நீதிபதியை விமர்சித்தவர்கள், 'சஸ்பெண்ட்' : அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
நவ 16, 2017 22:16
நீதிபதியை விமர்சித்து கருத்து தெரிவித்ததாக, 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். இதனால், மற்ற ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தள்ளனர்.
'நீட்' தேர்வு குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை, செப்டம்பரில், நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். அப்போது, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர். இதுகுறித்து, நீதிபதி சில கருத்துகளை தெரிவித்து, 'மாணவர்கள் பாதிக்கும் வகையில், போராட்டத்தை நடத்தக்கூடாது' என, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். இதை விமர்சித்து, ஆசிரியர்கள் பலர், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட, சமூக வலைதளம், தங்களின் பிரத்யேக இணையதள, 'ப்ளாக்' பக்கங்களில் எழுதினர்.
சிலர், போராட்டங்களின் போது விமர்சித்து பேசினர். சில இடங்களில், துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது. இதுகுறித்து, தகவல் அறிந்த நீதிபதி, மற்றொரு வழக்கு விசாரணையின் போது, நீதிமன்ற உத்தரவை விமர்சித்த ஆசிரியர்களை கண்டித்தார்.
இதையடுத்து, அரசின் உத்தரவுப்படி, நீதிபதியை விமர்சித்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் பட்டியல், போலீஸ் வாயிலாக, அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. இதன்படி, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை, 10 பேர், சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். அவர்களின் பட்டியலை, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ரகசியமாகவைத்துள்ளனர்.
இன்னும் பலர், சஸ்பெண்ட் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, தங்களுக்கும், சஸ்பெண்ட் உத்தரவு வருமோ என, பல ஆசிரியர்கள் அச்சத்தில் உள்ளனர்.
No comments:
Post a Comment