Saturday, February 24, 2018

காது கொடுத்துக் கேளுங்கள்!

By வாதூலன் | Published on : 24th February 2018 01:35 AM |

செவித் திறன் குறைபாட்டால் நான் பயன்படுத்தி வரும் செவிக்கருவியில் சில நாட்களுக்கு முன்பு பழுது ஏற்பட்டது. அதைச் சரி செய்ய அக்கருவியை வாங்கிய மையத்துக்குச் சென்றிருந்தேன். கருவியில் பழுதைச் சரி செய்த பின்னர், என்னுடைய செவித் திறன் குறைபாட்டின் அளவைப் பரிசோதித்தார் ஓர் ஊழியர். அங்கேயே செவிக் கருவியை வாங்கியிருந்ததால் இந்த சேவைகள் எல்லாம் இலவசம். நன்றி தெரிவித்துவிட்டு வெளியே வருகையில், நான் குடியிருக்கும் அடுக்கு வீட்டில் மேல்தளத்தில் வசிக்கும் நண்பர் அந்த மையத்துக்குள் நுழைவதைப் பார்த்தேன். ஆச்சரியப்பட்டு, யாருக்கு என்ன பிரச்னை என்று விசாரித்தேன். அவருடைய பின்புறம் ஒதுங்கி நின்றிருந்த மகனின் தலையில் தட்டினார்!

'எனக்கில்லை, இவனுக்குதான்! அப்புறமா விவரமாகச் சொல்கிறேன்' என்று மையத்துக்குள் சென்றுவிட்டார்.

அந்த இளைஞனுக்கு காதில் பிரச்னையா என்ற கவலை எழுந்தது எனக்கு. ஓரிரண்டு நாள் கழித்துதான் முழு விவரம் தெரிய வந்தது. பெற்றோர் சொல்வதெல்லாம் அந்த இளைஞனின் காதில் விழுவதில்லையாம்! பல தருணங்களில் முக்கியமான விஷயம் கூட!

செவிக் கருவி மையத்தில் இருந்த நிபுணரிடம் அந்த இளைஞனைக் காண்பித்துச் சோதித்ததில், அவன் செவியில் கோளாறு ஏதுமில்லை என்று தெரிந்ததாம். பெற்றோருக்கு நிம்மதி.

ஆனால் செவிப் பரிசோதனைக்குப் பிறகு இளைஞனுக்கு அந்த மைய நிபுணர் அளித்த முக்கிய உபதேசம்-

'செல்லிடப்பேசியைக் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். அப்படியே பேசினாலும் கூட, காதிலிருந்து சற்றுத் தள்ளி வைத்துப் பேச வேண்டும்' என்று இளைஞனுக்கு மருத்துவ அறிவுரை வழங்கினார் செவி நிபுணர்.
அந்த இளைஞன் ஒரு நிதி முதலீட்டு நிறுவனத்தில் பணி புரிகிறான். செவித்திறன் முக்கியத் தேவை. வாடிக்கையாளர்களிடமிருந்து குவிகிற கேள்விக் கணைகளுக்குப் பதில் கூற செல்லிடப்பேசி ஒரு முக்கியத் துணை. எனவே, அவன் செவியில் குறையேதுமில்லை என்று தெரிந்து கொண்டதில் திருப்தி.

அப்படியானால் காது கேட்கவில்லை என்ற சந்தேகமும் பயமும் எங்கிருந்து வந்தது? யோசித்துப் பார்த்தால், விளக்கம் வெகு சாதாரணம். கவனக் குறைவு, கவனச் சிதறல்
.
எந்த விஷயத்தையுமே கேட்டு மனதில் பதித்துக் கொள்ளுவதற்குத் தேவைப்படும் அம்சம் - கவனம். சில நடுத்தர வயதினர் காலையில் அலுவலகத்துக்குக் கிளம்பும் வரை சின்னத் திரையில் மூழ்கியிருப்பார்கள். அதுவும் இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில், 'நாளும் ஒரு சேதி' வருகிறதே? வேறு சில இளைஞர்கள், பாட்டு, சினிமா சேனலில் லயித்து இருப்பார்கள். இவையெல்லாம் இல்லையன்றால், இருக்கவே இருக்கிறதே - செல்லிடப்பேசி சமூக வலைதளங்கள்! கணினித் துறையில் பணி புரிபவர்களுக்கோ அயல் நாட்டு அழைப்பு எந்த நிமிஷத்திலும் வரக்கூடும். எனவே, பொதுவாகக் காலை 'விஷக்கடி வேளையில்' முக்கியமான விஷயத்தைப் பேசுவதையும் தெரிவிப்பதையும் தவிர்க்கலாம்.

