Monday, January 15, 2018

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ – சினிமா விமரிசனம்

By சுரேஷ் கண்ணன் | Published on : 12th January 2018 04:27 PM |

சிபிஐ அதிகாரி பணியைத் தன்னுடைய கனவாக வைத்திருக்கும் ஒருவனுக்கு அத்துறையில் நிகழும் ஊழல் காரணமாக அந்த வாய்ப்பு தரப்படுவதில்லை. எனவே தானே ஒரு போலி அதிகாரியாக மாறுகிறான். ‘ரெய்ட்’ என்கிற பெயரில் ஊழல்வாதிகளிடமிருந்து பணத்தைக் கொள்ளையடித்து நல்லவர்களுக்குத் தருகிறான். ராபின்ஹூட், காக்கிச்சட்டை, ஜென்டில்மேன் போன்ற திரைப்படங்களின் அதே வகை ‘கரு’ தான்.

நீரஜ் பாண்டே இயக்கத்தில் 2013-ல் வெளிவந்த ‘Special 26’ என்கிற ஹிந்திப்படத்தின் தமிழ்வடிவம்தான் இது. ஹிந்தியில் இருந்த நம்பகத்தன்மையும் குற்றத்தின் அழகியலும் தமிழில் பெரும்பான்மையாகச் சிதைந்திருப்பது சோகம்.

சிபிஐ அலுவலகத்தில் கடைநிலை ஊழியராகப் பணிபுரிந்தவர் தம்பிராமையா. அதே அலுவலகத்தில் தன்னுடைய மகன் சூர்யாவை ஓர் அதிகாரியாக்கிப் பார்க்க வேண்டுமென்பது அவருடைய ஆசை. அது நிறைவேறுவதில் ஒரு பெரிய தடை இருக்கிறது. அங்கு உயர் அதிகாரியாக இருக்கும் சுரேஷ் மேனன் வாங்கும் லஞ்சத்தை, தம்பி ராமையா மொட்டைக் கடிதத்தின் மூலம் காட்டிக் கொடுக்க முயல, அதிகாரியால் பழிவாங்கப்பட்டு பணியை இழக்கிறார்.

தன்னுடைய நேர்காணலிலும் அந்த அதிகாரி சிக்கலை ஏற்படுத்துவார் என்று சூர்யா யூகிக்கிறார். நினைத்தபடியே நடக்கிறது. இதே போன்ற ஊழலால் காவல்துறையில் பணி கிடைக்காமல் இறக்கும் தன் நண்பனின் மரணம் வேறு சூர்யாவிற்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது. ஊழலின் காரணமாக தகுதியுள்ளவர்கள் வேலை கிடைக்காமல் அவதிப்படுவதும் தகுதியற்றவர்கள் முன்னேறும் சூழலை எதிர்க்க நினைக்கிறார்.

எனவே சிபிஐ அதிகாரிகளின் அடையாளத்தில் ஒரு போலியான குழுவை அமைத்து ஊழல்களின் மூலம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் செல்வங்களை ரெய்டுகள் மூலம் கைப்பற்றுகிறார். தங்கள் துறையின் பெயரால் நிகழும் தொடர் மோசடிகளைக் கண்டு ஒரிஜினல் சிபிஐ பதறுகிறது. குற்றவாளிகளை மோப்பம் தேடி அலைந்து கிட்டத்தட்ட நெருங்கி விடுகிறது.

இந்நிலையில் தன் கூட இருப்பவர்களுக்காக ஒரு பெரிய அளவிலான கொள்ளையில் ஈடுபட நினைக்கிறார் சூர்யா. அவர்களைச் சுற்றி வளைக்க சிபிஐ தயாராக நிற்கிறது.

பிறகு என்னவானது என்பதை விறுவிறுப்பு குறைவாக சொல்லியிருக்கிறார்கள்.

நச்சினார்க்கினியன் என்கிற அழகான பெயர் சூர்யாவிற்கு. ‘இவர்களுக்கு வயசே ஆகாதோ” என்று நினைக்க வைக்கும் நாயகர்களில் முதன்மையானவராக இவரைச் சொல்லலாம். விசையுறு பந்தினைப் போல திரையெங்கும் பாய்கிறார். படத்தின் துவக்கத்தில் வரும் துள்ளலிசைப் பாடல் உட்பட அனைத்து பாடல்களிலும் ரகளையாக நடனம் புரிகிறார். படத்தின் பெரும்பான்மையான சுமை இவர் மீது இருப்பதால் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார். சிபிஐ அதிகாரியாக இவரது தோரணைகள் கம்பீரம்.

ஏறத்தாழ சூர்யாவிற்கு இணையாகக் கலக்கியிருப்பவர் சுரேஷ் மேனன். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையில் எதிர்நாயகனாக அட்டகாசம் செய்திருக்கிறார். (இயக்குநர் கெளதம் மேனனின் குரல் இவரது பாத்திரத்திற்குப் பெரிய பலம்). ஒரு பக்கம் மிக அநாயசமாகவும் தெனாவெட்டாகவும் தன்னுடைய அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதும், இன்னொரு புறம் மூத்த அதிகாரியிடம் பணிந்து பதறுவதும் என சிறப்பான பங்களிப்பு. ‘உத்தமன்’ என்று இந்தப் பாத்திரத்திற்கு பெயர் சூட்டியிருப்பது குறும்பு.

