Saturday, February 24, 2018

ஜெயலலிதாவுக்குப் பிடித்த கறார் பேர்வழி இவர்தான்! #Jayalalithaa 
 
வி.எஸ்.சரவணன்



எதிலும் கறாராக இருப்பவர்களைக் கண்டாலே எனக்கு ரொம்பவும் பிடிக்கும். எல்லாவற்றிலும் அப்படி இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட விருப்பமும் ஓயா முயற்சியுங்கூட.

கறாராக இருப்பது எளிதான காரியமல்ல. அதற்கு நிறைய மன உறுதி வேண்டும். சில அடிப்படை இலட்சியக் கோட்பாடுகளை நமக்கு நாமே விதித்துக் கொண்டு, அவற்றின்படி நடக்கும் திடநம்பிக்கையும் இருக்க வேண்டும். அதற்காகப் பிறர் நம்மை ஏளனமாகப் பேசினாலும், பரிகாசம் செய்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாது நமது லட்சியத்தை விட்டுக்கொடுக்காது அதனைக் காப்பாற்ற நிற்கக் கூடிய துணிவும் தேவை.

பொதுவாக, ஒருவர் பணம் விஷயத்தில் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை வைத்தே அவரை எடை போட்டு விட முடியும். ஒருவர் பணம் கொடுப்பதிலும் பெற்றுக்கொள்வதிலும், இரண்டிலும் கறாராக இருந்தால் அப்படிப்பட்டவரை எதிலும் நம்பலாம். அவரை ''நல்லவர் நாணயமானவர்" என்று மதிக்கலாம்.

பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஒருவரின் நடத்தை சரியில்லை என்றால் பொதுவாக எல்லாவற்றிலுமே அவரது நடத்தை அப்படித்தான் இருக்கும் என்றும் கூறலாம்.

இந்த உண்மையை எனது சொந்த அனுபவத்திலேயே பலமுறை உணர்ந்திருக்கிறேன். என்றாலும், இங்கே குறிப்பிட இருப்பது என் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவம் அல்ல. 100 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் இருவருமே கறார் பேர் வழிகள்தாம்.

1887-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ம் நாள் பிற்பகலில் இங்கிலாந்தின் பிரபுக்களில் ஒருவரான வில்லியம் லார்ட் டிராக்ஸ் தனது இல்லத்தை விட்டுப் புறப்பட்டார். அவர் இருந்தது பிரைட்டன் என்னும் துறைமுக நகரத்தில். லார்ட் டிராக்ஸ் பெரிய கோடீஸ்வரர், கப்பல் ஓட்டுவதில் அதிக ஈடுபாடு உள்ளவரும், அதில் பெரும் புகழும் பெற்றவர். ஒரு வாடகை குதிரை வண்டியைக் கூப்பிட்டார். அதில் ஏறிக்கொண்டு ''மேற்கு கப்பல் துறைக்கு அழைத்துப்போ" என்று ஆணையிட்டார்.

கப்பல் துறையிலிறங்கிக்கொண்டு வாடகை குதிரை வண்டி ஓட்டுநரைக் காத்திருக்கும் படி கட்டளையிட்டார். "எனது புதிய கப்பலை முதன் முறையாக பரிசீலிக்க ஓட்டிச் செல்லப் போகிறேன். பிற்பகலிலேயே திரும்பி வர உத்தேசித்திருக்கிறேன். எப்படியும் மாலைக்குள் திரும்புவேன். நான் வரும் வரை இங்கேயே காத்திரு நான் திரும்பியதும் நீ தான் என்னை வீட்டுக்கு அழைத்துப்போக வேண்டும்" என்றார். அந்த வாடகை வண்டி ஓட்டுநரின் பெயர் மார்டின் ஹால்லோவே சம்மதம் தெரிவிக்கின்ற வகையில் தலையை அசைத்தார்.

அன்று பிற்பகல், மாலை பூராவும் மார்டின் அங்கேயே காத்திருந்தார். லார்ட் டிராக்ஸ் திரும்பவில்லை. வெகு நேரமான பின்பு இரவில் மார்டின் தன் வீட்டுக்குச் சென்றார்.

மறுநாள் அதிகாலையிலேயே மார்டின் மீண்டும் துறைமுக வாசலுக்குக் குதிரை வண்டியுடன் வந்து காத்திருந்தார். இப்படியே ஒரு நாள்; ஒரு வாரம்; ஒரு மாதம் கழிந்துவிட்டன. தொடர்ந்து மார்டின் காத்திருந்தார். அதுவே அவரது வாழ்க்கை முறையாகிவிட்டது. தினமும் காலையில் மார்டின் குதிரை வண்டியுடன் துறை முகத்திற்கு வருவார். இரவு வரை அங்கேயே காத்திருப்பார்.

வேறு யார் வண்டியை வாடகைக்கு அழைத்தாலும் ஏற்றிச் செல்ல மறுத்தார். லார்ட் டிராக்ஸின் மாளிகைக்கு மார்டின் போகவுமில்லை. அவர் எப்போது திரும்பி வருவார் என்று விசாரித்துத் தெரிந்துகொள்ளமுயலவும் இல்லை. தன்னுடைய விசித்திரமான நடத்தைக்கான விளக்கத்தை கூறவும் இல்லை. ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து மாலை வரை பேசாமல் அப்படியே குதிரை வண்டியில் உட்கார்ந்திருப்பார்.

