Thursday, October 11, 2018

மாநில செய்திகள்

விழுப்புரம் அருகே சென்னை மருத்துவ கல்லூரி மாணவி சுட்டுக்கொலை துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரரும் தற்கொலை



விழுப்புரம் அருகே, சென்னை மருத்துவ கல்லூரி மாணவியை, அவரது காதலரான போலீஸ்காரர் சுட்டுக்கொன்றார். பின்னர் அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: அக்டோபர் 11, 2018 05:45 AM
செஞ்சி,

விழுப்புரம் அருகே உள்ள அன்னியூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி சேகர் (வயது 56).

இவருடைய மனைவி மாரியம்மாள். இவர்களது மகள்கள் மான்விழி (25), சரஸ்வதி(23). உடல்நலம் பாதிக்கப்பட்ட சேகர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். மாரியம்மாள் பெங்களூருவில் தங்கி, அங்குள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வருகிறார்.

மூத்த மகள் மான்விழி, என்ஜினீயரிங் படித்து முடித்து உள்ளார். இளைய மகள் சரஸ்வதி சென்னை கே.கே.நகரில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

சரஸ்வதிக்கும், ஈரோடு மாவட்டம் காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஸ்ரீரங்கன் என்பவரின் மகன் கார்த்திவேல் (30) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்து வந்தனர். கார்த்திவேல் சென்னையில் மிக முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு பிரிவில் (வி.ஐ.பி. செக்யூரிட்டி பிரிவு) போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இருவரும் சென்னையில் இருந்ததால், அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் சரஸ்வதிக்கும், அவருடன் படிக்கும் சக மாணவர் ஒருவருக்கும் நட்பு ஏற்பட்டதாகவும் இதனால் அவர் கார்த்திவேலுடன் பழகுவதை குறைத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் சரஸ்வதி தன்னை விட்டு பிரிந்து சென்று விடுவாரோ? என்ற சந்தேகம் கார்த்திவேலுக்கு ஏற்பட்டது.

இதுதொடர்பாக மனகசப்பு ஏற்பட்டதால் கடந்த சில மாதங்களாக இருவரும் சரிவர பேசிக்கொள்வதில்லை.

இந்த நிலையில், அக்டோபர் 10-ந்தேதி (அதாவது நேற்று) தனது பிறந்தநாள் என்பதால், அதை கொண்டாடுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சரஸ்வதி சொந்த ஊருக்கு சென்றார். மேலும் அவர் கார்த்திவேலை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, தனது பிறந்தநாளுக்கு அன்னியூருக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

அதை ஏற்று கார்த்திவேல் தனது காதலிக்கு புதிய ஆடை மற்றும் ‘கேக்’ ஆகியவற்றை வாங்கிக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு அன்னியூருக்கு சென்றார். காதலரை அன்புடன் வரவேற்ற சரஸ்வதி, அவர் வாங்கி வந்த புத்தாடையை மகிழ்ச்சியுடன் அணிந்து கொண்டார்.

நள்ளிரவு 12 மணிக்கு கார்த்திவேல், சேகர், மான்விழி ஆகியோருடன் சரஸ்வதி ‘கேக்’ வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

பின்னர் கார்த்திவேலும், சரஸ்வதியும் ஒரு அறையில் தனியாக பேசிக் கொண்டிருந்தனர். சேகர் தனது மூத்த மகள் மான்விழியோடு மற்றொரு அறையில் டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டு இருந்தார். நள்ளிரவு 1 மணி அளவில் காதலர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே சேகர் இருவரையும் சமாதானம் செய்துவைத்தார்.

இதையடுத்து நள்ளிரவு 2 மணி அளவில் சரஸ்வதி, கார்த்திவேல் ஆகியோர் இருந்த அறையில் இருந்து அடுத்தடுத்து 3 முறை துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சேகர் தனது மூத்த மகளுடன் அந்த அறைக்கு சென்று பார்த்தபோது, சரஸ்வதி மார்பில் 2 குண்டுகள் பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவருக்கு அருகில் கார்த்திவேல், நெற்றிப்பொட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

இதைபார்த்து சேகர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். பின்னர் இதுபற்றி அவர் கஞ்சனூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் அந்த வீட்டின் முன்பு கிராம மக்கள் குவிந்தனர்.

தகவல் அறிந்ததும் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் கஞ்சனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சரஸ்வதி, கார்த்திவேல் ஆகியோரின் உடல்களை பார்வையிட்டனர். பின்னர் வீட்டில் இருந்த சேகர், அவரது மூத்த மகள் மான்விழி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்கள்.