குறிஞ்சிவேந்தன் என்கிற இன்னொரு அழகான தமிழ் பெயரில் உள்ள பாத்திரம் கார்த்திக். சிபிஐ உயர் அதிகாரி. இவரையும் நீண்ட காலத்திற்குப் பிறகு திரையில் பார்ப்பதால் சற்று ஆச்சரியம் தோன்றுகிறது. அவ்வளவே. ஓய்ந்து போன வயசான கார்த்திக்கைப் பார்க்க சங்கடமாக இருக்கிறது.

ரம்யா கிருஷ்ணன், செந்தில், தம்பி ராமையா, நந்தா, கலையரசன், சத்யன், ஆனந்தராஜ் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. ‘எனக்கு எதிரியே என் வாய்தான்’ என்கிற ஆர்.ஜே.பாலாஜி சிறிது புன்னகைக்க வைக்கிறார். ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ என்கிற பழைய கிளாசிக் காமெடியை நினைவுகூர வைப்பது போல் பெட்ரோமாக்ஸ் லைட்டை பார்க்கும் போதெல்லாம் ‘மேன்டிலை’ செந்தில் உடைப்பதை வேறு வழியின்றி நகைச்சுவை என்று நினைத்துக் கொள்ளலாம். சிறிது நேரம் வந்தாலும் ஆனந்தராஜ் ரசிக்க வைக்கிறார்.



முதல் பாதியில் விறுவிறுப்பாக நகர்கிற திரைப்படம், இரண்டாம் பாதியில் இடையூறாகத் துவங்கும் ‘டூயட்’ பாடலுடன் நொண்டியடிக்கிறது.

பொதுவாக விக்னேஷ் சிவனின் திரைப்படங்களில் ‘ப்ளாக் ஹியூமரின்’ தேசலான சாயல் இருக்கும். இதிலும் சில இடங்களில் தென்படுகிறது. தன் தந்தையான தம்பி ராமையா தற்கொலை செய்து கொண்டாரோ என்று சூர்யா பதறியழும் போது நடக்கும் திருப்பம் சிரிக்க வைக்கிறது. சிபிஐ அதிகாரிகளுக்கான நேர்காணலில் ‘நான் ஊழல்வாதிகளைப் பிடித்துச் சிறையில் தள்ளுவேன்’ என்று ஆவேசமாக சொல்பவரின் பெயர் ‘சசிகலா’. இரட்டை அர்த்த தொனி கொண்ட நகைச்சுவைகளும் இருக்கின்றன.

‘சொடக்கு மேல சொடக்குப் போடுது’, ‘நானா தானா’ ஆகிய பாடல்களுக்குப் பார்வையாளர்கள் அதிஉற்சாகம் கொள்ளும்படி ரகளையாக இசையமைத்திருக்கிறார் அனிருத். பரபரப்பான காட்சிகளுக்கேற்றபடி விறுவிறுப்பான பின்னணி இசையையும் தரத் தவறவில்லை.

இத்திரைப்படத்தின் முக்கியமான பங்களிப்புகளில் ஒன்றாக கலை இயக்குநரின் பணியைச் சொல்ல வேண்டும். எண்பதுகளில் நடக்கும் சம்பவங்கள் என்பதால் அந்தக் காலக்கட்டத்தின் சினிமா சுவரொட்டிகள், கட்அவுட்கள், பழைய மாநகரப் பேருந்துகள், கோல்ட் ஸ்பாட் குளிர்பானம், பியட், அம்பாசிடர் கார்கள். பஜாஜ் ஸ்கூட்டர் என்று பின்னணியின் நம்பகத்தன்மைக்காக அசாதாரணமான
உழைப்பைத் தந்திருக்கிறார்.

தினேஷ் கிருஷ்ணனின் காமிரா, ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் போன்ற நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு படத்திற்குப் பலமாக அமைந்திருக்கின்றன.

நீரஜ் பாண்டே இயக்கிய ஹிந்தி வடிவத்தோடு (special 26) தமிழ் வடிவத்தை ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. ஹிந்தி திரைப்படத்தில் நிகழும் ரெய்டுகள் நம்பகத்தன்மையுடன் அமைந்திருக்கும். பூனை-எலி விளையாட்டில் அமைந்த திரைக்கதை, அக்ஷய் குமார், அனுபம் கேர், மனோஜ் பாஜ்பாய் போன்ற அற்புதமான நடிகர்களின் பங்களிப்பு என்று பெரும்பாலான அம்சங்கள் நிறைவாக அமைந்திருக்கும். குறிப்பாக ஹிந்தியில் மிக இயல்பாக அமைந்த கிளைமாக்ஸ் காட்சி தமிழில் அதீதமாகிச் சிதைந்திருக்கிறது. தமிழ் வடிவத்தில் வணிக அம்சங்கள் தூக்கலாக இருக்கின்றன.

‘தானா சேர்ந்த கூட்டம்’ என்கிற தலைப்பு இத்திரைப்படத்திற்கு எப்படி பொருந்துகிறது என்பது அந்த ‘சிவனுக்கே’ வெளிச்சம்.

No comments:

Post a Comment

RTI documents cannot be marked ‘not evidence’: GIC

RTI documents cannot be marked ‘not evidence’: GIC  TIMES NEWS NETWORK 28.10.2024 Ahmedabad : The Gujarat Information Commission (GIC) has r...