இப்படியே 599 நாள்கள் உருண்டோடிவிட்டன. கடைசியில் 1889 ம் ஆண்டு, மே மாதம் 12-ம் தேதி, மார்டினுடைய பிடிவாதம் பலன் அளித்தது. லார்ட் டிராக்ஸின் கப்பல் துறைமுகத்துக்குத் திரும்பியது. அவரும் இறங்கி வந்தார். மார்டினைக் கண்டதும் லார்ட் டிராக்ஸ் இவ்வளவு தாமதமாகத் திரும்பியதற்கு விளக்கம் கூறினார். ''ஒரு நாள் பிற்பகலுக்குள் திரும்பி வரத்தான் உத்தேசித்திருந்தேன். ஆனால், கப்பலில் புறப்பட்டதும், கப்பலின் சீரான ஆடாத அசையாத போக்கு; குளிர்ந்த காற்று; இனிமையான சூழ்நிலை எல்லாமே என் மனதுக்கு ரொம்ப இன்பகரமாகப் பட்டன. அப்போதே, அந்தக் கணமே, கப்பலில் உலகச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளுவது என்று தீர்மானித்தேன். கிளம்பி விட்டேன்" என்றார்.

நிதானித்த ஆழ்ந்த தோரணையுடன் மார்டின் தனது சட்டைப்பையிலிருந்து மருள வைக்கக்கூடிய அளவிற்கு நீளமான ஒரு காகிதத்தை வெளியே இழுத்தார்.

'பிரபு அவர்களே... இதோ என்னுடைய பில் ஒவ்வொரு நாளுக்கான காத்திருக்கும் கட்டணத்தையும் (WAITING CHARGES) சரிவர கணக்குப் பார்த்து பட்டியல் போட்டு வைத்திருக்கிறேன். காவல்துறை விதிமுறைகளின்படி வாடகைக் கட்டணம், காத்திருப்பதற்கான கட்டணம் இரண்டையும் சேர்த்து பட்டியல் போட்டிருக்கிறேன்."

"மொத்தத் தொகை எவ்வளவு?" என்று கேட்டார் லார்ட் டிராக்ஸ். மார்டின் காகிதத்தை நீட்டினார். லார்ட் டிராக்ஸ் பில்லைப் பார்த்தார். ஒரு புருவத்தை உயர்த்தினார். மொத்தத் தொகை 989 பவுண்ட்ஸ், 15 ஷில்லிங்க்ஸ், 6 பென்ஸ் - அதாவது ஏறத்தாழ 5000 டாலர், இந்தியக் கணக்குப்படி ஏறத்தாழ 45,000 ரூபாய்! (இந்தத் தொடர் வெளியான காலத்தின் மதிப்பீட்டில்)

அத்தனை நாள்களாக அவருக்காகவே காத்திருந்த வேறு வாடிக்கைக்காரர்கள் எவரையும் வண்டியில் ஏற்றிச் செல்ல மறுத்து வந்தது குறித்து மார்டின் விளக்கம் கூறினார்.

''ரைட்டோ!" என்றார் லார்ட் டிராக்ஸ் மறுவார்த்தையின்றி, கண்ணை ஒரு முறைகூட இமைக்காமல், உடனே நின்ற இடத்திலேயே அத்தனை பெரிய தொகையைச் செலுத்திவிட்டார்.

குதிரைவண்டியில் ஏறிக்கொண்டார். ''வீட்டுக்கு மார்டின் என்று ஆணையிட்டார்.

லார்ட் டிராக்ஸின் மாளிகை வாசலில் குதிரை வண்டி போய் நின்றது. வண்டியை விட்டு இறங்கினார். மறுபடியும் மார்டின் அவருக்கு முன்னால் நிற்பதைக் கண்டார். மரியாதை காண்பிக்கும் வகையில் தனது தலையில் அணிந்திருந்த தொப்பியைக் கழற்றி மார்டின் அதனைக் கையில் பிடித்திருந்தார்.

"துறைமுகத்திலிருந்து உங்களை வீடு வரை அழைத்து வந்ததற்கு இரண்டு காசு (ஷில்லிங்) வாடகை நீங்கள் தர வேண்டும்" என்றார் மார்டின் கறாராக.

மறுபடியும் லார்ட் டிராக்ஸ் கட்டணத்தை செலுத்தினார். இம்முறை தெரிந்தும் தெரியாத நிழலைப் போல, இலேசான ஒரு புன்முறுவல் அவரது முகத்தில் ஒரே ஒரு கணம் தோன்றியது.

 - தாய் வார இதழில் ஜெயலலிதா எழுதிய தொடரின் ஒரு பகுதி. தகவல் உதவி: குறள் பித்தன்.

No comments:

Post a Comment

Man held for ‘digital arrest’ scam

Man held for ‘digital arrest’ scam  Sindhu.Kannan@timesofindia.com 30.10.2024 Chennai : Two days after Prime Minister Narendra Modi cautione...