Monday, March 13, 2017

பார்வை குறித்த பார்வை!

By ஆசிரியர்  |   Published on : 11th March 2017 02:12 AM  | 
அண்மையில் நடந்து முடிந்திருக்கும் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும், மகாராஷ்டிரத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போதும், சில இடங்களில் பார்வைத்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகள் சிலர், தங்களது வருத்தத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்திருக்கிறார்கள். தேர்தல் அதிகாரியின் உதவி இல்லாமல் தங்களால் வாக்களிக்க முடியவில்லை என்கிற அவர்களது குற்றச்சாட்டில் நியாயம் இல்லாமல் இல்லை. தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் நிலையில் குரல் மூலம் வாக்களிக்க வகை செய்யப்படவில்லை என்கிற அவர்களின் ஆதங்கம் ஏற்புடையதுதான்.
பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, பொதுவாக எல்லாவிதமான மாற்றுத்திறனாளிகளுக்கும் போதுமான அளவு வசதிகள் செய்து தரப்படுவதில்லை என்பதை மறுக்க முடியாது. மிகவும் பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகளில் செய்து தரப்படும் வசதிகளும் அளிக்கப்படும் வாய்ப்புகளும்கூட இந்திய மாற்றுத்திறனாளிகளுக்குத் தரப்படுவதில்லை என்பதுதான் உண்மை. மாற்றுத்திறனாளிகள் குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது.
மாற்றுத்திறனாளிகளில் மிகவும் பாதிப்புக்கும், பரிதாபத்திற்கும் உள்ளவர்கள் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள்தான். இவர்களால் மற்றவர்கள் உதவி இல்லாமல் இயங்க முடியாது என்பது மிகப்பெரிய வேதனை.
உலகில் உள்ள 3.7 கோடி பார்வைக் குறைவுள்ளவர்களில் 1.5 கோடி பேர் இந்தியாவில்தான் இருக்கிறார்கள். இவர்களில் ஏறத்தாழ 5 லட்சம் பேர் தமிழகத்தில் இருக்கிறார்கள். எண்ணிக்கை அளவில் இத்தனை பேர் இருந்தும்கூட அவர்கள் குறித்த புரிதலும், அவர்களுக்குப் போதிய வாய்ப்பும், உதவியும் அளிக்கப்படுகிறதா என்றால் இல்லை. இன்னும்கூட பல மாநிலங்களில் கண் மருத்துவமனைகள், இலவச கண் சிகிச்சை முகாம்கள் போன்றவை அடித்தட்டு மக்கள் மத்தியில் சென்றடையவில்லை.
பார்வைக் குறைவு என்பது மூன்று தளங்களில் எதிர்கொள்ளப்பட வேண்டும். பார்வைக் குறைவுள்ளவர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு ஏற்ற வசதிகள் செய்து தரப்பட வேண்டும். அவர்களது வசதிக்காக இயற்றப்பட்டிருக்கும் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது, பொது இடங்களில் அவர்களுக்குத் தேவையான வசதிகளை உறுதிப்படுத்துவது ஆகியவை இதில் அடங்கும். அவர்களுக்குத் தரப்பட்டிருக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடுச் சலுகைகள்கூட நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்பது கசப்பான உண்மை.
இரண்டாவதாக, அவர்கள் அனைவரும் கல்வியறிவு பெற்று, தங்களது சொந்தக் காலில் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு வழிகோலப்பட வேண்டும். பிரெய்லி முறை கண்டுபிடிக்கப்பட்டதால், பார்வைக் குறைவு உள்ளவர்கள் கல்வி கற்கவும், கல்வியின் மூலம் பாடத்தைப் புரிந்துகொள்ளவும் முடிகிறது. ஆனால் அந்த வசதி எத்தனை குழந்தைகளுக்குக் கிடைக்கிறது என்று பார்த்தால், மிகவும் குறைவானவர்கள் மட்டுமே பயன்பெறுகிறார்கள்.
இந்தியாவில் 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைக் குறைவுள்ள குழந்தைகள் இருந்தும், அவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளின் எண்ணிக்கை வெறும் 350 மட்டுமே. ஏறத்தாழ 5 லட்சம் பார்வைக் குறைவுள்ள குழந்தைகளுள்ள தமிழகத்தில் பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகள் வெறும் 15 மட்டுமே. பார்வைக் குறைவுள்ள பெரும்பாலான குழந்தைகளுக்குக் கல்வி கற்கவும், பிரெய்லி பயிற்சி பெறவும் வாய்ப்பு இல்லாததால் அவர்கள் இரந்து வாழும் ஈன வாழ்க்கைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பது குறித்து அரசும் சமூகமும் எப்போதாவது கவலைப்பட்டதுண்டா?
பார்வையற்றோருக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதுகூட இல்லை. சமூகப் பாதுகாப்பில்லை. அதுவும் பெண்களாக இருந்தால், அது குறித்து எழுதாமல் விடுவதுதான் மேல். சென்னை சென்ட்ரல் - ஜோலார்பேட்டை ரயில் மார்க்கத்தில் மட்டும் பொருள்கள் விற்று அன்றாடம் வயிற்றைக் கழுவும் பார்வையற்றோர் எண்ணிக்கை 650. சென்னை கடற்கரை - தாம்பரம் மின்தொடர் வண்டியில், படித்துப்பட்டம் பெற்றோர் உள்பட 350 பார்வையற்றோர் பொருள்களை விற்றும் பாட்டுப்பாடிப் பிழைத்தும் வாழ்க்கை நடத்துகிறார்கள்.
மூன்றாவது இன்றியமையாத தேவை, பார்வைக் குறைவு ஏற்படாமல் தடுப்பதும், அப்படி குறைவு ஏற்பட்டவர்களுக்குப் பார்வை கிடைக்க உதவுவதும். இந்தியாவில் உள்ள 75% பார்வைக் குறைவுப் பிரச்னைகளும் தீர்வு காணப்படக் கூடியவைதான். அதற்கு மருந்துகளும் உண்டு. ஆனால் மருத்துவ வசதிதான் இல்லை. போதுமான கண் மருத்துவர்களும் இல்லை.
பார்வைக் குறைவால் பாதிக்கப்பட்டவர்களில் 25% பேர் விழிவெண் படலத்தில் ஏற்படும் குறைவுகளால் பாதிக்கப்பட்டவர்கள். கண் தானம் மூலம் இந்த விழிவெண் படலம் பெறப்படுகிறது. புற்றுநோய், மஞ்சள் காமாலை, நாய்க்கடி இவை மூன்றும் பாதிக்கப்படாதவர்களின் விழிவெளிப் படலத்தை மாற்று சிகிச்சைக்கு பயன்படுத்திக் கண்ணொளி வழங்க முடியும். அதிகரித்த கண் தானமும், விழிவெண் படல மாற்று சிகிச்சையும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக முடியும். இதுகுறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பலர் பார்வை இழந்து தவிக்கிறார்கள்.
நாம் ஒருசில வினாடிகள் கண்ணை மூடிக்கொண்டு இருந்துபார்த்தால், பார்வைக் குறைவானவர்களின் இருண்ட உலகம் எப்படிப்பட்டது என்பது நமக்குப் புரியும். அது புரிந்தால் மட்டும் போதாது, கண்தானம் செய்ய வேண்டும் என்கிற புரிதல் நமக்கெல்லாம் ஏற்பட வேண்டும். பார்வையற்றவர்கள் குறித்து நமது மனக்கண் சற்று திறக்கட்டும்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024