Tuesday, March 14, 2017

அஞ்சலகத்திலிருந்து வங்கிக்கு சேமிப்பு கணக்கை மாற்றுவது எப்படி?

கே. குருமூர்த்தி

பெரும்பாலும் அஞ்சலக சேமிப்பு கணக்குத் திட்டங்கள் கவரக்கூடியதாக இருந்தாலும் ஆன்லைன் மூலமாக முதலீடு மற்றும் பணப்பரிமாற்றம் செய்வதற்கு வசதிகள் இல்லாததால் சேமிப்புத் திட்டங்களை தொடங்குவது சிரமமாக இருந்து வருகிறது. ஆனால் சில திட்டங்களை அஞ்சலகத்திலிருந்து வங்கிகளுக்கு மாற்றிக் கொள்ள முடியும். சுகன்யா சம்ருதி திட்டம் (எஸ்எஸ்ஏ) அல்லது பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்) திட்டம் போன்றவற்றை அஞ்சலகத்தி லிருந்து வங்கிகளுக்கு மாற்றிக் கொள்ளமுடியும்.

ஏறக்குறைய அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஐசிஐசிஐ, ஆக்ஸிஸ், ஹெச்டிஎப்சி உள்ளிட்ட தனியார் வங்கிகள் சுகன்யா சம்ருதி சேமிப்புத் திட்டத்தை வழங்குகின்றன. அதேபோல் பெரும் பாலான பொதுத்துறை வங்கிகளும் மற்றும் தனியார் வங்கிகளும் பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்) திட்டத்தை வழங்குகின்றன.

மாற்றக்கூடிய வழிமுறைகள்

அஞ்சலகத்தில் நீங்கள் வைத்துள்ள அதே எஸ்எஸ்ஏ மற்றும் பிபிஎப் கணக்கை வங்கிகளுக்கு மாற்றிக் கொள்ள முடியும். இரண்டு திட்டங்களையும் அஞ்சலகத்திலிருந்து வங்கிகளுக்கு மாற்றிக் கொள்ள உங்கள் கைப்பட ஒரு கடிதத்தை நீங்கள் கணக்கு வைத்துள்ள அஞ்சலகத்தில் கொடுக்க வேண்டும். அந்தக் கடிதத்தில் எந்த வங்கிக்கு சேமிப்பு கணக்கை மாற்றப்போகிறீர்கள் என்பது பற்றியும் வங்கி கணக்கு பற்றிய விவரங்களையும் கடிதத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
பொது வருங்கால வைப்பு சேமிப்பு கணக்கை மட்டும் மாற்றுவதற்கு எஸ்பி-10 (பி) என்ற படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். மேலும் எஸ்எஸ்ஏ மற்றும் பிபிஎப் சேமிப்பு கணக்குக்குரிய சேமிப்பு புத்தகத்தை அஞ்சலகத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும். ஒப்படைப்பதற்கு முன் உங்கள் சேமிப்பு கணக்கு புத்தகத்தை ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் முடித்த பின்னர் உங்கள் கணக்கை மாற்றுவதற்குரிய வேலைகளை அஞ்சலகத்தில் தொடங்கு வார்கள். பின்பு உங்கள் சேமிப்பு கணக்குக்குரிய ஆவணங்களை வங்கிகளுக்கு அனுப்பி வைத்து விடுவார்கள். இந்த ஆவணங்கள் வங்கிகளுக்கு சென்றதுமே வங்கியில் புதிய சேமிப்பு கணக்கை தொடங்குவதற்குரிய வழிமுறைகளை தொடங்க வேண்டும். வங்கியில் முதலில் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்குரிய படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

இந்த படிவத்துடன் முகவரி சான்றிதழ், அடையாளச் சான்றிதழ், புகைப்படங்கள் ஆகியவற்றை அளிக்க வேண்டும். சுகன்யா சம்ருதி திட்டத்திற்கு உங்கள் குழந்தையினுடைய பிறப்பு சான்றிதழை கட்டாயமாக அளிக்க வேண்டும். இதையெல்லாம் அளித்து விட்டால் புதிய கணக்கை உடனடி யாக தொடங்கிவிட முடியும். வங்கியிட மிருந்து புதிய சேமிப்பு கணக்கு புத்த கத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்.

ஏன் மாற்ற வேண்டும்?

எஸ்எஸ்ஏ அல்லது பிபிஎப் சேமிப்பு கணக்குகளை அஞ்சலகத்திலிருந்து வங்கிகளுக்கு மாற்றிக் கொண்டால் எளிதாக ஆன்லைன் மூலமாக பணப் பரிமாற்றம் செய்து கொள்ளமுடியும்.மேலும் அஞ்சலகத்தில் ஒவ்வொரு முறை செல்லும் போதும் உங்கள் சேமிப்பு கணக்கு புத்தகத்தை எடுத்துச் சென்று புதுப்பித்துவர வேண்டும். வங்கிகளுக்கு மாற்றிக் கொண்டால் இந்த சிரமம் ஏற்படாது.

ஆன்லைன் மூலமாக உடனடியாக செலுத்தி விட முடியும். உங்களது வரைவோலையை அஞ்சலகத்தில் அளித்தால் அது செயல்முறையாகி உங்கள் கணக்கில் பணம் சேருவதற்கு நேரம் ஆகும். வங்கிகளில் இதுபோன்ற நடைமுறை சிக்கல்களைத் தவிர்க்க முடியும். வங்கிகளில் ஆன்லைன் மூலமாகவே மாதாந்திர அறிக்கைகளை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும்.

எஸ்எஸ்ஏ சேமிப்பு கணக்கையோ அல்லது பிபிஎப் கணக்கையோ அஞ்சலகத்திலிருந்து வங்கிகளுக்கு மாற்றிக் கொள்வதற்கு உங்களுக்கு ஏற்கெனவே வங்கி கணக்கு இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே வங்கி கிளையில் அனைத்து சேமிப்பு கணக்குகள் இருக்கும்பட்சத்தில் பணத்தை பரிமாற்றம் செய்து கொள்வது எளிதாக இருக்கும்.

இந்த சேமிப்பு கணக்குகளை அஞ்சலகத்திலிருந்து வங்கிகளுக்கு மாற்றிக் கொள்வதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பது அஞ்சலகத்தில் எவ்வளவு காலத்தில் நடைமுறைகளை முடிக்கிறார்கள் என்பதை பொறுத்தது. நீங்கள் இரண்டு, மூன்று முறை அஞ்சலத்துக்கு சென்று வர வேண்டி இருக்கும். அதேபோல் வங்கிக்கும் சில முறை சென்று வர வேண்டியிருக்கும். வங்கி கணக்கு தொடங்கிய பின் நீங்கள் ஆன்லைன் மூலமாகவே அனைத்தையும் மேற்கொள்ள முடியும்.

கே. குருமூர்த்தி 
gurumurthy.k@thehindu.co.in

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024