இரண்டாவது அம்சம் - அக்கறை. எங்கள் உறவினர் வீட்டில் இதனால் பெரிய சண்டையே மூண்டுவிட்டது. மனைவியின் கட்டளையைக் கேட்டு, அழகு சாதனப் பொருளும் இனிப்பும் கடையிலிருந்து வாங்கி வந்த மகன், தாயார் கேட்டிருந்த மருந்துகளை வாங்கி வரவில்லை. விளைவை நீங்களே ஊகித்துக் கொள்ளலாம். உற்றவளிடம் அக்கறை, பெற்றவள் விஷயத்தில் இருக்காது என்பது ஓரளவு உண்மைதான். ஆனாலும் சற்றுக் கூடுதல் அக்கறையுடன் செவி மடுத்திருந்தால், மனக்கசப்பு வந்திராது.
வீட்டுக்கு உள்ளேயே கவனச் சிதறல்களுக்குப் பல காரணங்கள் இருக்கும்போது, வெளியில் உள்ள நிலவரத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். வாகனங்களின் இரைச்சல், போக்குவரத்து இரைச்சல், ஆங்காங்கே கூட்ட இரைச்சல், ஊர்வலம் எனப் பல வகை காரணிகள்.
இவையெல்லாம் நமது கவனத்தைக் கலைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. அப்போது வேறு விஷயங்களில் நமது கவனம் செல்லாது.

வீட்டில் முதியவர்களோ, பள்ளிக்கூடம் போகும் சிறுவர் சிறுமிகளோ இருந்தால் செவிமடுத்துக் கேட்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. பள்ளிப் பருவக் குழந்தைகளின் பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால், அந்தச் சிறார்களின் பாடு கஷ்டம்தான். அலுவலகத்திலிருந்து களைத்து வரும் பெற்றோரிடம் பள்ளியில் நடந்த நிகழ்வை சுவாரஸ்யமாகச் சொல்லத் தொடங்கும்போது, அதைக் காது கொடுத்துக் கேட்காமலேயே, 'தொந்தரவு செய்யாதே, நான் களைப்பாக இருக்கிறேன்' என்றோ, 'நான் இப்போது ரொம்ப பிஸி' என்று கத்தரித்தாற்போல் பேசினால், இளம் பிஞ்சின் மனம் புண்படும். இது போன்ற காரணங்கள் சிறார்களின் கவன சக்தியை பாதிக்கிறது. இத்தகைய உணர்வு அதிகமானால் சிறார்கள் தவறான வடிகால் தேடுவர் என்று மன நல நிபுணர்கள் அறிவுரை கூறுகிறார்கள்.

முதுமையால் வீட்டைவிட்டு வெளியே செல்ல இயலாத முதியவர்களும் குழந்தை போலத்தான். அவர்களுடைய பழைய கால ஞாபகங்களையோ, சின்னஞ்சிறு உடல் உபாதைகளையோ காது கொடுத்துக் கேட்பது மிக அவசியம். மெத்தப் படித்த மருத்துவர்களே, வயதான நோயாளிகளின் சொந்த சுக துக்கங்களைக் கேட்டு விசாரிக்கிறார்களே!

ஐம்புலன்களில் செவியின் முக்கியத்துவத்தை மறுப்பதற்கில்லை. திருவள்ளுவர் 'கேள்வி' என்று ஓர் அதிகாரமே இயற்றியிருக்கிறாரே!
ஆங்கிலத்தில் வெறும் கேட்டல் திறனை 'ஹியரிங்' என்றும் கவனித்துக் கேட்பதை 'லிஸனிங்' என்று குறிப்பிடுவதுண்டு. யார் என்ன சொன்னாலும், அதை மேம்போக்காகக் கேட்காமல், செவி மடுத்து, உற்றுக் கேட்டால் பல பிரச்னைகள் அகலும். 'தெளிவுறவே அறிந்திடுதல்; தெளிவுதர மொழிந்திடுதல்' என்ற மகாகவியின் கூற்றை நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்வது உசிதம்.

No comments:

Post a Comment

Man held for ‘digital arrest’ scam

Man held for ‘digital arrest’ scam  Sindhu.Kannan@timesofindia.com 30.10.2024 Chennai : Two days after Prime Minister Narendra Modi cautione...