இன்று ஹோலி கொண்டாட்டம்! பாதுகாப்புப் பணியில் 25,000 போலீஸார்
By தில்லி | Published on : 13th March 2017 07:58 AM
ஹோலிப் பண்டிகை கொண்டாட்டங்களையொட்டி, தில்லியில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நகர் முழுவதும் சுமார் 25 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தில்லியில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொண்டாட்டங்களின்போது, அசம்பாதவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க சுமார் 25 ஆயிரம் போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதக் கலவரம், பாலியல் சீண்டல், சமூக விரோத நடவடிக்கைகள் தொடர்பாக வரும் புகார்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும்படி, காவல் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நகரின் முக்கியப் பகுதிகளில் அதிரடிப் படையினரும், ரிசர்வ் போலீஸாரும் பணியில் ஈடுபடவிருக்கின்றனர். நகர் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபவதற்காக சுமார் 1,000 ரோந்து வாகனங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.
ரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சந்தைப் பகுதிகள், விமான நிலையம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு படையினரும், குற்றத் தடுப்பு பிரிவினரும் உச்சகட்ட எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment