பொது பிரிவு மருத்துவ கவுன்சில் இன்று துவக்கம் : சிறப்பு பிரிவில், 40 பேருக்கு இடம் கிடைத்தது
பதிவு செய்த நாள்: ஜூலை 02,2018 00:42
சென்னை : எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்பில், சிறப்பு பிரிவினருக்கான ஒதுக்கீட்டில், 40 பேர் இடங்கள் பெற்றனர். பொது பிரிவினருக்கான கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.
தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 5,757 இடங்கள் உள்ளன. இதற்கான தரவரிசை பட்டியலில், 44 ஆயிரத்து, 332 பேர் தகுதி பெற்று உள்ளனர். மருத்துவ படிப்புக்கான முதற்கட்ட கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் அரசு பல் நோக்கு மருத்துவமனை யில், நேற்று துவங்கியது.இதில், சிறப்பு பிரிவினர் எனப்படும், விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் என, 101 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில், 63 பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்றனர்.இது குறித்து, மருத்துவ தேர்வுக்குழு செயலர், செல்வராஜன் கூறியதாவது:சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங்கில், எம்.பி.பி.எஸ்., படிப்பில், 38 பேர்; பி.டி.எஸ்., படிப்பில், இரண்டு பேர் என, 40 பேருக்கு, இடங்கள் ஒதுக்கப்பட்டன.மாற்றுத் திறனாளிகள் தரவரிசை பட்டியலில் இடம் பெறாதவர்களும், கவுன்சிலிங் வளாகத்திற்கு நேற்று வந்திருந்தனர். அவர்களில், ஏற்க தகுதி வாய்ந்தவர்களுக்கு, மாற்றுத் திறனாளிகள் பிரிவில் இடங்கள் ஒதுக்கப்பட்டன.சிறப்பு பிரிவினர் பிரிவில், எட்டு பேர் காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். பொது பிரிவினருக்கான கவுன்சிலிங், இன்று நடைபெறுகிறது. இதில், தரவரிசை பட்டியலில், 444வது இடம் வரை உள்ளோர் அழைக்கப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment