Monday, March 13, 2017

அச்சமூட்டும் தனியார் வங்கிகள்

By வாதூலன்  |   Published on : 13th March 2017 01:54 AM  |  
அண்மையில் எல்லா நாளேடுகளிலும் வெளியான ஓர் அறிவிப்பு வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. ஆக்ஸிஸ், எச்.டி.எப்.சி. போன்ற தனியார் வங்கிகளில் மாதம் நான்கு முறைக்கு மேல் தொகையைப் பணமாகச் செலுத்தினால் அதற்கு தனியாக ரூ.150 கட்டணமாக வசூலிக்கப்படும் என்பதே அச்செய்தி.
மேற்கத்திய, குறிப்பாக அமெரிக்க கலாசாரம் இந்தியாவில் மெல்ல மெல்ல பரவி வருகிறது என்பதற்கான அடையாளங்கள்தான் இத்தகைய விதிமுறைகள். வாடிக்கையாளர்கள் ஏற்கெனவே இவற்றை ஓரளவுக்கு அனுபவித்து வருகிறார்கள்.
எடுத்துக்காட்டாக, முன்பெல்லாம் மூன்று வருடத்துக்கும் மேலாக ஒரு தொகையை அரசு வங்கியில் வைப்புத் தொகையாக போட்டால், வட்டி கூடுதலாக கிடைக்கும். இப்போது நிலைமை தலைகீழ். அதிகமான காலக்கெடுவில் வைப்பு செய்தால் வட்டி குறைவு.
இதேமாதிரி பற்று அட்டைகளை இலவசமென்று சொல்லி பல வங்கிகள் வாடிக்கையாளர்களை ஈர்த்தன. இப்போது அதற்கும் வருடாந்திரக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடன் அட்டை வாங்கினால் பரிசுகள் உண்டு என்று பொத்தாம் பொதுவாக தெரிவித்து பலரை அந்த வலையில் சிக்க வைக்கிறார்கள்.
பண மதிப்புக் குறைவால் வங்கிகளில் வைப்புகள் குவியத் தொடங்கி விட்டன. அதனால் வட்டிக்கு செலவு (வட்டி சுமை) கூடுதலாகிவிடட்து. சிறு, குறு, பெரிய தொழிலதிபரை தேர்ந்தெடுத்து கோடிக்கணக்கில் கடன் வழங்கினால் நல்ல லாபம் ஈட்ட இயலும்.
ஆனால் அதற்கேற்ப தொழில்நுட்ப அதிகாரிகள் இல்லை. எனவே எளிதாக தரக்கூடிய வாகனக்கடன், வீட்டுக்கடன் போன்றவற்றையே வழங்குகிறார்கள். இதன்மூலம் கிடைக்கற வருமானமும் குறைவுதான்.
மேற்சொன்ன நடவடிக்கைகளினால் பல நடுத்தர - உயர் மட்டக் குடும்பத்தினர் கடனாளி ஆகிவிட்டார்கள் என்ற ஒரு கருத்து நிலவி வருகிறது.
நல்ல காலமாக தனிநபர் வருமானமும் ஓரளவு உயர்வதால், கடனைத் திருப்பிச் செலுத்துகிறார்கள். அரிதாக கடன் தவணை செலுத்த இயலாதவர் சிலர் வீட்டையோ வாகனத்தையோ விற்று, கடனை முடித்து விடுகிறார்கள். எப்போதாவது சில தருணங்களில் தனியார் வங்கிகள் குண்டர்களை அனுப்பி வாடிக்கையாளரிடம் கடன் அட்டைக்குத் தர வேண்டிய தொகையை வசூல் செய்கிறார்கள். இதுதான் இங்குள்ள நிலைமை.
ஆனால் மேலை நாட்டில்? பிரபல எழுத்தாளர் ஒருவர் அங்கு நிலவும் நிலைமையை விவரித்திருக்கிறார். "அந்த நாடு (யு.எஸ்.ஏ.) உங்கள் மேல் படரும் நாடு. ஒரு ஆக்டோபஸ் அல்லது மலைப்பாம்பின் இறுக்கம்போல உங்களை விடாது.
அதன் கிரெடிட் கார்ட் சமூகத்தில் உங்களை மூன்றாவது தலைமுறை வரை கடன் வாங்க வைத்துவிடுவார்கள். மீளவே முடியாத கடன் சொர்க்கம் அது'.
இந்தியாவில் நிலைமை வேறு. இங்கு 40 சதவீதத்துக்கு மேல் எழுத்தறிவு இல்லாதவர்கள். பண மதிப்பு குறைவினால், ஓரளவுக்கு பற்று அட்டையை பயன்படுத்தினாலும், பெரும்பாலோர் ரொக்க பரிவர்த்தனைக்குத்தான் முதலிடம் கொடுக்கிறார்கள். மேலும், இங்கு அவ்வப்போது அந்தக் கருவிகள் வேலை செய்வதில்லை.
மேலை நாடுகள்போல, "சம்பாதி, செலவழி' என்ற மனோபாவம் இங்கு நுழையவில்லை. சேமிக்கும் பழக்கம் மக்களின் ரத்தத்தில் இயற்கையிலேயே ஊறியிருக்கிறது. பள்ளிக் கட்டணம் (இரண்டாம் வகுப்புக்கு வருடம் ரூ.40,000-க்கு மேல்), பயணம், திடீரென்று வரும் விசேஷங்கள், எதிர்பாராத மருத்துவச் செலவு - இவை யாவையும் ஈடுகட்ட சேமிப்புக் கணக்குத்தான் உதவுகிறது.
மாதா மாதம் கட்டுகிற ஆர்.டி-யோ, பிரபல சீட்டு நிறுவனத்தில் சேர்ந்து செலுத்துகிற தொகையோ நம் அவசரத்துக்கு உதவாது.
தபால் அலுவலகத்தில் சேமிப்பிலிருந்து பணம் எடுப்பதில் சிக்கல் உள்ளது. வாடிக்கையாளர் நேரில் போக வேண்டும். மேலும், கையெழுத்தில் ஒரு சின்ன வித்தியாசம் இருந்தாலும் திருப்பி விடுவார்கள். வங்கியில், பல்வேறு காரணங்களுக்காக செல்ல வேண்டிய சந்தர்ப்பம் நேருவதால் கையெழுத்து வெகுவாக மாறுபட்டாலன்றி ஏதும் கூறமாட்டார்கள்.
எனவேதான் கிராமப்புறத்திலும் சரி, நகரங்களிலும் சரி, அவ்வப்போது கிடைக்கிற உபரித் தொகையை சேமிப்புக் கணக்கில் போடுகிறார்கள். இதற்கு வேட்டு வைக்கிறார்போல் தனியார் வங்கிகள் செயல்படுவது எந்தவிதத்தில் நியாயம்?
"வேறு வழியில்லை சார்! காலம் மாறி வருகிறது. பாதுகாப்பு பெட்டகத்துக்கு கட்டணம் செலுத்துவதுபோல், வங்கியில் செலுத்துகிற டெபாஸிட்டுக்கும் கட்டணம் செலுத்த வேண்டிய காலம் வரத்தான் போகிறது' என்று சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.
ஆனால், அதுபோல் நடக்க வாய்ப்பு இல்லை. நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பே மக்களின் சேமிப்புதான். அதற்கு உலை வைக்கும் வழிமுறைகளில் மத்திய அரசு இயங்காது என நம்பலாம்.
இப்போதெல்லாம் மக்களைப் பாதிக்கும் எந்த நிகழ்வுக்கும் அவர்கள் தெருவில் நின்று போராட வேண்டியிருக்கிறது. ஆனால், வங்கி வாடிக்கையாளர்களின் நிலைமை "கையறு நிலை'தான்.
1969-க்கு முன் எல்லா வங்கிகளும் தனியார் துறையில் இருந்தபோதும், ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பு மேலோங்கியிருந்தது. இப்போது தனியார் வங்கிகள் தன்னிச்சையாக பல முடிவுகள் எடுக்கின்றன. மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் வாய் மூடி இருக்கின்றன. இந்த நிலைமை மாற வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பு போலிருக்கும் வாடிக்கையாளருக்கு இன்னல் தரக்கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024