Monday, July 2, 2018

சென்னையில் காற்று கூட காசுக்கு கிடைக்கும்

By DIN  |   Published on : 01st July 2018 06:36 PM 

இந்திய அரசு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தில்லி மக்கள் சுமார் 1 ஆண்டுக்குப் பிறகு 2 நாட்களுக்கு முன்னர்தான் சுத்தமான காற்றை சுவாசித்துள்ளனர் என்ற தகவல் அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், கடந்த 1 ஆண்டாக அவர்கள் சுவாசித்த காற்றின் விளைவு நிச்சயம் வரும் நாட்களில் வெளிவரும். 

இந்திய நகரங்களில் அதிகம் மாசு அடைந்த நகரங்களில் சென்னையும் முக்கிய இடம் வகிக்கிறது. வரும் நாட்களில் தில்லி மக்கள் சந்தித்த அந்த நிலையை சென்னை உள்ளிட்ட பிற முக்கிய நகரங்களில் வசிக்கும் மக்களும் சந்திக்கும் நிலைமை எவ்வளவு தொலைவில் உள்ளது என்று தெரியவில்லை. ஆனால், நாள்தோறும் உயரும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை, வாகனங்களின் எண்ணிக்கை நிச்சயம் அந்த இடத்தை அடையச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை. 

அதற்கு தயாராவதற்கு சுற்றுச்சூழல் மாசை தடுப்பது ஒரு வழி. அந்த நிலை வந்த பிறகு, அதனை எதிர்கொள்வதற்கான புதிய முறை கண்டுபிடிப்பது 2-ஆவது முறை.

அந்த 2-ஆவது முறை தற்போது சென்னைக்கு வந்துள்ளது. சர்வதேச அரங்கில் ஒரு சில நாட்களில் இந்த நிலை ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டாலும் சென்னைக்கு இது முதன்முறை.

அதாவது, சுத்தமான காற்றை காசு கொடுத்து பெறுவது. சென்னையில், சுத்தமான காற்றை கேன்களில் அடைத்து விற்கப்படும் வழக்கம் புதிதாக தொடங்கியுள்ளது. ஒரு கேன் தற்போதைய நிலையிலேயே 600 ரூபாய் வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது. 

காற்றை காசு கொடுத்து வாங்குவதா என்று இன்றைக்கு நாம் ஆச்சரியமாக கேட்கலாம். ஆனால், இதே ஆச்சரியத்துடன் தான் தண்ணீரை காசு கொடுத்து வாங்குவதாக என்று நாம் முன்பு கேட்டுள்ளோம். தற்போது, தண்ணீரை பாட்டில்களாகவும், கேன்களாகவும் சாதாரணமாக வாங்கி வருகிறோம். 

இதே நிலை தான் நாளை காற்றுக்கும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024