
தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சிப் பிரமுகருர் முகமது ஷமி (60) சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக முதல்வர் ஆதித்யநாத், மாநில காவல்துறை தலைவர் ஜாவீத் அகமதுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் போலீஸார் எவ்வித மெத்தனமும் காட்டக்கூடாது என்றும் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு தமது அரசு முன்னுரிமை அளிக்கும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
மேலும், மாநிலத்திலுள்ள 75 மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோரை காணொலிக் காட்சி மூலம் ஜாவீத் அகமது தொடர்புகொண்டு சட்டம்-ஒழுங்கு நிலைமை மற்றும் நிர்வாக ரீதியிலான பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
அமைச்சரவையின் முதல் கூட்டத்தின்போது, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் என்றார் கேசவ் பிரசாத் மௌரியா.
முன்னதாக, அலகாபாத் மாவட்டத்திலுள்ள மவுஆயிமா கிராமத்தின் முன்னாள் ஊராட்சித் தலைவரும், பகுஜன் சமாஜ் கட்சிப் பிரமுகருமான முகமது ஷமி (60) ஞாயிற்றுக்கிழமை இரவு சில மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் இல்லத்தில் யாகம்: இதனிடையே, லக்னௌவிலுள்ள முதல்வருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் கோரக்பூர் மற்றும் அலகாபாதிலிருந்து வந்த 7 புரோகிதர்கள் திங்கள்கிழமை சிறப்புப் பூஜைகளையும், யாகத்தையும் மேற்கொண்டனர்.
எனினும், இந்த இல்லத்தில் யோகி ஆதித்யநாத் குடிபுகவுள்ள நாள் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை.
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024