Monday, July 2, 2018

Pan Aadhaar merger time extended

'பான் - ஆதார்' இணைப்பு; 2019 மார்ச் வரை நீட்டிப்பு

மாற்றம் செய்த நாள்: ஜூலை 02,2018 00:36


புதுடில்லி : வருமான வரி நிரந்தர கணக்கு எண் எனப்படும், 'பான்' கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம், 2019, மார்ச், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வழங்கும் பல்வேறு சேவைகளுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்காக, இந்தாண்டு மார்ச், 31 வரை அவகாசம் தரப்பட்டிருந்தது. அந்த அவகாசத்தை நீட்டிக்கும்படி, இந்தாண்டு துவக்கத்தில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இறுதி உத்தரவு :

அந்த உத்தரவில், 'ஆதார் தொடர்பான வழக்குகளில், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை, ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.

ஆதார் தொடர்பான வழக்கில், இறுதி தீர்ப்பு அளிக்கப்படாத நிலையில், மத்திய அரசு வரித் துறையின் கொள்கை உருவாக்கும் பிரிவான, சி.பி.டி.டி., எனப்படும், மத்திய நேரடி வரிகள் வாரியம், பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசத்தை, 2019 மார்ச், 31 வரை நீட்டித்துள்ளது.

அவகாசம் :

ஐந்தாவது முறையாக, இந்த அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும், 33 கோடி பேருக்கு, பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில், 16.65 கோடி பான் கார்டுகள், மார்ச் வரை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன.

உடனடி பான் எண் திட்டம்! புதிதாக பான் கார்டு பெற விரும்பும் தனி நபர்களுக்கு, ஆதார் எண் அடிப்படையில், இணையம் வாயிலாக, உடனடியாக பான் எண் ஒதுக்கீடு செய்யும் திட்டத்தை, வருமான வரித்துறை துவக்கி உள்ளது. வருமான வரித்துறை, சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு விபரம்: ஆதார் எண் வைத்துள்ள, தகுதி உள்ள தனி நபர்களுக்கு, இணையம் வாயிலாக, உடனடியாக, 'இ - பான்' எண் ஒதுக்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், 'முதலில் வருவோருக்கு முன்னுரிமை' அடிப்படையில், குறுகிய காலத்துக்கு அமலில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024