போலீஸ் விசாரணையில் கிடைத்த தகவல்கள் விவரம் வருமாறு:-

கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்த சரஸ்வதி மருத்துவம் படிக்க நுழைவுத்தேர்வு எழுதினார். ஆனால் அதில் அவரால் வெற்றிபெற முடியவில்லை.

இதையடுத்து அவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படித்து வந்தார். இதனிடையே நடைபெற்ற மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை சரஸ்வதி மீண்டும் எழுதினார். அந்த தேர்வில் அவர் வெற்றி பெற்றதால், நர்சிங் படிப்பை பாதியில் விட்டு விட்டு கடந்த 2016-ம் ஆண்டு சென்னை கே.கே.நகரில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் சேர்ந்து எம்.பி.பி.எஸ். படித்து வந்தார்.

முகநூல் பழக்கம் மூலம் காதலரான கார்த்திவேல், தனது காதலி சரஸ்வதியின் படிப்புக்கு அவ்வப்போது செலவு செய்து வந்தார்.

இவர்களது காதலுக்கு இருவரது பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சரஸ்வதியின் படிப்பு முடிந்தவுடன் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று பேசி முடிவு செய்திருந்தனர்.

கடந்த சில மாதங்களாக சரஸ்வதி தன்னை ஒதுக்குவதாக கருதிய கார்த்திவேல், தன்னை விட்டு அவர் பிரிந்து சென்று விடுவாரோ? என்று எண்ணினார். இதனால் சரஸ்வதி மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுபற்றி அவர் சரஸ்வதியிடம் கேட்டபோதுதான் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சில நாட்கள் பேசாமல் இருந்து உள்ளனர்.

சரஸ்வதியின் பிறந்தநாளுக்கு வந்த இடத்தில், இந்த விவகாரம் அவர்களுக்கு இடையே மீண்டும் வெடித்தது. இதனால் அவர்களுக்குள் நள்ளிரவில் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கார்த்திவேல், தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரஸ்வதியை சுட்டுக் கொலை செய்து விட்டு, தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீஸ் விசாரணையில் மேற்கண்ட விவரங்கள் வெளியாயின.

இதனிடையே மருத்துவ கல்லூரி மாணவி சரஸ்வதி, போலீஸ்காரர் கார்த்திவேல் ஆகியோரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மாணவி சரஸ்வதியின் உடலை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதனர்.

அப்போது மாணவியின் தந்தை சேகர், கண்ணீர் மல்க கூறியதாவது:-

எனது மகள் சரஸ்வதிக்கும், சென்னையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்த கார்த்திவேலுக்கும் பழக்கம் ஏற்பட்டது. சரஸ்வதியின் படிப்புக்காக அவர் சிறு, சிறு உதவி செய்து வந்தார். சரஸ்வதியை அங்குள்ள ஒரு விடுதியில் சேர்ப்பதற்கும் பாதுகாவலராக கார்த்திவேல் கையெழுத்து போட்டு உள்ளார். இருவரும் மனதார காதலிப்பதை அறிந்த நாங்கள் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கார்த்திவேல், எங்களிடம் வந்து சரஸ்வதியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டார். அதற்கு சரஸ்வதியின் படிப்பு முடிந்ததும் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக சம்மதம் தெரிவித்தோம்.

அதன்பிறகு கார்த்திவேல் அவரது சொந்த ஊருக்கு செல்லும் சமயங்களில் எங்கள் வீட்டிற்கு வந்து செல்வார். அதுபோல் பண்டிகை காலங்களிலும் எங்கள் வீட்டிற்கு வந்து எங்களுடன் சந்தோஷமாக பண்டிகையை கொண்டாடி விட்டு செல்வார்.

கடந்த சில மாதங்களாக ஏதோ பிரச்சினை காரணமாக இருவரும் போனில் பேசாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சரஸ்வதியின் பிறந்த நாள் விழாவை வீட்டில் சிறப்பாக கொண்டாடினோம். அப்போது எங்கள் வீட்டிற்கு வந்த கார்த்திவேலிடம், “எதற்காக இங்கு வந்தாய்? மீண்டும் என்னுடைய மகளிடம் பிரச்சினை செய்யாதே” என்று கூறினேன். அதற்கு அவர், “பிரச்சினை செய்ய வரவில்லை, சரஸ்வதியுடன் பிறந்த நாளை கொண்டாடத்தான் வந்தேன்” என்றார்.

அதன் பிறகு பிறந்த நாளை கொண்டாடி விட்டு சரஸ்வதியும், கார்த்திவேலும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் இருந்த அறையில் இருந்து திடீரென்று துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது.

இந்த சத்தத்தை கேட்டு பதறியடித்துக்கொண்டு நானும், எனது மூத்த மகளும் அந்த அறைக்கு சென்றோம். அங்கு சரஸ்வதியும், கார்த்திவேலும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோனோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024