நீலகிரிக்கு வந்த வெளியூர்க் கழுகுகள்!
Published on : 06th March 2017 11:12 AM
இந்தியாவில் 9 வகையான கழுகு இனங்கள் வாழ்கின்றன. இவற்றில் தென்னிந்தியாவில் 7 வகைகள் உள்ளன. இதில் தமிழகத்தில் வெண்முதுகு பாறு கழுகு, கருங்கழுத்து பாறு கழுகு, செந்தலை பாறு கழுகு மற்றும் மஞ்சள் முக பாறு கழுகு ஆகிய 4 வகையான கழுகுகள் உள்ளன.
இந்நிலையில் கடந்தாண்டில் நீலகிரிக்கு சிறப்பு விருந்தாளிகளாக இமாலயன் கிரிபான் கழுகும், எகிப்தியன் கழுகும் வந்திருந்தன. இவற்றைத் தொடர்ந்து அண்மையில் சினேரியஸ் வகையான கழுகு ஒன்றும் மாயார் வனப்பகுதிக்கு வந்திருந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நீலகிரியில் கழுகுகளைக் குறித்து ஆய்வு நடத்தி வரும் அருளகம் அமைப்பின் செயலர் எஸ்.பாரதிதாசன் நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல்களாவன:
"இமயமலைப் பகுதியில் சுமார் 10,000 அடிக்கும் மேலான உயரத்தில் ஊசி இலை மரங்களில் கூடமைத்து இனப்பெருக்கம் செய்து சுற்றித் திரியும் சினேரியஸ் வகை கழுகு நடப்பாண்டில் நீலகிரி மாவட்டத்தில் மாயார் வனப்பகுதிக்கு வந்தது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்கழுகு கருப்பு நிறத்தில் இருந்தாலும் அதன் கழுத்து மற்றும் கால் ஆகியவை கருநீலத்தில் இருக்கும். அதனால் இவை கருங்கழுகு எனவும் அழைக்கப்படும். கழுகுகளிலேயே பெரிய உடல்வாகு கொண்டது இந்த கழுகு இனம்தான் என்றால் மிகையாகாது.
"இமயமலைப் பகுதியில் சுமார் 10,000 அடிக்கும் மேலான உயரத்தில் ஊசி இலை மரங்களில் கூடமைத்து இனப்பெருக்கம் செய்து சுற்றித் திரியும் சினேரியஸ் வகை கழுகு நடப்பாண்டில் நீலகிரி மாவட்டத்தில் மாயார் வனப்பகுதிக்கு வந்தது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்கழுகு கருப்பு நிறத்தில் இருந்தாலும் அதன் கழுத்து மற்றும் கால் ஆகியவை கருநீலத்தில் இருக்கும். அதனால் இவை கருங்கழுகு எனவும் அழைக்கப்படும். கழுகுகளிலேயே பெரிய உடல்வாகு கொண்டது இந்த கழுகு இனம்தான் என்றால் மிகையாகாது.
இந்த வகை கழுகுகள் உயரே பறக்கும்போது ஏற்படும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் வகையில் அதன் ரத்தத்தில் சிறப்பு வகையான ஹீமோகுளோபினை உருவாக்கிக் கொள்ளும் இயல்புடையதாகும். அழிவின் விளிம்பிலுள்ள இப்பறவை வட இந்தியாவில் பரவலாகவும், தென்னிந்தியாவில் அவ்வப்போதும் தென்படுகிறது.
மேலும் இப்பறவை பெரிய உடல்வாகைக் கொண்டிருப்பதால் தனியாகவே இரை தேடும் இயல்புடையதெனவும், இறந்த விலங்குகளையும், செத்த மீன்களையும் உண்ணும் இப்பறவை சில சமயங்களில் எலி உள்ளிட்ட சிறு கொறி விலங்குகளையும், ஆமை மற்றும் முயல் உள்ளிட்ட சிறு விலங்குகளையும் கூட வேட்டையாடி உண்ணும் திறன் படைத்ததாகவும் இருக்கிறது'' என்றார்.
கழுகுகள் குறித்து நீலகிரியில் ஆராய்ச்சி நடத்திவரும் உதகை அரசு கலைக்கல்லூரி மாணவரான சாம்சன், ""கடந்த ஆண்டில் இமாலயன் கிரிபான் ரக கழுகும், எகிப்தியன் கழுகும் மாயார் வனப்பகுதிக்கு வந்திருந்த சூழலில் நடப்பாண்டில் சினேரியஸ் வகை கழுகும் வந்திருந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக கழுகுகள் 37 வயது வரையிலும் உயிர்வாழக் கூடியவை என்பது அண்மைக்கால ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. இதில் 5 வயதிற்கு மேற்பட்ட கழுகுகளே வளர்ந்த கழுகுகள் என அழைக்கப்படும். ஓரிடத்திலிருந்து வேறு புதிய இடத்திற்கு வளர்ந்த கழுகுகள் வருவதில்லை. இளம் கழுகுகளே வந்து செல்கின்றன. முதலில் இவை அந்த பகுதிக்கு தனியாக வந்து தங்களது வாழ்க்கைச் சூழலுக்கு அந்த இடம் ஏற்றதா? என்பதை உறுதி செய்து விட்டு திரும்பிச் சென்ற பின்னர் அடுத்த முறை வரும்போது கூட்டத்தோடு வந்து செல்லும் இயல்புடையவையாகும்.
தற்போது நீலகிரியில் காணப்பட்ட சினேரியஸ் கழுகு இங்கு வருவது இதுவே முதன்முறை எனலாம். இதற்கு முன்னர் இந்த வகை கழுகுகள் கடந்த 2008 - ஆம் ஆண்டு கோடியக்கரையிலும், 1987 - ஆம் ஆண்டு புதுவையிலும் மட்டும்தான் பார்த்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உணவு, வாழ்விடச் சுருக்கம், பொதுமக்களால் இடையூறு மற்றும் இனப்பெருக்கம் ஆகியவையே கழுகுகள் இடம் மாறி செல்வதற்கான காரணங்களாகும். தற்போதைய சூழலில் இமயமலைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றமும், உணவுத் தட்டுப்பாடும்கூட இவை வந்து செல்வதற்கான காரணமாக இருக்கலாம்'' என்றார்.
ஓரிடத்தில் கழுகுகள் அதிக அளவில் உள்ளது என்றால், அங்கு அவற்றிற்கான உணவுச் சங்கிலி சிறப்பாக இருப்பதாகவே பொருள் கொள்ளலாம். புலிகள் அதிக அளவில் இருக்க வேண்டுமெனில் அவற்றின் உணவுத் தேவையைத் தீர்க்கும் வகையில் மான்களும் அதிக அளவில் இருக்க வேண்டும். அதன் எச்சங்கள்தாம் இக்கழுகுகளுக்கு உணவாகும். அதனால் அத்தகைய கணக்கின்படி பிணந்தின்னிக் கழுகுகள் நீலகிரி வனப்பகுதிகளுக்கு அதிக அளவில் வந்து செல்வது இப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கையும் திடகாத்திரமாகவே இருப்பதாகக் கொள்ளலாம்.
- ஏ.பேட்ரிக்
- ஏ.பேட்ரிக்
No comments:
Post a Comment