பட்டியலில் சிவகங்கை, தேவகோட்டை நீக்கம் : அரசு ஊழியர் வீட்டு வாடகைப்படி குறைப்பு
Added : நவ 17, 2017 00:36
சிவகங்கை: சிவகங்கை, தேவகோட்டையை கிரேடு '2' நகராட்சிகளின் பட்டியலில் இருந்து நிதித்துறை நீக்கியதால், அரசு ஊழியர், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பணிபுரியும் இடங்களின் அடிப்படையில் வீட்டு வாடகைப்படி நிர்ணயிக்கப்படுகிறது. கிரேடு (1ஏ) ல் சென்னை உள்ளது. சென்னைக்கும், அதனை சுற்றி 32 கி.மீ., க்குள் ஏதேனும் ஊராட்சி ஒன்றியம் இருந்தால், அதற்கும் ஒரே மாதிரியான வீட்டு வாடகைப்படி நிர்ணயிக்கப்படுகிறது. கிரேடு (1பி) ல் கோவை, மதுரையும் உள்ளன. இந்த இரு மாநகராட்சிகளில் இருந்து 16 கி.மீ., சுற்றளவுக்குள் ஏதேனும் ஊராட்சி ஒன்றியம் இருந்தால், அதற்கும் ஒரு மாதிரியான வீட்டு வாடகைப்படி நிர்ணயிக்கப்படுகிறது.
அதேபோல் கிரேடு '2' ல் இடம் பெற்றுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளில் இருந்து 8 கி.மீ., சுற்றளவுக்குள் ஏதேனும் ஊராட்சி ஒன்றியம் இருந்தால், அதற்கும் ஒரே மாதிரியான வீட்டு வாடகைப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிரேடு (3) ல் இடம்பெற்றுள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஒரே மாதிரியான வீட்டு வாடகைப்படி நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் சிவகங்கை, தேவகோட்டை உள்ளிட்ட நகராட்சிகள் கிரேடு '2' ல் இடம் பெற்றிருந்தன. தற்போது எட்டாவது ஊதியக்குழு மாற்றத்தில் அந்த பட்டியலில் இருந்து இரு நகராட்சிகளும் நீக்கப்பட்டுள்ளன. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ஜோசப்சேவியர் கூறுகையில், ''சிவகங்கை, தேவகோட்டை போன்று மாநிலம் முழுவதும் பல நகராட்சிகள் கிரேடு '2' ல் நீக்கப்பட்டுள்ளன.
இதனால் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு அதிகபட்சம் வீட்டுவாடகைப்படி 3,200 ல் இருந்து 2,400 ரூபாயாக குறைந்துள்ளது. இதில் சிவகங்கை மாவட்ட தலைநகராகவும் உள்ளது. இதனை சரிசெய்து அரசாணை வெளியிட வேண்டும்,'' என்றார்.
No comments:
Post a Comment