Monday, January 15, 2018

விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ - சினிமா விமரிசனம்

By சுரேஷ் கண்ணன் | Published on : 13th January 2018 04:22 PM

சமீபத்திய ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். ‘ஓர் இல்லத்தரசி தன் வாழ்நாளில் சுட்ட தோசைகளின் எண்ணிக்கை எத்தனை இருக்கும்?” என்பது போல. இதையே தமிழ் இயக்குநர்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம் போல. இன்னமும் எத்தனை காலத்திற்கு அரைத்த மாவையே அரைத்து அதே தோசையையே திரும்பத் திரும்ப சுடுவார்கள்?

ஓர் ஆச்சரியமான கிளைமாக்ஸ் தவிர்த்து, எளிதில் யூகிக்கக்கூடிய தேய்வழக்கு காட்சிகளுடன் சலிப்பூட்டுகிற இன்னொரு அடிதடி மசாலாதான் ‘ஸ்கெட்ச்’

கார் பைனாஸ் முதலாளியிடம் பணிபுரிபவர் விக்ரம். வட்டி கட்டாத நபர்களின் வாகனங்களைத் திறமையாக ‘ஸ்கெட்ச்’ போட்டுத் தூக்கி வருவதில் விற்பன்னர். ரெளடிகள் மற்றும் காவல்துறையினரின் பகையை ஒருசேரச் சம்பாதித்துக் கொள்கிறார்.

ராயபுரம் குமார் என்கிற பிரபலமான ரெளடியின் ‘ராசி’யான கார், தன்னுடைய முதலாளிக்குச் சொந்தமானது என்கிற பழைய கதையை அறிந்தவுடன் முதலாளி விசுவாசத்துடன் மிகுந்த ஆபத்துக்கிடையில் அதைக் கடத்தி வருகிறார். புதையல் தோண்ட பூதம் கிளம்பிய கதையாக, பிரச்னைகள் அவரைத் தொடர்கின்றன. அவரது நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராகக் கொலை செய்யப்படுகிறார்கள்.

அவர்களைத் தேடி விக்ரம் செல்லும் பயணமே மீதியுள்ள திரைப்படம். பல காட்சிகளில் அடுத்து என்னவாகும் என்பதை எளிதாக யூகிக்க முடிந்தாலும் எவரும் எதிர்பாராத திருப்பத்துடன் திரைக்கதையை அமைத்த இயக்குநருக்கு பாராட்டு. ஆனால் அதற்கான காரணம் போதுமான அளவிற்கான நம்பகத்தன்மையுடன் அமையவில்லை என்பதையும் சொல்லவேண்டும்.

ஜெமினி, பீமா போன்ற படங்களில் கையாண்டுவிட்ட அதே மாதிரியான கரடுமுரடான ரெளடி பாத்திரம் விக்ரமிற்கு. இத்திரைப்படத்தில் அவருக்கு எவ்விதச் சவாலும் இல்லாததால் மிக எளிதாக இடது கையில் தன் பாத்திரத்தை அநாயசமாகக் கையாண்டிருக்கிறார். இத்தனை திறமையான நடிகர், ஏன் இத்தனை பலவீனமான திரைக்கதைகளாகத் தொடர்ந்து தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார் என்கிற ஆதங்கம் தோன்றாமல் இல்லை.

ஆனால் மனிதர் இந்த வயதிலும் இத்தனை சுறுசுறுப்பாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. நாம் நிறைய திரைப்படங்களில் பார்த்து சலித்த காட்சிகள்தான் என்றாலும் ‘நடிகர்’ விக்ரம் ஆங்காங்கே எட்டிப் பார்ப்பது ஆறுதல்.

நாயகியாக தமன்னா.. தமிழ் சினிமாவின் வழக்கமான பாத்திரம். இவரை விடவும் இவரது தோழியாக வருகிற ஸ்ரீபிரியங்கா கவர்கிறார்.

சேட்டு முதலாளியாக ஹரீஷ் பரேடி. எத்தனை திறமையான நடிகர். இவருக்கும் அதிக சவாலான காட்சிகள் இல்லை. ஸ்ரீமன், சூரி, ஆர்.கே.சுரேஷ், வேலராமமூர்த்தி என்று பல நடிகர்கள் இருந்தாலும் ஒருவர் கூட மனதில் தங்கவில்லை. அவரவர்களின் காட்சிகளில் தோன்றி விட்டுச் செல்கிறார்கள்.



இசை எஸ்.தமன். மெதுவாக உருண்டு வந்து கொண்டிருக்கும் ரோடு ரோலரின் இடையே பாறாங்கல்லை வைத்து தடுப்பது போல சோம்பலான காட்சிகளின் இடையே இடையூறாக வந்து எரிச்சலூட்டும் பாடல்கள். சில மெட்டுக்களை ஏற்கெனவே கேட்ட மாதிரியே இருக்கிறது. பின்னணி இசை பரபரப்பாக அமைந்திருப்பது ஆறுதலான விஷயம்.

வடசென்னை என்றாலே ரெளடிகள், சமூக விரோதிகள் நிறைந்திருக்கும், குற்றங்கள் நிகழும் இடம் என்கிற பொதுப்புத்தி சார்ந்த கற்பிதத்தை இந்தப்படமும் கண்மூடித்தனமாக பின்பற்றியிருக்கிறது. ‘சிறார்களை பணியிடங்களில் சேர்ப்பதின் மூலம் இளம் குற்றவாளிகளை உருவாக்காதீர்கள்’ என்று கடைசியில் இயக்குநர் சொல்கிற ‘திடீர்’ உபதேசம் அதுவரையான காட்சிகளுக்கு எவ்விதத்திலும் பொருத்தமில்லாமல் சிரிப்பை வரவழைக்கிறது.

‘ஸ்கெட்ச்’ என்றால் வடசென்னை வழக்கில் பொதுவாக ஒருவரைக் கொலை செய்வதற்காகத் திறமையாக திட்டம் தீட்டுவது.. அப்படியொரு வார்த்தையை கார்களை எடுக்கும் விஷயத்திற்காக அநாவசியமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இத்தனை புத்திசாலித்தனமான நாயகன், தன்னைச் சுற்றியுள்ள ஆபத்தைச் சிறிதளவும் யூகித்திருக்க மாட்டான் என்பதும், இவனுடைய நற்குணத்தை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள் என்பதும் தர்க்கம் இல்லாமல் இடிக்கிறது.

கணினி யுகத்திலும் தீர்ந்து போன ஸ்கெட்ச் பேனாவால் எழுதப்பட்ட பலவீனமான திரைக்கதையை இயக்குநர் விஜய்சந்தரும் நடிகர் விக்ரமும் நம்பியது ஆச்சர்யம்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...